கியூபா புரட்சியின் தந்தை பிடல் காஸ்ட்ரோ மரணம்

அமெரிக்காவுக்கு 50 ஆண்டுகள் சவாலாக திகழ்ந்த கியூபா புரட்சியின் தந்தை பிடல் காஸ்ட்ரோ மரணம் 638 கொலை முயற்சிகளில் உயிர் தப்பியவர் ஹவானா, நவ.27- அமெரிக்காவுக்கு சுமார் 50 ஆண்டு காலம் சவாலாக திகழ்ந்த கியூபா புரட்சியின் தந்தை பிடல் காஸ்ட்ரோ மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90. கியூபா முன்னாள் அதிபர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் அமைந்த தீவு நாடு கியூபா. இதன் பிரதமராக 1959-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந்தேதி தனது 32-வது வயதில் பிடல் காஸ்ட்ரோ பதவி ஏற்றார். 1976-ல் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தென் அமெரிக்க நாடுகளிலேயே நீண்ட காலம் ஒரு அதிபராக இருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். ரஷியாவுடன் மிக நெருக்கமாக இருந்த தென் அமெரிக்க கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவரும் ஆவார். மரணம் அடைந்தார் 2006-ம் ஆண்டு குடல் நோய் காரணமாக உடல் நலக்குறைவு அடைந்த பிடல் காஸ்ட்ரோ 2008-ம் ஆண்டு தனது அதிபர் பதவியை சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். உடல் நலக்குறைவுக்கு பின்பு அவர் அபூர்வமாகவே மக்கள் மத்தியில் தோன்றினார். இந்த நிலையில் அவருடைய உடல் நிலைமை மோசம் அடைந்தது. நேற்று முன்தினம் இரவு 10.30 மணி(இந்திய நேரப்படி நேற்று காலை 9.30 மணி) அளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90. உடல் தகனம் இந்த அறிவிப்பை அவருடைய சகோதரரும், கியூபாவின் அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். பிடல் காஸ்ட்ரோவின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து எடுக்கப்படும் சாம்பல் வருகிற 4-ந்தேதி சாண்டியாகோ டி கியூபா நகரில் புதைக்கப்படுகிறது. அதுவரை அவருடைய சாம்பல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும் என்று கியூபா அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் 4-ந் தேதி வரை தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் பொது நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது எனவும் அந்நாட்டு அரசு அறிவித்து இருக்கிறது. வாழ்க்கை குறிப்பு பிடல் காஸ்ட்ரோ 1926-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந்தேதி கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ ஸ்பெயின் நாட்டுக்காரர். தாயார் லினா கியூபாவைச் சேர்ந்தவர். வசதியான விவசாய குடும்பத்தில் பிறந்த பிடல் காஸ்ட்ரோ சிறுவயதில் பேஸ் பால் விளையாட்டில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். அமெரிக்க பேஸ் பால் லீக் கிளப் ஏதாவது ஒன்றில் சேர்ந்து விளையாடி புகழ்பெறவேண்டும் என்பது அவருடைய ஆர்வமாக இருந்தது. அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியது ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் சமூக அறிவியல் பட்டப்படிப்பு படித்தபோது அவருடைய சிந்தனை அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியது. அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்ட சர்வாதிகாரி பாடிஸ்டாவின் ஆட்சிக்கு எதிராக புரட்சியாளராக மாறினார். 1953-ம் ஆண்டு இளைஞர்களை திரட்டி கிழக்கு நகரான சாண்டியாகோவில் அரசுக்கு எதிராக போராடினார். இதில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. இதனால் பிடல் காஸ்ட்ரோவும் அவருடைய தம்பி ராவுலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புரட்சிக்குழு கோர்ட்டில் காஸ்ட்ரோவின் ஆவேசமான வாதம் நீதிபதிகளின் மனதை கரைய வைத்தது. இதனால் 1955-ம் ஆண்டு அவருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது. இதன்பிறகுதான் பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கையில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. மெக்சிகோ நாட்டில் அடைக்கலம் புகுந்த அவர் தென் அமெரிக்காவின் இன்னொரு புரட்சியாளரான சேகு வாராவுடன் இணைந்து புரட்சிக்கு குழு ஒன்றை உருவாக்கினார். 