தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ‘வார்தா’ வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறியது மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான 'வார்தா' வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறியது மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான 'வார்தா' புயல் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறியது. இதனால் கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 'வார்தா'புயல் பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் அதிக மழை பெறும். இந்த பருவமழை தான் தமிழ்நாட்டின் குடிநீர் ஆதாரமாய் விளங்குகிறது. வடகிழக்கு பருவமழை இதுவரை சரியாக பெய்யவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஓமன் நாட்டின் பெயரான 'நாடா' என்று பெயரிடப்பட்டது. இந்த 'நாடா' புயலால் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 'நாடா'புயல் ஏமாற்றிவிட்டு சென்றது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கடந்த 8-ந் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு பாகிஸ்தான் நாட்டின் பெயரான 'வார்தா' என பெயரிடப்பட்டது. இந்த புயலால் தமிழகத்தை விட ஆந்திராவே அதிக மழை பெறும் என்ற பொழுதிலும், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஸ்டெல்லா கூறியதாவது:- நாளை கரையை கடக்கிறது நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான 'வார்தா' புயலானது வலுப்பெற்று தீவிர புயலாக மாறி நேற்று இரவு 9.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 650 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மேலும் வலுடைந்து நாளை மாலை சென்னைக்கும், ஆந்திர மாநில ஓங்கோலுக்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை மாலை வட தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. வட தமிழகத்தில் மழை வாய்ப்பு குறிப்பாக, ஆந்திர கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொருத்தமட்டில் தென் தமிழகத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இந்த 'வார்தா' புயலானது ஆந்திர தென் கடலோர மாவட்டங்களில் கரையை கடக்கும் என்பதால் அங்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கணிப்புகள் 'வார்தா' புயல் பற்றி மற்ற வானிலை ஆய்வு மையங்கள் கூறியிருப்பதாவது:- * 'வார்தா'புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என்றும், இதனால் சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும் 'பி.பி.சி.' வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. * சென்னையில் திங்கட்கிழமை இரவு வேளையில், 74 முதல் 118 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று 'அக்கூ' வானிலை மையம் தெரிவித்துள்ளது. * 'வார்தா' புயலால் சென்னையில் மழை பெய்ய 60 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக 'யாகு' வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. * 'வெதர் போர்காஸ்ட்.காம்' என்ற இணையதளத்தில், 'வார்தா'புயலால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமையில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.Comments