பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே வருமான வரி திருத்த மசோதா, விவாதம் இன்றி நிறைவேறியது கருப்பு பணத்துக்கு கூடுதல் வரி, அபராதம் விதிக்கப்படும்

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே வருமான வரி திருத்த மசோதா, விவாதம் இன்றி நிறைவேறியது கருப்பு பணத்துக்கு கூடுதல் வரி, அபராதம் விதிக்கப்படும் | பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே வருமான வரி திருத்த மசோதா, விவாதம் இன்றி நிறைவேறியது. கருப்பு பணத்துக்கு கூடுதல் வரி, அபராதம் விதிக்கப்படும். வருமான வரித்துறை முடிவு ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, அவற்றை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு கடந்த 8-ந் தேதி அதிரடியாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை வங்கிகளில் மக்கள் டிசம்பர் 30-ந் தேதி வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். ரிசர்வ் வங்கியில் மார்ச் 31-ந் தேதி வரை டெபாசிட் செய்யவும் அவகாசம் தரப்பட்டுள்ளது. இதற்கிடையே, தனிநபர் வங்கி கணக்குகளில் ரூ.2½ லட்சத்துக்கு மேல் 'டெபாசிட்' செய்கிறபோது, அந்த கணக்குகளை ஆய்வு செய்து வரி விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. மசோதா இது தொடர்பாக 'வருமான வரிகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2016' என்ற மசோதாவை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அது பண மசோதாவாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நேற்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பரிசீலனைக்கு எடுத்து நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார். எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு ஆனால் அந்த மசோதாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய், சவுகதா ராய், பிஜூ ஜனதாதள உறுப்பினர் பர்த்ருஹரி மெஹ்தப் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், "உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ஒழிப்பில் இந்த மசோதா நேரடி தொடர்பு கொண்டதாகும். எனவே முதலில் ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் விதி எண் 56-ன் கீழ் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும்" என குரல் கொடுத்தனர். "சரி செய்ய வேண்டிய பல்வேறு குறைபாடுகளை கொண்டுள்ள ஒரு மசோதாவை, இவ்வளவு அவசர கதியில் நிறைவேற்ற அரசு ஏன் துடிக்கிறது?" என கேள்வி எழுப்பினர். அமளி ஆனால் அந்த மசோதா எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் வலியுறுத்தினார். இன்னொரு பக்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது நிதி மந்திரி அருண்ஜெட்லி எழுந்தாலும், அவரை மேற்கொண்டு செயல்பட விடாமல் எதிர்க்கட்சிகள் தடையாக நின்றன. அப்போது செய்தி, ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கோபம் கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து, "நீங்கள் மக்களின் நேரத்தைத்தான் வீணடிக்கிறீர்கள்" என குறிப்பிட்டார். ஓட்டெடுப்பு ஆனாலும் எதிர்க்கட்சியினர் கூச்சல், குழப்பத்தை தொடர்ந்தபோது சபாநாயகர் சுமித்ரா மகாஜன், "இந்த மசோதா நாட்டு நலனுக்கு முக்கியமானது. இந்த மசோதா மீது விவாதம் நடத்தவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் நீங்கள் நடந்துகொள்ளும் விதம், அதற்கு சாத்தியம் இல்லை என காட்டுகிறது" என கூறி மசோதாவை ஓட்டெடுப்புக்கு விட்டார். அந்த நேரத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள் ஒன்று சேர்ந்து சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு, ரூபாய் நோட்டு ஒழிப்பு பற்றிய பிரதமர் மோடியின் முடிவுக்கு எதிராக குரல் கொடுத்தனர். விவாதமின்றி நிறைவேறியது ஆனாலும் விவாதம் இன்றி, குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேறியது. அதைத் தொடர்ந்து சபையை நாளை வரை (இன்று வரை) ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். மசோதாமீது பிஜூ ஜனதாதள உறுப்பினர் பர்த்ருஹரி மெஹ்தப் கொண்டு வந்த ஒரு திருத்தம் நிராகரிக்கப்பட்டது. புரட்சிகர சோசலிஸ்டு கட்சி உறுப்பினர் பிரேமசந்திரன், காங்கிரஸ் உறுப்பினர் பி.வேணுகோபால் கொண்டுவந்த திருத்தங்கள், பிஜூ ஜனதாதள உறுப்பினர் பர்த்ருஹரி மெஹ்தப் கொண்டு வந்த மற்றொரு திருத்தம் ஜனாதிபதியின் ஒப்புதலை பெறாததால் அனுமதிக்கப்படவில்லை. வரி விதிப்பு விவரம் இந்த மசோதா, பாராளுமன்றத்தில் நிதி மசோதாவாக தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டிருப்பதால், மேல்-சபையில் நிறைவேற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதா கணக்கில் காட்டாத கருப்பு பணம் வைத்திருப்போர், டிசம்பர் 30-ந் தேதிக்குள் அதை வருமான வரித்துறையிடம் அறிவித்து, 50 சதவீத வரி செலுத்த வழிவகை செய்கிறது. மீதி 50 சதவீதத்தில் 25 சதவீதம், வரி செலுத்துகிறவருக்கு திரும்ப தரப்படும். எஞ்சிய 25 சதவீதம் 4 ஆண்டுக்கு திரும்பப்பெற முடியாத, வட்டி இல்லாத மத்திய அரசின் திட்டங்களில் முதலீடு செய்யப்படும். டிசம்பர் 30-ந் தேதிக்குள் அறிவிக்க தவறுகிற கருப்பு பண முதலைகளுக்கு, 60 சதவீத வரி, 25 சதவீத கூடுதல் வரி (இது வருமானத்தின் 15 சதவீதமாக இருக்கும்) என 75 சதவீதம் வரி விதிக்கப்படும். ஒருவரது கருப்பு பணத்தில் 75 சதவீதம் வரியாக சென்று விடும். அது மட்டுமின்றி வருமான வரித்துறை அதிகாரி மேலும் 10 சதவீத தொகையை அபராதமாகவும் விதிக்க முடியும். அப்படிப்பட்ட நிலையில், அறிவிக்கப்படாத கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் 85 சதவீத பணத்தை இழக்க நேரிடும்.Comments