டெபாசிட் தொகை திடீர் அதிகரிப்பு எதிரொலி: ஜன்தன் வங்கி கணக்கில் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதி ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனை

டெபாசிட் தொகை திடீர் அதிகரிப்பு எதிரொலி: ஜன்தன் வங்கி கணக்கில் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதி ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனை | ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் தொகை திடீரென அதிகரித்து இருப்பதால் அதன் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதித்து ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனை விதித்தது. ரூ.27 ஆயிரம் கோடி டெபாசிட் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு பின்பு கருப்பு பணம் வைத்திருப்போர் அதை ஏழைகள், விவசாயிகள், சாமானிய மக்களுக்காக பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்து வெள்ளையாக மாற்ற முயற்சித்து வருவதாக புகார்கள் எழுந்து உள்ளது. அதாவது, கடந்த 9-ந்தேதி முதல் நவம்பர் 23-ந்தேதி முடிய 14 நாட்களில் மட்டும் ஜன்தன் வங்கி கணக்குகளில் ஆச்சரியப்படுத்தக்க வகையில் ரூ.27 ஆயிரத்து 200 கோடி கூடுதலாக டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. நவம்பர் 9-ந்தேதி இந்த தொகை ரூ.45 ஆயிரத்து 636 கோடியாக இருந்தது. நவம்பர் 23-ந்தேதி நிலவரப்படி டெபாசிட் தொகை ரூ.72 ஆயிரத்து 834 கோடி. கிராமங்களில் அதிகரிப்பு ஜன்தன் கணக்குகளில் அதிக பட்சமாக ரூ.50 ஆயிரம் மட்டுமே இருப்பு வைத்துக் கொள்ள இயலும். இதை பயன்படுத்தி கருப்பு பணம் வைத்திருப்போர் தங்களுக்கு தெரிந்த ஏழைகள், விவசாயிகள், கிராமப்புற மக்கள் மூலம் ரூ.49 ஆயிரம் வரை டெபாசிட் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக அளவில் பணம் இப்படி டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்போர் பணத்தை எடுப்பதற்கு புதிய நிபந்தனையை நேற்று வெளியிட்டது. அதன்படி ஜன்தன் வங்கி கணக்கில் பணம் இருப்பு வைத்திருக்கும் ஒருவர் அதிக பட்சமாக மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் மட்டும் எடுக்க முடியும். இதுபற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- முன்னெச்சரிக்கை நடவடிக்கை ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்பு, நவம்பர் 9-ந்தேதிக்கு பிறகு பாமர விவசாயிகள், ஏழைகள் மற்றும் கிராம பகுதி மக்களின் ஜன்தன் கணக்குகளில் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களை கருப்பு பண மோசடி மற்றும் பினாமி சொத்து பரிமாற்ற மோசடி ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜன்தன் கணக்கு வைத்திருப்போர் வங்கிகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனையை வரையறுத்து உள்ளது. மாதம் ரூ.10 ஆயிரம் அதன்படி ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்போர் தங்களை பற்றிய முழு விவரங்கள் அடங்கிய படிவத்தை (கே.ஒய்.சி) வங்கிகளில் சமர்ப்பித்து இருந்தால் அவர்கள் மாதம் அதிக பட்சமாக ரூ.10 ஆயிரம் எடுக்கலாம். வங்கியில் தங்களது விவரங்களை தெரிவிக்காதவராக இருந்தால் ஜன்தன் கணக்கில் அவர்களால் மாதம் ரூ.5 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். அதே நேரம் ஜன்தன் கணக்கு வைத்திருப்போருக்கு வங்கி கிளை மேலாளர்கள் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை திரும்ப எடுக்க அனுமதிக்கலாம். வாடிக்கையாளர்கள் இப்படி பணம் எடுப்பதற்கு தகுந்த ஆவணங்கள் மற்றும் அவற்றின் நம்பகத் தன்மையை உறுதி செய்து கொண்ட பிறகு கூடுதல் தொகையை கிளைமேலாளர்கள் வழங்கலாம். மாதத்துக்கு ரூ.10 ஆயிரம்தான் எடுக்கலாம் என்பது தற்காலிக நடவடிக்கைதான். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 25 கோடியே 68 லட்சம் ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளன. இதில் 23 சதவீத கணக்குகளில் பணம் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.Comments