பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் ஒரே வேட்பாளர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை விதிக்க வேண்டும் மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை

பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் ஒரே வேட்பாளர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை விதிக்க வேண்டும் மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை | பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் ஒரே வேட்பாளர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. 2 தொகுதிகளில் போட்டி இந்திய அரசியல் அமைப்பு தேர்தல் சட்டவிதிகள் 1951-ன்படி பாராளுமன்ற தேர்தலிலோ அல்லது சட்டமன்ற தேர்தலிலோ ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும், இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும்பட்சத்தில் அதில் ஒரு தொகுதியை மட்டும் தக்க வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது. இவ்வாறு இரு தொகுதிகளில் ஒருவர் போட்டியிடுவதால் மற்றொரு தொகுதி காலியிடமாக அறிவிக்கப்படுகிறது. அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. தேர்தல் செலவின தொகை இதையடுத்து தேர்தல் கமிஷன் 2004-ம் ஆண்டு மத்திய அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில், 2 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களுக்கு தடை விதிக்கவில்லை. அதே சமயம் மற்றொரு தொகுதியை விட்டுக்கொடுக்கும் போது பாராளுமன்ற தேர்தலுக்கு ரூ.10 லட்சமும், சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.5 லட்சமும் தேர்தல் செலவின தொகையாக அந்த வேட்பாளர் செலுத்த வேண்டும் என்று அனுப்பியது. இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசின் சட்டத்துறைக்கு தேர்தல் கமிஷன் ஒரு பரிந்துரையை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- தடை விதிக்க வேண்டும் ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மற்றொரு தொகுதியை விட்டுக்கொடுக்க நேரிடும். அப்போது அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பாதுகாப்பு, அரசு ஊழியர்களை அந்த பணிக்கு ஒதுக்குவது என தேவையற்ற தேர்தல் செலவினங்கள் ஏற்படுவதுடன், மக்களுக்கும் வீண் சிரமம் உண்டாகிறது. மேலும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு அநீதி ஏற்படுகிறது. எனவே பாராளுமன்றம் அல்லது சட்டமன்ற பொதுத்தேர்தலிலோ அல்லது இடைத்தேர்தலிலோ ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட தடை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும். இல்லாவிட்டால் 2004-ம் ஆண்டு தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்த தேர்தல் செலவின தொகையை அதிகரித்து சம்பந்தப்பட்ட வேட்பாளர் செலுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. மோடி, முலாயம் சில ஆண்டுகளுக்கு முன்பு சட்ட கமிஷன் முன்னாள் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி.ஷா அளித்த பரிந்துரையிலும், தேர்தலில் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வதோதரா, வாரணாசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் வாரணாசி தொகுதியை தக்கவைத்துக்கொண்டு, வதோதரா தொகுதியை விட்டுக்கொடுத்தார். அதே போல் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மைன்புரி, அஜம்கார் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதில் அஜம்கார் தொகுதியை தக்கவைத்துக்கொண்டு, மைன்புரி தொகுதியை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Comments