இன்று முதல் மார்ச் 31-ந் தேதி வரை கருப்பு பணத்தை மாற்றிக்கொள்ள கடைசி வாய்ப்பு மத்திய அரசு அறிவிப்பு

இன்று முதல் மார்ச் 31-ந் தேதி வரை கருப்பு பணத்தை மாற்றிக்கொள்ள கடைசி வாய்ப்பு மத்திய அரசு அறிவிப்பு | இன்று முதல் மார்ச் 31-ந் தேதி வரை கருப்பு பணத்தை மாற்றிக்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இதன்மூலம் நாட்டில் புழக்கத்தில் இருந்த 86 சதவீதம் ரூபாய் நோட்டுகள் (சுமார் ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் கோடி) மதிப்பிழந்தன. அதைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்வதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் செல்லாது என அறிவிக்கப்பட்ட உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் நவம்பர் 10-ந் தேதி முதல் வங்கிகளில் செலுத்தப்பட்டன. இப்படி ரூ.12 லட்சத்து 44 ஆயிரம் கோடி வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளன. மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அத்துடன் தனிநபர் வங்கி கணக்குகளில் ரூ.2½ லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்கிறவர்களுக்கு, அவர்களின் கணக்குகளை ஆய்வு செய்து வரி விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக, 'வருமான வரிகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2016' என்ற மசோதா, பாராளுமன்றத்தில் நிதி மசோதாவாக தாக்கல் செய்து, கடந்த மாதம் 29-ந் தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் இரவு ஒப்புதல் வழங்கினார். அதைத் தொடர்ந்து அது சட்டமாகி உள்ளது. இந்த தகவலை மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா நேற்று தெரிவித்தார். இந்த நிலையில் கணக்கில் காட்டாத பணத்தை ரொக்கமாக வைத்திருப்பவர்கள், வங்கியில் டெபாசிட் செய்தவர்கள், இன்று (சனிக்கிழமை) முதல், மார்ச் மாதம் 31-ந் தேதி வரையில், பி.எம்.ஜி.கே.ஒய். என்னும் பிரதம மந்திரி காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் கணக்கு காட்டி, 50 சதவீத அளவுக்கு வரி செலுத்த வேண்டும். மீதி 50 சதவீதத்தில் 25 சதவீதம், வரி செலுத்துகிறவருக்கு திரும்ப தரப்படும். எஞ்சிய 25 சதவீதம் 4 ஆண்டுக்கு திரும்பப்பெற முடியாத, வட்டி இல்லாத மத்திய அரசின் திட்டங்களில் முதலீடு செய்யப்படும். இது கருப்பு பணத்தை மாற்றிக்கொள்வதற்கான கடைசி வாய்ப்பு ஆகும். இந்த தகவலை பாராளுமன்றத்தில் நேற்று ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின்படி, இந்திய தண்டனைச்சட்டத்தின் அத்தியாயம் 9 மற்றும் 17 படி, போதைப்பொருட்கள் தடுப்பு சட்டத்தின் படி, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்படி காவலில் வைப்பதில் இருந்து எந்த விதிவிலக்கையும் இந்த பி.எம்.ஜி.கே.ஒய். திட்டம் அளிக்காது என மந்திரி சந்தோஷ் குமார் கங்குவார் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "வங்கியில் செய்யப்படுகிற ஒவ்வொரு டெபாசிட்டும் கண்காணிக்கப்படுகிறது. அவை, வருமான வரித்துறை மற்றும் தொழில்முறை முகவர்கள் பரிசீலனைக்கும் உட்படுத்தப்படும். சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறவற்றில் டெபாசிட்தாரர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும்" என கூறினார். வரி செலுத்தாமல் ஏய்த்து, கருப்பு பணம் குவித்துள்ளவர்கள் பி.எம்.ஜி.கே.ஒய். என்னும் பிரதம மந்திரி காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை கடைசி வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும் அப்படி தெரிவிக்காதவர்கள், மார்ச் 31-ந் தேதிக்கு பின்னர் 100 சதவீத கருப்பு பணத்தையும், வரியாகவும், அபராதமாகவும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன் கிரிமினல் சட்ட நடவடிக்கையையும் சந்திக்க வேண்டியது வரும் என அவர் எச்சரித்தார். வரி ஏய்ப்பு செய்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கலாம். அதற்கான மின்னஞ்சல் முகவரியையும் அவர் வெளியிட்டார். அந்த முகவரி blackmoneyinfo@incometax.gov.in என்பதாகும். தகவல் தெரிவிப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். மேலும், "வங்கியில் வெறுமனே பணத்தை டெபாசிட் செய்து விட்டால் மட்டுமே அது வெள்ளை பணமாக மாறிவிடாது. வங்கியில் டெபாசிட் செய்த பணம் வெள்ளைப்பணமாகி விடும் என நினைத்து மக்கள் தவறு செய்து விடக்கூடாது" என்றும் அவர் எச்சரித்தார். இதே போன்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா நிருபர்களிடம் பேசுகையில், "சந்தேகத்துக்கு இடமான அனைத்து நிதி நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன. வங்கிகளில் செய்யப்படுகிற டெபாசிட்டுகளும் கண்காணிக்கப்படுகின்றன. எனவே அனைவரும் பி.எம்.ஜி.கே.ஒய். என்னும் பிரதம மந்திரி காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை கடைசி வாய்ப்பாக பயன்படுத்தி கணக்கில் காட்டாத பணத்தை அறிவித்து, சுத்தமானவர்களாக வெளியே வர வேண்டும்" என்று கூறினார்.Comments