ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்பு மார்ச்சுக்கு பின்னரும் நீட்டிக்கப்படலாம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச அழைப்பு மார்ச்சுக்கு பின்னரும் நீட்டிக்கப்படலாம் | அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அறிவிக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோவின் இலவசமாக பேசும் வசதி மேலும் நீட்டிக்கப்படும் என தெரிகிறது. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் ஜியோ என்ற பெயரில் இலவச செல்போன் ேசவையை கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கி வருகிறது. இதன்படி ஜியோ சிம்மை பயன்படுத்துவோர் அழைப்பு, இணையதளம், வீடியோ ஆகியவற்றை இலவசமாக பெற்று வருகின்றனர். தற்போது இந்த வசதியை மார்ச் மாதம் வரை நீட்டித்து ஜியோ தகவல் தொடர்பு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தொலைத் தொடர்பு துறையில் முன்னணியில் உள்ள மேலும் 3 நிறுவனங்கள் ஜியோவுக்கு போட்டியாக இலவச சேவையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்புத்துறை நிபுணரான எச்எஸ்பிசியை சேர்ந்த ராஜிவ் சர்மா கூறுகையில், `'முன்னணி நிறுவனங்களின் கடும்போட்டியை அடுத்து, ஜியோ நிறுவனம் மார்ச் மாதத்திற்கு பிறகும் சில மாதங்கள் தனது இலவச சேவையை நீடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.'' என்று தெரிவித்தார். சமீபத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள இலவச வாய்ஸ் கால் மற்றும் 4ஜி டேட்டா சேவையை இலவசமாக வழங்கியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதேபோல் ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களும் இலவச பேசும் வசதி உள்ளிட்ட செல்போன் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனமும் இலவச சேவைகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் போட்டிகளை சமாளிக்க ஜியோ மேலும் சில மாதங்கள் இலவச அழைப்புகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.Comments