சென்னையை புயல் தாக்கியது..மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

சென்னையை புயல் தாக்கியது..மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது | இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில், கடந்த 8-ந் தேதி வங்க கடலில் உருவான 'வார்தா' புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்த புயல் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் சென்னைக்கு கிழக்கே 220 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. அது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து சென்னை அருகே கரையை கடக்கும் என்றும், இதனால் சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்து இருந்தது. இதனால் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக அரசு, பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டது. புயல் கரையை கடந்தது புயல் கரையை நெருங்கியதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11 மணி முதலே சென்னை நகரிலும், சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் நீடித்த மழை நேற்று காலையிலும் தொடர்ந்தது. காலை 6 மணிக்கு பிறகு மழையின் வேகம் அதிகரித்தது. மதியம் 12.30 மணிக்கு 30 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த புயல் மெதுவாக நகர்ந்து 12.45 மணிக்கு சென்னை துறைமுகம் அருகே கரையை கடக்க தொடங்கியது. அப்போது 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. கடலில் பல அடி உயரத்துக்கு அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. புயலின் தாக்கம் தெரியத் தொடங்கியதுமே பாதுகாப்பு கருதி சென்னை நகரில் நேற்று காலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன சுழன்று அடித்த சூறாவளிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னை நகரிலும், பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. கடைகளின் பெயர்ப்பலகைகளும், விளம்பர போர்டுகளும் தூக்கி வீசப்பட்டன. பல வீடுகளின் மொட்டை மாடியில் இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள், டிஷ் ஆண்டனாக்கள் தூக்கி வீசப்பட்டு பல அடி தூரம் போய் விழுந்தன. வீடுகளின் கூரைகள் பறந்தன புயல் காற்றால் பல இடங்களில் வீடுகளின் கூரைகள் பறந்தன. திருவொற்றியூர், பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி, மணலி புதுநகர் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு நாசமாயின. மணலி புதுநகரில் ஒரு குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர்கள் சரிந்து விழுந்தன. புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி பல இடங்களில் செல்போன் கோபுரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் செல்போன் சேவை பாதிக்கப்பட்டது. போக்குவரத்து கடும் பாதிப்பு சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகளில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயங்கின. கார்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்தும் வெகுவாக குறைந்தது. இதனால் சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. சாய்ந்து கிடந்த மரங்களையும், முறிந்து விழுந்த மரக்கிளைகளையும் மாநகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு படை வீரர்களும் உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு வழிவகை செய்தனர். கனமழை காரணமாக சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் பம்பு மூலம் தண்ணீரை வெளியேற்றினார்கள். மின்சார ரெயில்கள் ஓடவில்லை ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சார ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புயல்-மழை காரணமாக சென்னை விமானநிலையம் மூடப்பட்டு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. புயலின் காரணமாக மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சென்னை காசிமேடு, பழவேற்காடு பகுதிகளில் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. சில படகுகள் கவிழ்ந்து சேதம் அடைந்தன. இயல்பு வாழ்க்கை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், பல தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.Comments