கருப்பு பணம் வைத்திருப்போருக்கு கூடுதல் வரி, அபராதம் விதிக்க முடிவு

கருப்பு பணம் வைத்திருப்போருக்கு கூடுதல் வரி, அபராதம் விதிக்க முடிவு பாராளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் 50 சதவீதம் வரி விதிப்பு; பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடு கருப்பு பணம் வைத்திருப்போருக்கு 50 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. | கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்கும் வகையில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். வங்கியில் 'டெபாசிட்' மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் அந்த நோட்டுகளை வங்கி கணக்குகளில் டிசம்பர் 30-ந் தேதி வரை 'டெபாசிட்' செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த கால அவகாசத்துக்குள் வங்கிகளில் 'டெபாசிட்' செய்ய இயலாதவர்கள், அதற்கான காரணத்தை தெரிவித்து ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட அலுவலகங்களில் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை 'டெபாசிட்' செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வங்கி கணக்குகளில் ரூ.2½ லட்சத்துக்கு மேல் 'டெபாசிட்' செய்யப்பட்டால் அந்த கணக்குகளை ஆய்வு செய்ய வருமான வரித்துறை தீர்மானித்து இருக்கிறது. புதிய மசோதா தாக்கல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் வங்கி கணக்குகளில் ரூ.2½ லட்சத்துக்கு மேல் செலுத்தப்பட்டு இருந்தால், அந்த பணம் கணக்கில் காட்டப் படாத கருப்பு பணமாக கருதப்பட்டு, அதற்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பான, வருமான வரி சட்ட திருத்த மசோதாவை நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- 50 சதவீதம் வரி விதிப்பு * வங்கி கணக்கில் செலுத்திய கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு 'பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின்' கீழ் 30 சதவீதம் வரி விதிக்கப்படும். * அத்துடன் 10 சத வீதம் அபராத வரி விதிக் கப்படும். * மேலும் விதிக்கப்பட்ட 30 சதவீத வரி தொகைக்கு 33 சதவீதம் கூடுதல் வரியாக விதிக்கப்படும். அதாவது 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். * அந்த வகையில், கணக்கில் காட்டப்படாத தொகைக்கு மொத்தம் 50 சதவீதம் வரி செலுத்த வேண்டும். 25 சதவீதம் முதலீடு * மேலும் கணக்கில் காட்டப்படாத வருமானத்தில் 25 சதவீத தொகையை, ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசு அறிவிக்கும் வறுமை ஒழிப்பு திட்டங்களில் சம்பந்தப்பட்ட நபர் முதலீடு செய்ய வேண்டும். * இந்த முதலீட்டுக்கு வட்டி கிடையாது. அத்துடன், 4 ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டு தொகையை திரும்ப பெற முடியாது. * இதன் மூலம் கிடைக்கும் தொகை நீர்ப்பாசனம், வீட்டு வசதி, கழிவறை வசதி, அடிப்படை கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவது, தொடக்க கல்வி, ஆரம்ப சுகாதாரம் ஆகிய திட்டங்களை நிறைவேற்ற பயன்படுத்தப்படும். கண்டுபிடிக்கப்பட்டால்... * காலக்கெடு முடிந்த பிறகும் யாராவது கணக்கில் காட்டாமல் பணத்தை பதுக்கி வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் தொகைக்கு 60 சதவீதம் வரியும், அந்த தொகைக்கு 25 சதவீதம் கூடுதல் வரியும் (அதாவது 15 சதவீத வரி) விதிக்கப்படும். அதாவது ஒட்டுமொத்தமாக பார்த்தால், கைப்பற்றப்படும் தொகையில் 75 சதவீதம் வரியாக பிடித்தம் செய்யப்படும். * வரி மதிப்பீடு செய்யும் வருமான வரித்துறை அதிகாரி விரும்பினால், கூடுதலாக 10 சதவீதம் அபராத வரி விதிக்கலாம். * அப்படி வருமான வரித்துறை அதிகாரி கூடுதலாக 10 சதவீதம் அபராத வரி விதித்தால், பதுக்கி வைத்த பணத்தில் 85 சதவீத தொகை வரியாக பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.Comments