கருப்பு பணம் மாற்றுவதில் முறைகேடு: 27 வங்கி அதிகாரிகள் இடைநீக்கம் மேலும் 6 பேர் இடமாற்றம்

கருப்பு பணம் மாற்றுவதில் முறைகேடு: 27 வங்கி அதிகாரிகள் இடைநீக்கம் மேலும் 6 பேர் இடமாற்றம் | கருப்பு பணம் மாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் 27 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 6 பேரை மத்திய அரசு இடமாற்றம் செய்துள்ளது. உச்சவரம்பு செல்லாத ரூபாய் நோட்டுகள் அறிவிப்பை தொடர்ந்து, அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும், டிசம்பர் 30-ந்தேதிவரை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. ரூபாய் நோட்டு மாற்றுவதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் என்றும், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் என்றும் ரிசர்வ் வங்கி உச்சவரம்பு நிர்ணயித்து இருந்தது. புதிய நோட்டுகள் சிக்கின ஆனால், இதற்கு மாறாக, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின்போது, 2 தொழில் அதிபர்களிடம் இருந்து ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கின. வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல், அந்த தொழில் அதிபர்களுக்கு அவ்வளவு புதிய ரூபாய் நோட்டுகள் கிடைத்து இருக்காது என்ற சந்தேகம் எழுந்தது. இதன் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வின்போது, பொதுத்துறை வங்கி அதிகாரிகள் சிலர் முறைகேடாக கருப்பு பணத்தை மாற்றிக்கொடுத்து இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக 27 வங்கி அதிகாரிகளை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ளது. அறிக்கை இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகள் நீண்ட நேரம் களைப்பின்றி பணியாற்றின. அதே சமயத்தில், முறைகேடாகவும், ரிசர்வ் வங்கி உத்தரவுக்கு முரணான வகையிலும் வங்கி அதிகாரிகள் செயல்பட்டது, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இடைநீக்கம் அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொதுத்துறை வங்கிகளின் 27 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 அதிகாரிகள், முக்கியத்துவம் இல்லாத பணிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேர்மையான வரவு-செலவு தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற சட்டவிரோத காரியங்களை சகித்துக் கொள்ள மாட்டோம். முறைகேடான செயல்களில் ஈடுபடும் தனிநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Comments