அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலையில் நாளை (12.12.2016) மகா தீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலையில் நாளை (12.12.2016) மகா தீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது | அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை (திங்கட்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழா பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே ஏற்பட்ட 'தான்' என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பரணி தீபம் நாளை (திங்கட்கிழமை) மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். மகாதீபம் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கிரிவலப்பாதையில் 14 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகா தீபத்தை வணங்குவார்கள். நாளை திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு வரும் 9 சாலைகளிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதால் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 9 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் வந்து குவிந்து உள்ளனர். கோவில் மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு நவீன சாதனங்கள் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மகாதீபம் நாளை மாலை 6 மணிக்கு ஏற்றப்படுவதையொட்டி வெளிநாடு, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வந்து குவிய தொடங்கிவிட்டனர். அவர் கள் விடுதிகளில் தங்கியுள்ளனர். அதனால் விடுதிகள் பக்தர்களால் நிரம்பி வழிகின்றன.Comments