பண மதிப்பு நீக்கம்: ஓர் உலக பார்வை

பண மதிப்பு நீக்கம்: ஓர் உலக பார்வை | 8ம் தேதி அறிவிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டு வகையிலும் கருத்துகள் உருவாகியுள்ளன. ஆனால் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் யாவரும், மக்கள் பால் வாங்கவும், பயணத்துக்கும், மருந்து வாங்கவும் பணம் கிடைக்காமல் அவதிப்படுவதைப் பார்த்து வருந்தவே செய்கின்றனர். கடந்த 22 நாட்களாக நிலவிவரும் பணத் தட்டுப்பாட்டால் மக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட நேரத்துக்கு காத்து கிடக்கின்றனர். இதன் காரணமாக பல்வேறு வகையிலும் 60 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்று செய்திகள் வருகின்றன. தினக் கூலி, வாரச் சம்பளம் வாங்கு பவர்களும், சிறு விற்பனையாளர்கள், சிறு தொழில் நிறுவனங்கள் வரை செயற்கையான வேலை முடக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பல ஆயிரம் கோடி இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தொழில்துறை அமைப்புகளே கருத்து கூறுகின்றன. இந்த நிலையில் இன்றிலிருந்து இன்னும் பத்து நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்களுக்கும் சம்பள பணத்துக்காக குவிய உள்ளனர். வங்கி மூலமான பண விநியோகம் சீராக உள்ளது என்று அரசு குறிப்பிட்டாலும் நடைமுறையில் நிலைமை அப்படி இல்லை என்பதே உண்மை. ஆனால் இவ்வளவு சிரமங்களுக்கு இடையில் இங்கொன்றும் அங்கொன்றுமான சம்பவங்கள் தவிர இந்தியா முழுவதும் மக்கள் அமைதியான முறையில் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொண்டே உள்ளனர். ஆனால் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் சில ஓட்டைகளை பயன்படுத்தி இடைத்தரகர்கள் உருவாகி அரசின் நடவடிக்கையையே கேள்விக்குள்ளாக்குவதும் நடந்து வருகிறது. இந்தநிலையில், உலக அளவில் இது போல மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை பார்த்துவிடுவோம். துரதிஷ்டவசமாக எந்த நாடுகளிலும் இது போன்ற நடவடிக்கைகள் வெற்றிபெறவில்லை என்பதே வரலாறாக உள்ளது. எனினும் இந்தியாவின் முயற்சிக்கு முன் உள்ள சில உதாரணங்கள் இவை கானா 1982-ம் ஆண்டு 50 சிடி (cedi) கரன்ஸி நோட்டு பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது. வரி ஏய்ப்பை குறைக்கவும், ஊழலை கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை சீராக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது அந்த நாட்டு அரசு. ஆனால் விளைவு, வேறு விதமாக அமைந்தது. மக்கள் வங்கி அமைப்பின் மீது நம்பிக்கை இழந்தனர். உள்நாட்டு கலவரம் உருவானது. வெளிநாட்டு பணமாகவும், சொத்துகளாகவும் மக்கள் வாங்கி குவித்தனர். திட்டம் தோல்வியடைந்தது. நைஜீரியா 1984-ம் ஆண்டு நைஜீரியாவை ஆண்ட முகம்மது புஹாரி ஆட்சியே கவிழும் அளவுக்கு பண மதிப்பு நீக்க நடவடிக்கை அமைந்தது. புதிய நோட்டுகளை, புதிய வண்ணத்தில் அச்சடித்து வெளியிட்டார். பழைய நோட்டுகளை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொள்ளவில்லையெனில் செல்லாது என அறிவித்தார். ஆனால் இந்த நடவடிக்கை நாட்டை கடனில் தள்ளியது. பொருளாதார மந்த நிலையை உருவாக்கியது. அரசு எதிர்பார்த்த இலக்கு தோல்வியில் முடிந்தது. மியான்மர் 1987-ம் ஆண்டு, நாட்டின் கள்ள சந்தையை கட்டுப்படுத்துவதற்காக 80 சதவீத பணத்தை செல்லாது என அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மிகப் பெரிய மாணவர் போராட்டம் வெடித்தது. உள்நாட்டு கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். சோவியத் யூனியன் 1991-ம் ஆண்டு முன்னாள் சோவியத் யூனியனில் மிகைல் கோர்ப்பசேவ் ஆட்சியின்போது 50 மற்றும் 100 ரூபிள் நோட்டுகளை திரும்பப் பெறப்பட்டன. மொத்த பண புழக்கத்தில் இது மூன்று பாகமாகும். கறுப்பு பணத்தை ஒழிக் கவும், பணத்தின் மதிப்பை அதிகரிக் கவும் இந்த நடவடிக்கையை சோவியத் அரசு எடுத்தது. எட்டு மாதங்களுக்கு மட்டுமே கோர்ப்பசேவால் கட்டுப்படுத்த முடிந்தது. ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு பழைய நிலைமைக்கே வந்தது. காங்கோ 1993-ம் ஆண்டில் காங்கோவை ஆண்ட மொபுடு செசே செகோ அந்த நாட்டு பணத்தை திரும்ப பெறும் நடவடிக் கைகளை அடுத்தடுத்து மேற்கொண் டார். இதை அந்த நாட்டு மக்களை மிகப் பெரிய போராட்டத்துக்கு தள்ளியது. மிகப் பெரிய அளவிலான வேலையிழப் பும் அதனால் பொருளாதார சிக்களும் உருவானது. இதனால் நாட்டில் மிகப்பெரிய கலவரங்கள் மூண்டன. ஜிம்பாப்வே ஆப்பிரிக்க நாடுகளில் மிக மோசமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடு ஜிம்பாப்வே. அந்த நாட்டின் அதிபராக இருந்த ராபர்ட் முகாபே ஒரு லட்சம் கோடி டாலர் மதிப்பு கொண்ட பணத்தை வெளியிட்டார். இந்த நடவடிக்கை நகைப்புக்குரியதாக மாறியது. இந்தியாவில் இதற்கு முன்பு இரண்டு முறை இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. தற்போது பிரதமர் மோடி 50 நாட்களில் எல்லாம் சரியாகி விடும் என்று கூறியிருக்கிறார். மக்கள் அந்த நாட்களுக்காக காத்திருக்கிறார் கள். ஆனால் அதற்கு முன்னரோ, பிறகோ என்ன நடக்கும் என்பதும் யாராலும் கணிக்க முடியாததாகவே இருக்கிறது.Comments