ரூ.1,000, ரூ.500 செல்லாது என்று அறிவித்து ஒரு மாதம் ஆகியும் வங்கிகளில் பணம் பரிமாற்றம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை பொதுமக்கள் வேதனை

ரூ.1,000, ரூ.500 செல்லாது என்று அறிவித்து ஒரு மாதம் ஆகியும் வங்கிகளில் பணம் பரிமாற்றம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை பொதுமக்கள் வேதனை | ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதம் ஆகியும் வங்கிகளில் பணம் பரிமாற்றம் இயல்பு நிலைக்கு திரும்பாதது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கருப்பு பணம் கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் புழக்கத்தில் இருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி அறிவித்தார். இதையடுத்து தங்கள் கைவசம் இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளுக்கும், பணம் எடுக்க ஏ.டி.எம். மையங்களுக்கும் பொதுமக்கள் அலைந்து திரிந்து வருகின்றனர். வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க போதிய அளவுக்கு பணம் இல்லை. பணத்தட்டுப்பாடு காரணமாக வங்கிகள் கேட்கும் தொகையை விடவும் குறைவாகவே ரிசர்வ் வங்கி பணம் வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கேட்கும் தொகையை வங்கிகளால் கொடுக்க முடிவதில்லை. முடங்கிய ஏ.டி.எம்.கள் சென்னையில் புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணா சாலை, சூளை, நுங்கம்பாக்கம், மாம்பலம், சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், பிராட்வே, அபிராமபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள வங்கிகளில் பணத்தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் கேட்கும் தொகையை விடவும் குறைவாகவே வழங்கப்பட்டன. பணம் நிரப்பப்படாததால் சென்னையை பொறுத்தமட்டில் சுமார் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன. பல ஏ.டி.எம்.கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. 'பணம் இல்லை', 'சேவையில் இல்லை' என்ற போர்டுகள் மட்டுமே அதன் வெளியே தொங்குகின்றன. பொதுமக்கள் தவிப்பு ஒரு சில ஏ.டி.எம். எந்திரங்களில் மட்டும் பணம் நிரப்பப்படுகின்றது. அந்த ஏ.டி.எம். மையங்களிலும் பணம் எடுப்பதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றதை காணமுடிந்தது. சில எந்திரங்களில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் வருவதால், சில்லரை மாற்றுவதற்கு சிரமம் என்று கருதி சிலர் பணம் எடுக்காமலேயே சென்றனர். வங்கிகளிலும் போதுமான அளவுக்கு பணம் எடுக்க முடிவதில்லை, ஏ.டி.எம். எந்திரத்திலும் பணம் எடுக்கமுடியவில்லை என்ற சூழலில் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சிலர் தங்களது வீட்டு வாடகையை கூட செலுத்தமுடியாமல் தவிப்பதாக தெரிவித்தனர். இயல்புநிலைக்கு திரும்பவில்லை 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதம் ஆகிய பின்னரும் வங்கிகளில் பணம் பரிமாற்றம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பொதுமக்களிடம் பணப்புழக்கமும் இயல்பாக இல்லை. பணப்புழக்கம் இயல்புநிலைக்கு திரும்பாதது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், ரிசர்வ் வங்கி படிப்படியாக பணம் வழங்குவதை அதிகரித்து வருகிறது. விரைவில் புதிய 100, 50, 20 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது. அதற்கு பின்னர் தான் இயல்புநிலைக்கு திரும்பும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றனர்.Comments