நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலி பணியிடங்களை நிரப்ப மீ்ண்டும் 2 வாரம் அவகாசம்

நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலி பணியிடங்களை நிரப்ப மீ்ண்டும் 2 வாரம் அவகாசம் | மாநிலம் முழுவதும் நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலியாக உள்ள தலைவர் உள்ளிட்ட பதவியிடங்களை நிரப்ப மீண்டும் 2 வாரம் அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை நுகர்வோர் குரல் அமைப்பின் செயலாளரான என்.லோகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ''தமிழகத்தில் உள்ள 30 மாவட்ட குறைதீர் மன்றங்களில் 6 மாவட்டங்களில் தலைவர் உள்ளிட்ட பதவியிடங்கள் நீண்டகாலமாக காலியாக உள்ளன. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் பதவி கடந்த 2015 மே மாதம் முதல் காலியாக உள்ளது. அங்கு மட்டுமே 10 ஆயிரத்து 450 வழக்குகள் தீர்ப்புக்காகவும், 8 ஆயிரத்து 245 வழக்குகள் விசாரணை நிலையிலும் நிலுவையில் உள்ளன. நுகர்வோர் நீதிமன்றங்களின் தடையற்ற செயல்பாட்டுக்காக மத்திய அரசும் நிதி ஒதுக்கி வருகிறது. அப்படி இருந்தும் நுகர்வோர் நீதிமன்றங்களின் செயல்பாடு தமிழ்நாட்டில் உயிரோட்டமாக இல்லை. இப்பதவியிடங்களை விரைவில் நிரப்ப உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 2 வாரத்தில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிடும் என தமிழக அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி, தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இப்பதவியிடங்களை நிரப்ப 2 வாரம் அவகாசம் கோரினார். அதையேற்ற நீதிபதிகள், இப்பதவியிடங்களை 2 வாரத்தில் நிரப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 22-க்கு தள்ளி வைத்தனர்.

Comments