1956-ல் பாய்மரப் கப்பல்கள் மூலம் நாடு திரும்பினார். அவருடைய குழுவினர் திட்டமிட்டபடி கியூபாவுக்குள் ஒரே இடத்தில் கப்பல்களை கரைக்கு கொண்டு தரையிறங்க முடியவில்லை. வெவ்வேறு திசைகளில் சென்று விட்டனர். எனினும், கியூபாவின் கிழக்கு பகுதியான சியர்ரா மாஸ்ட்ரா மலைப்பகுதியில் பிடல் காஸ்ட்ரோவின் புரட்சி குழுவிற்கு அமோக ஆதரவு கிடைத்தது. 3 ஆண்டுகள் பாடிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக காஸ்ட்ரோவின் கொரில்லா படைகள் போராடின. அவருடைய புரட்சி படைகள் தலைநகர் ஹவானாவை 1959-ம் ஆண்டு ஜனவரி 8-ந்தேதி கைப்பற்றின. அதைத்தொடர்ந்து பிரதமர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு அதிபராகவும் ஆனார். ஆக்கிரமிப்பு முறியடிப்பு நாடு ஜனநாயக பாதைக்கு திரும்பும் என காஸ்ட்ரோ அறிவித்ததால் அமெரிக்கா முதலில் அவருக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் கடுமையான பொருளாதார சீர்திருத்தத்தை காஸ்ட்ரோ கியூபாவில் மேற்கொண்டார். அதன்பிறகுதான் பிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவின் எதிர்ப்பை அதிகம் சம்பாதிக்கத் தொடங்கினார். அவரை கொல்ல சதித்திட்டங்கள் அரங்கேறின. கியூபாவில் இருந்து வெளியேறி நாடு கடந்த நிலையில் இருந்தவர்கள் அமெரிக்க உளவு நிறுவனமான சி...வின் உதவியுடன் பன்றிகள் வளைகுடாவை ஆக்கிரமித்து நெருக்கடி கொடுத்தனர். அதை காஸ்ட்ரோ தோற்கடித்தார். அமெரிக்காவின் முக்கிய எதிரியான ரஷியாவின் பக்கம் சேர்ந்தார். விரைவிலேயே அமெரிக்காவுக்கு சவாலாகவும் திகழ்ந்தார். ஆப்பிரிக்காவில் விடுதலைக்காக போராடிய புரட்சி குழுக்களுக்கு ஆதரவாக தனது நாட்டின் குழுக்களை இவரும் சேகு வாராவும் இணைந்து அனுப்பினர். இந்த ஆதரவு 1977-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. அணுஆயுத போர்? இதற்கிடையே, 1962-ல் சோவியத் ரஷியாவின் அணு சக்தி ஏவுகணைகளை கியூபாவில் நிலை நிறுத்த உடன்பட்டதால் அமெரிக்காவும், ரஷியாவும் அணு ஆயுத போரில் ஈடுபடும் சூழல் உருவானது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப்.கென்னடி பகிரங்கமாகவே ரஷியா மீது குற்றம்சாட்டி கியூபா அருகே எந்த போர்க்கப்பலையும் நிறுத்தக் கூடாது என்று தடை விதித்தார். இதனால் பல வாரங்கள் கியூபா கடற்பகுதியில் பதற்றம் நீடித்தது. பின்னர், அப்போதைய ரஷிய அதிபர் குருஷேவ், அணுசக்தி ஏவுகணைகளை கியூபாவில் இருந்து திரும்பப் பெற்றார். இதனால் அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் நீங்கியது. என்றபோதிலும் கியூபாவின் மீதான அமெரிக்க வன்மம் அதிகரித்தது. பொருளாதார தடை ரஷியாவுடன் சேர்ந்து கொண்டு தனது நாட்டை எதிர்க்க துணிந்ததால் பிடல் காஸ்ட்ரோவை பதவியில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா துடித்தது. முதல் நடவடிக்கையாக கியூபாவிடம் இருந்து சர்க்கரை கொள்முதலை நிறுத்திக் கொண்டது. பதிலுக்கு காஸ்ட்ரோ அமெரிக்கர்களின் ஒரு பில்லியன் சொத்துகளை முடக்கினார். இதனால் அமெரிக்கா- கியூபா மோதல் மேலும் அதிகரித்தது. கியூபா மீது அமெரிக்கா வர்த்தக தடைகளை விதித்தது. 