மின் கட்டணம், குடிநீர் வரி உள்ளிட்ட விதிவிலக்கு அளிக்கப்பட்ட செலவுகளுக்கு பழைய ரூ.500 நோட்டை பயன்படுத்த ‘கெடு’ நீடிப்பு 15-ந் தேதி வரை கொடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு

மின் கட்டணம், குடிநீர் வரி உள்ளிட்ட விதிவிலக்கு அளிக்கப்பட்ட செலவுகளுக்கு பழைய ரூ.500 நோட்டை பயன்படுத்த 'கெடு' நீடிப்பு 15-ந் தேதி வரை கொடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு | மின் கட்டணம், குடிநீர் வரி உள்ளிட்ட விதிவிலக்கு அளிக்கப்பட்ட செலவுகளுக்கு, பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதற்கான 'கெடு'வை டிசம்பர் 15-ந் தேதி வரை மத்திய அரசு நீடித்து உள்ளது. நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 8-ந் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். பணத்தை மாற்றுவது முடிந்தது மக்கள் தங்கள் கைவசம் உள்ள அந்த ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும், மேலும் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அப்போது அவர் கூறினார். வங்கிகள், தபால் நிலையங்களில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கான 'கெடு' நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கால அவகாசம் நீடிக்கப் படவில்லை. இதனால் நேற்று வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் செல்லாத நோட்டு களை மக்கள் தங்கள் வங்கி கணக்கில் டிசம்பர் 30-ந் தேதி வரை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்பிறகும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இருந்தால் அவற்றை மார்ச் மாதம் வரை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். 'கெடு' நீடிப்பு செல்லாத 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அரசு ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், பால் அங்காடி, நுகர்வோர் கூட்டுறவு கடைகள், தகன மேடை, ரெயில் டிக்கெட்டுகள், அரசு பஸ் போக்குவரத்து, விமான டிக்கெட், மின்சாரம், குடிநீர் வரி, சமையல் கியாஸ் சிலிண்டர், புராதன இடங்களுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுக்கு பயன்படுத்த விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த 'கெடு'வும் நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால் இந்த 'கெடு'வை வருகிற டிசம்பர் 15-ந் தேதி வரை நீடித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- மின்சார கட்டணம் * அரசு ஆஸ்பத்திரி, பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பால் அங்காடி போன்ற விதிவிலக்கு அளிக்கப்பட்ட இடங் களில் 500 ரூபாய் நோட்டுகளை செலுத்தலாம். ஆனால் 1,000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது. * மத்திய, மாநில அரசு பள்ளிகள், நகரசபை, உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் ரூ.2,000 வரை கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம். * மத்திய, மாநில அரசின் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தலாம். * செல்போன்களுக்கு ரூ.500 வரை பிரீபெய்டு கட்டணம் செலுத்தலாம். * நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் ரூ.5,000 வரை பொருட்கள் வாங்க பயன் படுத்தலாம். * குடிநீர் வரி, மின்சார கட்டணம் மற்றும் பாக்கி தொகையை செலுத்தலாம். இது வீடுகளுக்கு மட்டும் பொருந்தும். * வெளிநாட்டினர் வாரத்துக்கு ரூ.5,000 ரூபாய் வரை வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொள்ளலாம். வெளிநாட்டு பணம் மாற்றப்படுவது பற்றிய விவரம் அவர்களுடைய பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்படும். மேற்கண்ட அம்சங்கள் அதில் இடம் பெற்று உள்ளன. சுங்க கட்டணம் ரத்து நீடிப்பு பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதால், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த 11-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி 9-ந் தேதி அறிவித்தார். அதன்பிறகும் பணப்புழக்கம் சீரடையாததால் சுங்க கட்டண ரத்து சலுகை 14-ந் தேதி வரையும் அதன்பிறகு 18-ந் தேதி வரையும், பின்னர் 24-ந் தேதி வரையும் அடுத்தடுத்து மூன்று முறை நீடிக்கப்பட்டது. நீடிக்கப்பட்ட சுங்க கட்டண ரத்து சலுகை நேற்று இரவு 12 மணியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் நிலைமை இன்னும் சீரடையாததால் சுங்க கட்டண ரத்து சலுகை வருகிற டிசம்பர் 2-ந் தேதி வரை நீடிக்கப்படுவதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று அறிவித்தார். பழைய 500 ரூபாய் நோட்டு இதுபற்றி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் எழுதியுள்ள அவர், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் சுங்க கட்டண ரத்து டிசம்பர் 2-ந் தேதி நள்ளிரவு வரை நீடிக்கப்படுவதாகவும், 3-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை சுங்க கட்டணம் செலுத்த பழைய 500 ரூபாய் நோட்டை பயன்படுத்தலாம் என்றும் கூறி உள்ளார். மேலும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மூலம் சுங்க கட்டணம் செலுத்த வசதியாக நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் உதவிகளுடன் 'சுவைப் மெஷின்' வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. தபால் அலுவலகங்களில் 'டெபாசிட்' இதற்கிடையே, பெரும் பணக்காரர்கள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை ஏழைகளிடம் கொடுத்து அவர்களுடைய சிறுசேமிப்பு கணக்குகளில் செலுத்த வைப்பதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து, தபால் நிலையங்களில் உள்ள சிறுசேமிப்பு கணக்குகள் மட்டுமின்றி பொதுவைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி ஆகிய சிறுசேமிப்பு திட்டங்களிலும் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை 'டெபாசிட்' செய்ய கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் தபால் அலுவலகங்களுக்கு மட்டும் இந்த தடையில் இருந்து மத்திய நிதி அமைச்சகம் விலக்கு அளித்து உள்ளது. அதாவது தபால் அலுவலகங்களில் உள்ள சேமிப்பு கணக்குகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை 'டெபாசிட்' செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் வங்கிகளில் உள்ள சிறுசேமிப்பு கணக்குகளில் அந்த ரூபாய் நோட்டுகளை செலுத்த அனுமதிக்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டு உள்ளது. இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.Comments