கருப்பு பணம் மூலம் அதிக வரி வருவாய் கிடைப்பதால் நேரடி, மறைமுக வரி விகிதம் குறைய வாய்ப்பு அருண் ஜெட்லி தகவல்

கருப்பு பணம் மூலம் அதிக வரி வருவாய் கிடைப்பதால் நேரடி, மறைமுக வரி விகிதம் குறைய வாய்ப்பு அருண் ஜெட்லி தகவல் | கருப்பு பணம், வங்கிக்கு வருவதன் மூலமும், மின்னணு பண பரிமாற்றத்தாலும் அதிக வரி வருவாய் கிடைக்கும் என்பதால், நேரடி, மறைமுக வரி விகிதம் குறைய வாய்ப்பு இருப்பதாக அருண் ஜெட்லி கூறினார். குறைவான ரொக்க பயன்பாடு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் எழுந்துள்ள சூழ்நிலை குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- ரொக்க பணத்தை அதிகமாக கையாள்வதுதான் ஊழலுக்கு வழிவகுக்கிறது. எனவே, பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவை குறைவான ரொக்க பயன்பாடு கொண்ட நாடாக மாற்றுவதற்காகவே ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இனிமேல், காகித பணம் இருக்கும். ஆனால் அதைவிட அதிகமாக மின்னணு பண பரிமாற்றம் நடக்கும். வரி குறையும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, அந்த ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை கணக்கில் காட்டப்படாத அந்த பணம், இதன்மூலம் கணக்கில் கொண்டுவரப்படும். அந்த பணத்துக்கு வரி வசூலிக்கப்படும். இதனால் அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட மின்னணு பண பரிமாற்றம் அதிக அளவில் நடைபெறும்போது, எல்லாமே வரி வரம்புக்குள் வந்து விடும். இதன்மூலமும், இப்போது கிடைப்பதை விட அதிக வரி வருவாய் கிடைக்கும். எனவே, எதிர்காலத்தில் நேரடி, மறைமுக வரி விகிதங்களை நியாயமான அளவுக்கு மத்திய அரசு குறைக்க வாய்ப்புள்ளது. சிரமம் குறையும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சீர்திருத்தங்களும், ரொக்க பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் ஊழலின் அளவை கணிசமாக குறைத்து விடும். இதனால் வரி ஏய்ப்பும் குறைந்து விடும். ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு மக்களிடையே பண தட்டுப்பாடு நிலவுவதை நாங்கள் அறிவோம். அதற்காக ரிசர்வ் வங்கி ஒவ்வொரு நாளும் ஏராளமான பணத்தை வங்கிகளுக்கு அனுப்பி வருகிறது. இன்னும் 3 வாரங்களில், கணிசமான பணம் வங்கிகளுக்கு செல்லப் போகிறது. இதன்மூலம், ஏ.டி.எம்.களிலும் புதிய ரூபாய் நோட்டுகள் கணிசமாக கிடைத்து, பணப்புழக்கம் அதிகரிக்கும்போது, மக்களின் சிரமம் படிப்படியாக குறையும். கடுமையான விலை கொடுக்க வேண்டும் வங்கியிலும், வெளியிலும் உள்ள சில சுயநல நபர்கள், இந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தி, சட்டவிரோதமாக புதிய ரூபாய் நோட்டுகளை குவித்து வைத்திருப்பது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இது, சட்டத்தை மீறிய செயல் மட்டுமின்றி, பொருளாதாரத்தை நாசமாக்கும் செயல். ஆகவே, அனைத்து விசாரணை அமைப்புகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள், அதற்கு கடுமையான விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறேன். காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, ஊழலுக்கு எதிராகவோ, கருப்பு பணத்துக்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் மற்றும் ஹெலிகாப்டர் ஊழல் என அதன் ஆட்சிக்காலத்தில் ஊழல்கள் உச்சத்தில் இருந்தன. இப்போதும் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்படும் ஊழல்கள், காங்கிரஸ் ஆட்சியில் நடந்தவைதான். எனவே, அக்கட்சி, கருப்பு பணத்துக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கையை எதிர்ப்பதில் ஆச்சரியம் இல்லை. விவாதிக்க தயார் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராகவே உள்ளது. ஆகவே, காங்கிரசும், மற்ற எதிர்க்கட்சிகளும் கோஷம் எழுப்புவதை கைவிட்டு, இந்த திட்டத்தின் நல்ல பலன்களை பார்க்க வேண்டும். அவர்களின் உண்மையான நோக்கம் என்ன? அவர்களின் பிரசாரம், எங்கே இருந்து தூண்டப்படுகிறது என்பதெல்லாம் எனக்கு புரியவில்லை. நான் தேசிய கண்ணோட்டத்துடன் எதிர்க்கட்சிகளை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். முட்டுக்கட்டை போடுவதை விட்டுவிட்டு, இந்த திட்டத்தில் நீங்களும் பங்கேற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
Comments