நடிகர்-எழுத்தாளர் சோ ராமசாமி காலமானார்.

நடிகர்-எழுத்தாளர் சோ ராமசாமி காலமானார். | கவர்னர், முதல்-அமைச்சர் அஞ்சலி 'சோ' ராமசாமி எம்.ஜி.ஆருடன் 'சோ' ராமசாமி. சோ ராமசாமியின் உடலுக்கு சசிகலா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் 'சோ' ராமசாமி. நடிகர் ரஜினிகாந்த், எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க.வின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்திய காட்சி. சென்னை, டிச.8- நடிகரும், எழுத்தாளருமான சோ ராமசாமி சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நடிகர்-நடிகைகள் அஞ்சலி செலுத்தினார்கள். சோ ராமசாமி நடிகர், எழுத்தாளர், வக்கீல் என்று பன்முக திறன் கொண்டவர் சோ ராமசாமி. 82 வயதான இவருக்கு சமீபகாலமாக மூச்சு திணறலும் நுரையீரல் பாதிப்பும் இருந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார். சில வாரங்களுக்கு முன்பு உடல் நிலை மோசம் அடைந்ததால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மாரடைப்பால் மரணம் நேற்று முன்தினம் இரவு சோவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை கவலைக்கிடமானது. உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை 4 மணிக்கு மரணம் அடைந்தார். ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே சோ உயிர் பிரிந்தது திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவருக்கு சவுந்தரா என்ற மனைவியும் ஸ்ரீராம் என்ற மகனும், சிந்துஜா என்ற மகளும் உள்ளனர். முதல்-அமைச்சர் மரணம் அடைந்த சோ உடல் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி சார்பில் தமிழக அரசு முதன்மை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கவர்னர் வித்யாசாகர் ராவ், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள். மத்திய மந்திரி மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:- மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் எம்.பி., பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், எஸ்.ஆர்.விஜயகுமார், ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ.; கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, எச்.வசந்தகுமார், விஜயதரணி, முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன்; பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மூத்த துணை தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், கோவை தங்கம்; கம்யூனிஸ்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநில துணைத்தலைவர் மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினமலர் ஆர்.ஆர்.கோபால்ஜி; மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், டாக்டர் ஜமுனா, செ.கு.தமிழரசன். நடிகர்கள் சிவகுமார், சூர்யா, விஷால், கார்த்தி, நாசர், பொன்வண்ணன், விஜயகுமார், பாக்யராஜ், டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர், விவேக், பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், நிழல்க ள்ரவி, செந்தில், டைரக்டர்கள் சி.வி.ராஜேந்திரன், விக்ரமன், முக்தா சீனிவாசன், இசையமைப்பாளர் கங்கை அமரன், தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, செயலாளர் டி.சிவா, தமிழ்நாடு தேர்வாணையம் குழு உறுப்பினர் மு.ராஜாராம், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ஜெ. ராதா கிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். உடல்தகனம் சோ உடல் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பெசன்ட்நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மரணம் அடைந்த சோ, சென்னையில் 1934-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி ஸ்ரீநிவாசன்-ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். மயிலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப்பள்ளியிலும், லயோலா மற்றும் விவேகானந்தா கல்லூரிகளிலும் கல்வி பயின்றார். 1953-ம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தார். அதன்பிறகு 1957 முதல் 1962 வரை சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். சோவின் சொந்த பெயர் ராமசாமி. தேன்மொழியாள் என்ற நாடகத்தில் சோ என்ற பெயரில் நடித்ததால் அதுவே அவரது பெயராக மாறிப்போனது. 1957-ல் நாடகங்களுக்கு கதை எழுதினார். 1970-ம் ஆண்டு துக்ளக் என்ற வார இதழையும் தொடங்கினார். 14 படங்களுக்கு கதை எழுதி உள்ளார். 200 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நகைச்சுவை நடிகராக அறிமுகமான 'பார்மகளே பார்' படம் 1963-ல் வெளிவந்தது. முகமது பின் துக்ளக் 'முகமது பின் துக்ளக்' என்ற அரசியல் நாடகத்தில் நடித்து பின்னர் அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து திரைப்படமாக இயக்கி நடித்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த் ஆகியோருடன் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து உள்ளார். ஜெயலலிதாவுடன் இணைந்து 19 படங்களில் நடித்து இருக்கிறார். சோவும் மறைந்த நகைச்சுவை நடிகை மனோரமாவும் 20 படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி. நாகேஷ், மனோரமா, சச்சு ஆகியோர் கூட்டணியில் சோ நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. குறிப்பாக அவரது அரசியல் நய்யாண்டி வசனங்களில் ஆரவாரம் செய்தார்கள். முக்கிய படங்கள் அடிமைப்பெண், ரிக்‌ஷாக்காரன், ஒளிவிளக்கு, கணவன், நிறைகுடம், மாட்டுக்கார வேலன், எங்கள் தங்கம், பொம்மலாட்டம், டெல்லி மாப்பிள்ளை, தேரோட்டம், தங்கப்பதக்கம், என் அண்ணன், குமரிக்கோட்டம், புகுந்த வீடு, நீரும் நெருப்பும், விளையாட்டு பிள்ளை, கண்ணன் என் காதலன், அவன் ஒரு சரித்திரம், அவன்தான் மனிதன், தவப்புதல்வன், லட்சுமி கல்யாணம், கவுரவம், வந்தாளே மகராசி, கலாட்டா கல்யாணம், ஆகியவை சோ நடித்த முக்கிய படங்கள். ரஜினிகாந்த் மீதான நட்பு காரணமாக அவருடன் ஆறிலிருந்து அறுபதுவரை, குரு சிஷ்யன், அடுத்த வாரிசு , மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். உண்மையே உன் விலை என்ன, மிஸ்டர் சம்பத், யாருக்கும் வெட்கம் இல்லை, சம்போ சிவ சம்போ ஆகிய படங்களை டைரக்டும் செய்துள்ளார். அரசியலில் ராஜகுரு மரணம் அடைந்த சோ அரசியல் கட்சி தலைவர்களின் ராஜகுருவாக வலம் வந்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மூப்பனார் ஆகியோரின் நெருங்கிய நண்பராக இருந்தார். தி.மு.க தலைவர் கருணாநிதி, ரஜினிகாந்த், விஜயகாந்த் மற்றும் பா.ஜனதா தலைவர்களுடனும் நட்பு கொண்டு இருந்தார். அரசியல் சதுரங்க காய்களை நகர்த்துவதில் சாமர்த்தியசாலி. 1996 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார். அப்போது அ.தி.மு.க ஆட்சி மீது அதிருப்தி அலை வீசியது. ஆனால் காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தது. இதை எதிர்த்து மூப்பனார் காங்கிரசை உடைத்து த.மா.காவை உருவாக்கி தி.மு.கவுடன் கூட்டு சேர்ந்தார். இதற்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார். இந்த கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர், சோ. அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபட வேண்டும் என்று அடிக்கடி அழைப்பும் விடுத்து வந்தார். 1999 முதல் 2005 வரை டெல்லி மேல் சபை எம்.பி.யாகவும் பதவி வகித்தார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
Comments