80% புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தவுடன் வங்கிகளில் பணம் எடுக்கும் வரம்பு உயர்த்தப்படும்

80% புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தவுடன் வங்கிகளில் பணம் எடுக்கும் வரம்பு உயர்த்தப்படும் | வங்கிகளில் பணம் எடுக்கும் வரம்பை உயர்த்துவது மற்றும் எளிமையாக்குவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளில் 80 சதவீத அளவுக்கு புழக்கத்துக்கு வந்தவுடன் வரம்பு அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக இந்த வரம்பை உயர்த்தும் நடவடிக்கை கூட்டுறவு வங்கிகளில் அமல்படுத்தப்படும். பின்னர் அனைத்து வங்கிகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக புழக்கத்தில் விடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 7.5 லட்சம் கோடியாகும். இது மொத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் திரும்பப் பெறப்படும் தொகையில் 50 சதவீதமாகும். தற்போது வங்கிகளில் வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. தேர்தல் நடைபெற உள்ள உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில்தான் அதிக எண்ணிக்கையில் மக்கள் வரிசையில் நிற்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பண மதிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு வங்கிகள் மற்றும் ஏடிஎம்-களில் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன்படி வங்கிகளில் ஒரு வாரத்துக்கு ரூ. 24 ஆயிரமும், ஏடிஎம்களில் தினசரி ரூ. 2,500-ம் எடுக்க அனுமதிக்கப்பட்டது. உயர் மதிப்பிலான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக 2,000 மற்றும் 500 புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளன. பழைய நோட்டுகளில் 86 சதவீதம் வங்கிக்குத் திரும்பியுள்ளது. புதிதாக அச்சிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளில் இதுவரை 200 கோடி நோட்டுகள் அதாவது ரூ. 4 லட்சம் கோடிக்கு அச்சிடப்பட்டுள்ளன. இதையடுத்து 500 ரூபாய் புதிய நோட்டுகள் 4 அச்சகங்களில் அதாவது மத்தியப் பிரதேசம், நாசிக், மேற்கு வங்கம் மற்றும் மைசூருவில் அச்சிடப்பட்டன. நிலைமை சீரடைந்தவுடன் இது வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும், 2017 ஜனவரி முதல் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனை: ரூ. 340 கோடி வெகுமதி பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு தினசரி, வாரம் தோறும் மிகப்பெறும் ரொக்க வெகுமதிகளை அறிவித்தது. இவ்விதம் அறிவிக்கப்பட்ட தொகையின் மதிப்பு ரூ. 340 கோடியாகும். இந்த வெகுமதி பொதுமக்கள் மற்றும் வர்த்கர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று வழங்கப்படும். லக்கி கிரஹக் யோஜனா மற்றும் டிஜி தன் வியாபார் யோஜனா என்ற பெயரிலான இந்த திட்டத்தின் கீழ் ரூ. 50 முதல் ரூ. 3 ஆயிரம் வரை பரிவர்த்தனை செய்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார். முதலாவது குலுக்கல் கிறிஸ்துமஸ் தினத்தன்றும் மிகப் பெரிய அளவிலான குலுக்கல் பரிசு ஏப்ரல் 14-ம் தேதியும் நடத்தப்பட உள்ளன. நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் 15 ஆயிரம் பேருக்கு தினசரி ரூ. 1,000 பரிசு அடுத்த 100 நாள்களுக்கு டிசம்பர் 25-ம் தேதி முதல் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதன்படி வாரத்துக்கு 7 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் 7 ஆயிரம் வர்த்தகர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட உள்ளது. மிகப் பெரிய பரிசாக ரூ. 1 கோடி, ரூ. 50 லட்சம் மற்றும் ரூ. 25 லட்சம் என மூன்று பரிசுகள் நுகர்வோருக்கு வழங்கப்பட உள்ளன. வர்த்கர்களுக்கு ரூ. 50 லட்சம், ரூ. 25 லட்சம் மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த பரிசுகளுக்கான மொத்த செலவுத் தொகை ரூ. 340 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு பிஓஎஸ் மூலமான வர்த்தகம் 95 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூபே கார்டு மூலமான பரிவர்த்தனை 316 சதவீதமும், இ-வாலட் மூலமான பரிவர்த்தனை 271 சதவீதமும், யுபிஐ மற்றும் யுஎஸ்எஸ்டி மூலமான வர்த்தகம் 1,200 சதவீதமும், உயர்ந்துள்ளது. அனைத்து மின்னணு பண பரிவர்த்தனைகளும் குலுக்கலுக்கு தேர்வு செய்யப்படும். தனியாருக்கு மற்றும் தனியார் இ-வாலட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைக்கு பொருந்தாது என்று அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.Comments