கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவில் கறுப்புப் பணம் மத்திய அரசு தகவல்

கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவில் கறுப்புப் பணம் மத்திய அரசு தகவல் | கல்வி நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில்தான் அதிக அளவில் கறுப்பு பணம் புழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் ரூ. 32 ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை வரித்துறை கண்டுபிடித்துள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. நேற்று முன்தினம் மக்களவை யில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் இத்தகவலைத் தெரிவித்தார். ரியல் எஸ்டேட், நிதி, வர்த்தகம், உற்பத்தித் துறை, கல்வி நிறுவனங் கள் மற்றும் சேவை நிறுவனங்களில் அதிக அளவில் கறுப்புப் பணம் புழங்குவதாக புள்ளிவிவரங்கள் உணர்த்துவதாக அவர் கூறினார். 2015-16-ம் நிதி ஆண்டில் வருமான வரித்துறை 445 தேடுதல் வேட்டைகளை நடத்தியது. இதில் கணக்கில் காட்டப்படாத ரூ. 1,066 கோடி கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.712.68 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப் பட்டன. முந்தைய ஆண்டான 2014-15-ம் நிதி ஆண்டில் 545 முறை தேடுதல் நடத்தப்பட்டது. அப்போது கணக் கில் வராத ரூ.10,288 கோடி தொகை கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.761.70 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2013-14-ம் நிதி ஆண்டில் 569 முறை தேடுதல் வேட்டை நடத்தப் பட்டுள்ளது. இதில் ரூ. 10,791 கோடி தொகை கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ. 807.84 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். மொத்தம் ரூ.32,146 கோடி கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் வருமான வரித்துறையினர் மேற் கொண்ட சோதனை குறித்து ஆய்வு செய்தபோது கறுப்புப் பணத்தை பதுக்கியிருந்த நபர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது என்றார். கறுப்புப் பணத்தைக் கட்டுப் படுத்த அரசு மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை ரொக்கமாக ஏற்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பினாமி பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்த ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகை பரிவர்த்தனையின்போது பான் கார்டு எண் குறிப்பிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலத்தில் அந்நியச் செலாவணி மோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனை தொடர்பாக 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 2015-16-ம் நிதி ஆண்டில் 138 வழக்குகளும், 2014-15-ம் நிதி ஆண்டில் 104 வழக்குகளும், 2013-14-ம் நிதி ஆண்டில் 75 அந்நியச் செலாவணி, ஹவாலா பரிவர்த்தனை வழக்குகள் (ஃபெமா) பதிவு செய்யப்பட்டுள்ளதாக கங்வார் கூறினார். இவ்விதம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சில வழக்குகள் தீவிரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளித்த வழக்குகளும் அடங்கும் என்றார் அவர்.
Comments