வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் இருந்தால் புதிய கட்டுப்பாடு ரிசர்வ் வங்கி நடவடிக்கை

வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் இருந்தால் புதிய கட்டுப்பாடு ரிசர்வ் வங்கி நடவடிக்கை | வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைத்திருப்பவர்கள் மற்றும் நவம்பர் 9-ந்தேதிக்கு பிறகு, ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் ஆகியோருக்கு புதிய கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, அந்த நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி, கணக்கில் வராத பணத்தை பலர் டெபாசிட் செய்யும் சூழ்நிலை எழுந்துள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்களை பயன்படுத்தி, அவர்களது வங்கி கணக்கில், கருப்பு பணத்தை போடச் செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், இதற்கு முடிவு கட்ட ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடை விதித்துள்ளது. ரூ.5 லட்சம் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் வைத்திருப்பவர்களுக்கும், செல்லாத நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, கடந்த நவம்பர் 9-ந்தேதிக்கு பிறகு, வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்கண்ட நபர்கள், தங்கள் வங்கி கணக்கில் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (பான் எண்) இணைக்க வேண்டும் அல்லது படிவம் 60-ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், அவர்களது வங்கி கணக்கை இயக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணம் எடுப்பது, மற்றொரு கணக்குக்கு பணத்தை மாற்றுவது உள்பட எந்த செயல்பாடுகளையும் செய்ய முடியாது. ஏழைகளுக்கும் பாதிப்பு இதன்மூலம், கருப்பு பணம் செலுத்தியவர்கள் மட்டுமின்றி, கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் முயற்சிக்கு உதவிய சாதாரண ஏழை, எளிய மக்களும் தங்களது வங்கி கணக்கை இயக்க முடியாத நிலை ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. வருமான வரி சட்டம் 114 பி விதியின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 'ஜன்தன்' வங்கி கணக்குகளில் அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்டதால்தான், அந்த கணக்குகளில் இருந்து மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது குறிப்பிடத்தக்கது.Comments