நாசிக்கில் இருந்து ராணுவ விமானத்தில் ரூ.320 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்பப்படுகிறது

நாசிக்கில் இருந்து ராணுவ விமானத்தில் ரூ.320 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்பப்படுகிறது | நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட ரூ.320 கோடி மதிப்புள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகள் ராணுவ விமானம் மூலம் சென்னைக்கு வந்தன. அந்த பணத்தை தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்புகிறது புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியில் இருந்து குறைவான தொகைகளே இதர வங்கிகளுக்கு வழங்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் கேட்கும் தொகையை கொடுக்க முடியாமல் வங்கி அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்காக மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள மத்திய அரசின் ரூபாய் நோட்டு அச்சகத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சென்னைக்கு வந்தன இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய ரூ.500 மற்றும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ராணுவ விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் கடந்த 24-ந் தேதி இரவு ரூ.300 கோடி மதிப்பிலான புதிய ரூ.500 நோட்டுகள் சென்னைக்கு வந்தன. 4 கன்டெய்னர்களில் பாதுகாப்புடன் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டுகள், அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் வங்கி மற்றும் .டி.எம். மையங்கள் மூலம் வினியோகிக்கப்பட்டு வந்தன. ரூ.320 கோடி இந்த நிலையில் மாதத்தின் முதல் வாரம் என்பதால் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, மீண்டும் நாசிக்கில் இருந்து தமிழகத்துக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாசிக்கில் இருந்து ராணுவ விமானம் மூலம் ரூ.320 கோடி மதிப்புள்ள ரூ.500 புதிய நோட்டுகள் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு வந்தன. சென்னை விமானம் நிலையத்தில் இருந்து கன்டெய்னர்கள் மூலம் அந்த புதிய ரூபாய் நோட்டுகள் பலத்த பாதுகாப்புடன் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த புதிய ரூபாய் நோட்டுகளின் எடை 15 டன் இருக்கும் என்றும், அடுத்தடுத்து புதிய ரூபாய் நோட்டுகள் சென்னைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது வந்துள்ள புதிய ரூ.500 நோட்டுகளை தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. இந்த புதிய நோட்டுகள் ஓரிரு நாட்களில் அனைத்து வங்கிகளுக்கும் சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் சிரமம் இதற்கிடையில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றும் 'கெடு' முடிந்துவிட்டதை தொடர்ந்து, தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் டெபாசிட் செய்து வருகின்றனர். ஆனால் வங்கி கணக்கு இருந்தால் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றமுடியும் என்பதால் பொதுமக்கள் சிரமம் அனுபவித்து வருகின்றனர். தவிர வங்கி கணக்கு யார் பெயரில் இருக்கிறதோ, அவர்கள் தான் 'டெபாசிட்' செய்ய வரவேண்டும் என்று பெரும்பாலான வங்கிகள் தெரிவித்து உள்ளன. இதனால் பணியில் இருப்போர் அரை நாள் விடுப்பு போட்டுவிட்டு கூட வங்கிகளில் காத்திருந்து பணத்தை டெபாசிட் செய்தோ அல்லது பணத்தை பெற்றுக்கொண்டோ செல்கின்றனர்.
Comments