நாளை முதல் ரெயில், பஸ் டிக்கெட்டுகளுக்கு பழைய ரூ.500 நோட்டு செல்லாது மத்திய அரசு அறிவிப்பு

நாளை முதல் ரெயில், பஸ் டிக்கெட்டுகளுக்கு பழைய ரூ.500 நோட்டு செல்லாது மத்திய அரசு அறிவிப்பு | ரெயில், அரசு பஸ் டிக்கெட்டுகளுக்கு பழைய ரூ.500 நோட்டு நாளை முதல் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. திடீர் அறிவிப்பு பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தபோதிலும், சில அரசு சேவைகளை பயன்படுத்த அந்த நோட்டுகளுக்கு விலக்கு அளித்திருந்தது. இந்த சேவைகளில் வருகிற 15-ந்தேதிவரை, பழைய ரூ.500 நோட்டுகள் ஏற்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், திடீரென சில சேவைகளுக்கு இந்த நோட்டுகளை பயன்படுத்துவதை நாளை முதல் விலக்கிக்கொண்டுள்ளது. ரெயில், பஸ் டிக்கெட் உதாரணமாக, ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள், அரசு பஸ்களின் டிக்கெட் கவுண்ட்டர்கள், புறநகர் ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள், ரெயில்வே உணவக சேவைகளுக்கு பணம் செலுத்துதல் ஆகியவற்றுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் பழைய ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசின் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில், மற்ற சேவைகளுக்கு 15-ந்தேதிவரை பழைய ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும். உதாரணமாக, அரசு ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், நுகர்வோர் கூட்டுறவு கடைகள், அரசு நடத்தும் பால் நிலையங்கள், உடல் தகன மேடைகள் மற்றும் அடக்க ஸ்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பழைய நோட்டுகள் 15-ந்தேதிவரை ஏற்கப்படும். கியாஸ் சிலிண்டர் மேலும், சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இந்திய தொல்பொருள்துறை பராமரிக்கும் நினைவு சின்னங்களை பார்ப்பதற்கான டிக்கெட், அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள், வரிகள், அபராதங்கள், அரசு விற்பனை நிலையங்களில் விதை கொள்முதல், அரசு பள்ளி, கல்லூரி கட்டணம் ஆகியவற்றுக்கு 15-ந்தேதிவரை பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம். மொபைல் போன்களில் ஒரே தடவை ரூ.500 வரை மேற்கொள்ளப்படும் ரீசார்ஜ்களுக்கும் பழைய ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படும்.Comments