தமிழகத்தில் டிசம்பர் 2-ந் தேதிக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்

தமிழகத்தில் டிசம்பர் 2-ந் தேதிக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல் | தமிழகத்தில் டிசம்பர் 2-ந் தேதிக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 30 சதவீதம் மழை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. எனினும், முறையாக மழை பெய்யவில்லை. இதுவரை 30 சதவீதம் மழை மட்டுமே பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் பனிப் பொழிவு அதிகரித்து வருகிறது. இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:- 2 டிகிரி குறைவாக வெப்பநிலை தமிழகத்தில் அடுத்த 2, 3 தினங்களுக்கு மழையற்ற நிலையே காணப்படும். கடந்த 24 மணி நேர அளவில் தமிழகத்தில் எங்கும் மழை பெய்யவில்லை. தற்போது மழை இல்லாத காரணத்தால் மேக மூட்டம் காணப்படவில்லை. இந்த நிலையில், வடக்கில் இருந்து குளிர் காற்று வீசுவதாலும், இரவு நேரத்தில் கடலில் இருந்து குளிர் காற்று வீசுவதாலும் பகல் நேரத்தில் வழக்கமான வெப்பநிலையை விட 2 டிகிரி வெப்பநிலை குறைவாக காணப்படுகிறது. டிசம்பர் 2-ந் தேதிக்கு பிறகு... டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் போது, மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே டிசம்பர் 2-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments