சினிமா திரையிடுவதற்கு முன் திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

சினிமா திரையிடுவதற்கு முன் திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு | திரையரங்குகளில் சினிமா திரையிடுவதற்கு முன் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க உத்தரவிட வேண்டும் என ஷியாம் நாராயண் சவுக்சி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அரசு விழாக்கள் மற்றும் அரசியலமைப்பு பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் தேசிய கீதம் பாடுதல் அல்லது ஒலிபரப்புவதற்கான சரியான நெறிமுறைகளை வகுக்குமாறும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். குடிமகனின் கடமை இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதவா ராய் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாட்டின் தேசியக்கொடி மற்றும் தேசிய கீதத்துக்கு மரியாதை அளிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என நீதிபதிகள் அறிவுறுத்தினர். பின்னர் தேசிய கீதம் தொடர்பாக அவர்கள் சில உத்தரவுகள் மற்றும் நெறிமுறைகளை பிறப்பித்தனர். அதன் விவரம் வருமாறு:- எழுந்து நின்று மரியாதை இந்தியா நமது நாடு என்றும், நமது தாய்நாடு என்றும் மக்கள் கண்டிப்பாக உணர வேண்டும். மக்கள் தாங்கள் ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்பதை உணர்வதற்கான நேரம் வந்துவிட்டது. தேசிய கீதத்துக்கான நெறிமுறையின் வேர் என்பது தேசிய அடையாளம், ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சாசனம் மீதான தேசப்பற்று ஆகும். நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் சினிமா திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை ஒலிபரப்ப வேண்டும். அப்போது திரையில் தேசியக்கொடியை ஒளிபரப்ப வேண்டும். இவ்வாறு தேசிய கீதம் ஒலிபரப்பாகும் போது திரையரங்கில் இருக்கும் மக்கள் அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும். வணிக ஆதாயம் கூடாது தேசிய கீதத்தை விரும்பத்தகாத பொருட்கள் மீது அச்சிடவோ, காட்சிப்படுத்தவோ கூடாது. மேலும் தேசிய கீதத்தை ஒலிபரப்புவதில் வணிக ஆதாயமோ, நாடகத்தனமோ கூடாது. பல்சுவை நிகழ்ச்சிகளின் போது தேசிய கீதம் ஒலிபரப்பக்கூடாது. அதைப்போல தேசிய கீதத்தின் சுருங்கிய வடிவத்தை எங்கேயும் ஒலிபரப்பக்கூடாது. ஒரு வாரத்துக்குள் அமல் இந்த உத்தரவை எலக்ட்ரானிக் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் கடிதங்கள் மூலமாகவும் பலமாக அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தலைமை செயலாளர்கள் வழியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை ஒரு வாரத்துக்குள் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
Comments