மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு பரிந்துரை- ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு பரிந்துரை- ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு | சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு சில நிபந்தனைகளுடன் தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது. இதைத்தொடர்ந்து திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்து இருக்கிறார். பறக்கும் சாலை திட்டம் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலை அமைப்பதற்கான திட்டம் தி.மு.. ஆட்சி காலத்தில் 2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், 2007-ம் ஆண்டு மதுரவாயலில் நடந்த விழாவில் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின்படி, கூவம் ஆற்றின் ஓரமாக தூண்கள் அமைத்து அதன் மேல் சாலை அமைக்கவேண்டும். 1,815 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் செயல்படுத்த தொடங்கியது. சரக்கு வாகனங்கள் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையேயான 18.3 கி.மீ. தூரத்துக்கு தற்போது சரக்கு வாகனங்கள் சென்று வருவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. ஆனால் இந்த பறக்கும் சாலையை நிறைவேற்றப்பட்டால் 30 நிமிடங்களில் இந்த தூரத்தை சரக்கு வாகனங்கள் கடந்து செல்ல முடியும். மேலும் இந்த பறக்கும் சாலைக்கு அமைந்தகரை, ஸ்டெர்லிங் சாலை, நேப்பியர் சாலை ஆகிய 3 இடங்களில் நுழைவு வழி அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த நுழைவு வழியாக பொதுமக்களும் தங்கள் வாகனங்களில் செல்ல முடியும். இந்த திட்டத்துக்காக நில ஆர்ஜிதம் செய்து தூண்கள் அமைக்கப்பட்டு வந்தன. 15 சதவீத பணிகள் முடிந்திருந்த நிலையில், தமிழகத்தில் 2011-ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு .தி.மு.. ஆட்சி அமைந்தது. அப்போது திட்டத்தை செயல்படுத்தி வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் செயற்பொறியாளர் நோட்டீசு அனுப்பினார். நிறுத்தப்பட்டது அதில், கூவம் ஆற்றுக்குள் தூண் அமைக்கப்படுவதால், நீர்வழித்தடம் பாதிப்படையும் என்றும், அதற்கான விதிகள் மீறப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை மேலும் செயல்படுத்துவதற்கு அனுமதி தரமுடியாது என்றும் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து 2012-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நோட்டீசை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத் துறை, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. நெடுஞ்சாலை துறையின் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பொதுப்பணித் துறையின் செயற்பொறியாளர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும், அதற்கான பெயர்களை பரிந்துரைக்கவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அனுமதி இந்த சூழ்நிலையில், இதுவரை கிடப்பில் போடப்பட்டிருந்த பறக்கும் சாலை திட்டத்துக்கு ஒரு விடிவு காலம் பிறந்து உள்ளது. இந்த திட்டத்துக்கு சில நிபந்தனைகளுடன்கூடிய பரிந்துரைகளை தெரிவித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. அந்த பரிந்துரைகளை பரிசீலித்து உரிய அனுமதி வழங்குவது பற்றி மத்திய அரசு முடிவு எடுக்கும். இதுபற்றி மூத்த வக்கீல் பி.வில்சனிடம் கேட்டபோது, "இரண்டு மாற்றங்களுடன் இந்த திட்டத்தை தொடர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார். பொன்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு உள்ளது. கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக நான் தீவிர முயற்சி செய்து வருகிறேன். இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவை நான் பலமுறை சந்தித்து பேசி இருக்கிறேன். .பன்னீர்செல்வம் முன்பு பொறுப்பு முதல்- அமைச்சராக இருந்த போது அவருடனும் பேசி இருக்கிறேன். கடைசியாக கடந்த செப்டம்பர் 16-ந்தேதி ஜெயலலிதாவை சந்தித்து பேசினேன். குழு அமைக்கப்படும் சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக நீர்வள ஆதார அமைப்பு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு தற்போது ஒரு கடிதம் எழுதி இருக்கிறது. அதில், கூவம் ஆற்றில் நீரோட்டத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவேண்டும் என்றும் கூறி இருக்கிறது. எனவே இந்த திட்டத்தை செயல்படுத்துவது பற்றி ஆய்வு செய்ய சென்னை துறைமுகம், தேசிய நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். தமிழக அரசின் கடிதத்தை முழு அனுமதி கடிதமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றபோதிலும், இதை முதல் தொடக்கமாக கருத முடியும். இந்த திட்டத்தை விரைவில் தொடங்கி முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.Comments