638 கொலை முயற்சி பிடல் காஸ்ட்ரோவை தீர்த்துக் கட்டுவதற்காக 638 சதித்திட்டங்களை அமெரிக்கா தீட்டி அதை கியூபாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் வழியாக அரங்கேற்றவும் முயற்சித்தது. என்ற போதிலும் சதிவேலைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அமெரிக்காவின் ஒவ்வொரு முயற்சியையும் அவர் துணிச்சலாக முறியடித்தார். பொருளாதார தடைகளையும் கியூபா மக்களின் ஒருமித்த ஆதரவால் வெற்றிகரமாக சமாளித்தார். தனது ஆட்சி காலத்தில் 11 அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு அவர் சுமார் 50 ஆண்டுகள் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். 1990-களில் சோவித் ரஷியா துண்டு துண்டாக சிதைந்த பிறகு அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே இருந்த பனிப்போர் மறையத் தொடங்கியது. ரஷியாவின் முழுமையான ஆதரவு சிதறியதால் கியூபாவின் பொருளாதாரம் ஊசலாடத் தொடங்கியது. இதனால் வெளிநாட்டு முதலாளிகளையும், தனியார் நிறுவனங்களையும் கியூபாவில் கொஞ்சம் கொஞ்சமாக தொழில் தொடங்க அனுமதித்தார். இதனால் கியூபாவிடம் இருந்து விலகி நின்ற தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய உறவை மீண்டும் புதுப்பித்துக் கொண்டன. போப் ஆண்டவர் பயணம் 1990-ம் ஆண்டு வரை கடவுள் மறுப்பு கொள்கையில் உறுதியாக இருந்த கியூபாவின் நிலைப்பாட்டில் மாறுதல் ஏற்பட்டதால் 1998-ம் ஆண்டு போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் அந்நாட்டு பயணம் செய்தார். இதன்பிறகு கியூபாவிற்கு சுற்றுலா வருவோரின் வெளிநாட்டு எண்ணிக்கை அதிகமாகி அந்நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறத் தொடங்கியது. அதே நேரம் அரசின் மீதான பிடல் காஸ்ட்ரோவின் பிடியும் உறுதி பெற்றது. 2006-ல் அவருக்கு குடல் பிரச்சினையால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரப் பொறுப்பை 2008-ம் ஆண்டு தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ வசம் அவர் ஒப்படைத்தார். 2014-ம் ஆண்டு முதல் ராவுல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் இணக்கமான உறவை பேணி வருகிறார். 2 மனைவிகள் மரணம் அடைந்த பிடல் காஸ்ட்ரோவுக்கு 2 மனைவிகள். 1948-ல் மிர்தா டயஸ்-பலார்ட் என்பவரை மணந்தார். அவர் மூலம் பிடலிடோ என்ற மகன் உண்டு. பின்னர் அவரை விவாகரத்து செய்தார். 1952-ல் நாட்டி ரெவுல்டா என்ற பெண் டாக்டரை திருமணம் செய்தார். இவர்களுக்கு அலினா என்ற மகள் பிறந்தார். இவர்கள் தவிர, செலியா சாஞ்செஸ் என்ற பெண் 1957-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு அவர் இறக்கும்வரை பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கைத் துணைவியாக இருந்தார் என்றும் கூறப்படுவது உண்டு. இதுதவிர டாலியா சோட்டோ என்ற பெண் மூலம் 5 குழந்தைகள் உள்ளதாகவும் 1980-ல் தகவல்கள் வெளியாயின. கியூபாவில் சோகம் பிடல் காஸ்ட்ரோவின் மரணத்தால் கியூபா நாடே சோகத்தில் மூழ்கி உள்ளது. இதுபற்றி ஹவானா நகரில் 22 வயது நர்சு தயான் மாண்ட்ல்வோ கூறும்போது, இது மிகப்பெரிய துயரம். நாங்கள் எல்லாம் அவருடைய காலத்தில் பிறந்து வளர்ந்தோம். அவருடைய மரணத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார். மெக்சிகோ ஜனாதிபதி என்ரிக் பெனா நியட்டோ டுவிட்டர் பதிவில், பிடல் காஸ்ட்ரோவின் மரணம் என்னை புலம்ப வைத்துள்ளது. 20-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய புரட்சி வீரராக அவர் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டு உள்ளார். தனது நாட்டின் விடுதலைக்கான அவருடைய இள வயது போராட்ட வாழ்க்கையும், அமெரிக்கா மீது எந்தவொரு நாட்டின் அதிபரும் காட்டாத, காட்டத் துணியாத எதிர்ப்பை பிடல் காஸ்ட்ரோ வெளிப்படுத்தியதும் அவருடைய பெயர் உலக வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கச் செய்யும் என்பது நிச்சயம்.Comments