பெட்ரோல் விற்பனை நிலையங்கள், விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.500 பழைய நோட்டுகளை நாளை முதல் பயன்படுத்த முடியாது கால அவகாசத்தை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல் விற்பனை நிலையங்கள், விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.500 பழைய நோட்டுகளை நாளை முதல் பயன்படுத்த முடியாது கால அவகாசத்தை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு | பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் விமான டிக்கெட்டுகளுக்கு பழைய ரூ.500 நோட்டுகளை நாளை (சனிக்கிழமை) முதல் பயன்படுத்த முடியாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது. 15-ந்தேதி வரை அவகாசம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்த மத்திய அரசு, இந்த நோட்டுகளை மாற்றுவதற்கான சில வழிமுறைகளை அப்போது அறிவித்தது. அதன்படி பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பஸ், ரெயில், விமான போக்குவரத்துக்கான டிக்கெட்டுகள், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அரசின் கட்டணங்கள், செல்போன் கட்டணம், பள்ளி கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு இந்த நோட்டுகளை பயன்படுத்தலாம் என கூறப்பட்டு இருந்தது. இதற்கான கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு இறுதியாக கடந்த மாதம் 24-ந்தேதி வரை இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என கூறப்பட்டு இருந்தது. பின்னர் இது வருகிற 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டதுடன், மேற்கூறப்பட்ட தேவைகளுக்கு ரூ.500 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. கருப்பு பணத்தை மாற்றுவதற்கே... இந்த நிலையில் எங்கெல்லாம் பழைய நோட்டுகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளதோ, அங்கெல்லாம் சிலர் தங்கள் கருப்பு பணத்தை மாற்றி வருவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வரும் புதிய நோட்டுகள் வங்கிகளுக்கு செல்லாமல், ஒரு சிலரின் பழைய நோட்டுகளுக்கு மாற்றாக அளிக்கப்படுவதாக கண்டறியப்பட்டது. எனவே பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பழைய நோட்டுகளை மாற்றும் கால அவகாசத்தை இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி பொதுத்துறை நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்று செயல்படும் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) முதல் பழைய ரூ.500 நோட்டுகளை மாற்ற முடியாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதைப்போல விமான நிலைய கவுண்ட்டர்களில் எடுக்கப்படும் விமான டிக்கெட்டுகளுக்கும் நாளை முதல் பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த முடியாது என கூறப்பட்டு உள்ளது. இந்த கவுண்ட்டர்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பழைய நோட்டுகளை பயன்படுத்தலாம் பெட்ரோல், டீசலை தவிர கியாஸ் சிலிண்டர்களுக்கு பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என அரசு கூறியுள்ளது. மேலும் ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள், அரசு மற்றும் பொதுத்துறை பஸ் டிக்கெட் கவுண்ட்டர்கள், தண்ணீர், மின்சார கட்டணங்கள் உள்ளிட்ட ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த சேவைகளுக்கு வருகிற 15-ந்தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் இதற்கிடையே நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது அங்கு 200 ரூபாய்க்கு மேல் செலுத்தப்படும் கட்டணங்களுக்கும் ரூ.500 பழைய நோட்டுகளை பயன்படுத்தலாம் என மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது. சுங்கச்சாவடிகளில் தாமதத்தை தவிர்க்கும் வகையில் போதுமான சில்லறைகளை எடுத்து செல்லுமாறு வாகன ஓட்டிகளை கேட்டுக்கொண்டுள்ள அரசு, இங்கு பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் 'பாஸ்டாக்' முறையை பயன்படுத்து மாறும் அறிவுறுத்தி உள்ளது.Comments