-->

Sunday, October 9, 2016

அறைகளை அழகு செய்யும் ஜன்னல் வகைகள்

அறைகளை அழகு செய்யும் ஜன்னல் வகைகள்
ஜன்னல் வடிவங்கள் தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்படுகின்றன. வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்திற்கான தேவை என்ற காரணங்களுக்காக அமைக்கப்பட்டாலும், தற்போதைய நாகரிக வளர்ச்சிகள் அவற்றின் தோற்றத்தை வெவ்வேறு நிலைகளுக்கு எடுத்து சென்றிருக்கின்றன.
இன்றைய வடிவங்கள்
'சாளரம்' என்று பழைய காலங்களில் அழைக்கப்பட்ட ஜன்னல்கள் மரத்தால் செய்யப்பட்டு பொருத்தப்பட்டன. பிறகு 'ரீ-இன்போர்ஸ்டு கான்கிரீட் ஜாலி' என்று கான்கிரீட் கொண்டும் தயார் செய்யப்பட்டன. இப்போதைய 'கிரீன் பில்டிங்' கட்டமைப்பு தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக மரங்களை தவிர்த்து, 'யு.பி.வி.சி', 'பி.வி.சி', 'அலுமினியம்' மற்றும் 'பைபர் கிளாஸ்' போன்ற பொருட்களால் ஜன்னல்கள் வடிவமைக்கப்படுகின்றன. மரங்களால் செய்யப்பட்ட ஜன்னல்களோடு ஒப்பிடும்போது அவை விலை மற்றும் பராமரிப்பு போன்றவை குறைந்த அளவில்தான் இருக்கின்றன. அதனால் 'ரெடிமேடு மெட்டீரியல்ஸ்' உபயோகம் என்ற அவசிய சூழ்நிலையில் அவை வரவேற்பை பெற்றிருக்கின்றன. ஜன்னல்கள் அமைப்பு பற்றிய சில முக்கியமான குறிப்புகளை இங்கே காணலாம்.
ஜன்னல் வகைகள்
கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட வகைகள் ஜன்னல் வடிவமைப்பில் இருக்கின்றன. அவற்றில் சில வகைகள் மட்டுமே நமது பகுதிகளில் புழக்கத்தில் இருக்கின்றன. நமது நாட்டு தட்பவெப்ப நிலை காரணமாக ஜன்னல்கள் நடுத்தரமான அளவுகளில் பொருத்தப்படுவது வழக்கம். மேலும் காற்று மற்றும் மழை காலங்களில் வீட்டிற்குள் அதன் பாதிப்புகள் ஏற்படாமல் அதன் வடிவமைப்புகள் எளிதில் மூடவும், திறக்கவும் ஏற்றவாறு இருப்பதில்தான் கவனம் செலுத்தப்பட்டது.
பல்வேறு அளவுகள்
அழகியல் சார்ந்த பார்வைகள் ஜன்னல் வடிவமைப்பில் பெரிய அளவில் நமது பகுதியில் கடைபிடிக்கப்படுவதில்லை. ஜன்னல் அமைப்புகளில் உட்புறம் அல்லது வெளிப்புறம் திறப்பது, கீழ்புறம் அல்லது மேல்புறம் திறப்பது, இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக பக்கவாட்டில் திறப்பது மற்றும் வெளிச்சம் கருதி திறக்க இயலாத அமைப்பாக பொருத்துவது என்று பல விதங்களில் உள்ளன. பல்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும் நமது வசதிக்கு தக்கவாறு அவை தற்போது தயாரிக்கப்பட்டு சந்தையில் கிடைக்கின்றன.
மர ஜன்னல்
மரத்தால் ஜன்னல்கள் செய்யப்படுவது மிகவும் பழைய முறையாகும். மரங்கள் தேர்வு, அளவுகள், கண்ணாடிகள், திறந்து மூட உதவும் கைப்பிடிகள் மற்றும் 'கீல்கள்' ஆகியவை கச்சிதமாக இருக்க வேண்டும். மேலும் அழகான வண்ணம் மிகவும் அவசியமான ஒன்று. ஜன்னல்கள் மட்டும் அமைப்பதற்கு ஆட்கூலி மற்றும் பொருட்கள் ஆகியவை வீட்டின் மொத்த பட்ஜெட்டில் 4 முதல் 6 சதவிகிதம் வரை ஆகலாம். இந்த கணக்கு மரத்தால் செய்யப்படும் ஜன்னல்களுக்கு எனும் பட்சத்தில் வேறுவகையான 'மெட்டீரியல்களை' பயன்படுத்தும்போது விலை குறைவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
'அலுமினிய ஜன்னல்கள்'
அலுமினிய ஜன்னல்கள் மரத்தை விடவும் எடை மற்றும் விலை குறைவாகவும், அமைப்பதற்கு எளிதாகவும் இருக்கும். குறைவான பராமரிப்புகள் போதும் என்பதால் அதிகமாக சூரிய வெளிச்சம் படியும் இடங்களில் இவற்றை அமைத்தால் பொருத்தமாக இருக்கும்.
'பி.வி.சி' மற்றும் 'யு.பி வி.சி' ஜன்னல்கள்
'பிளாஸ்டிக்' பயன்பாட்டில் அதிநவீன முறையாக இவை இருக்கின்றன. மரம் மற்றும் அலுமினிய ஜன்னல்களை விடவும் எடை குறைவாகவும், கையாள்வதற்கு மிக எளிதாகவும் இருப்பது இதன் தனித்தன்மையாக உள்ளது. மழை அல்லது பனி காலங்களில் ஏற்படும் ஈரப்பதம் காரணமாக பாதிப்புகள் இவற்றில் ஏற்படுவதில்லை. அதனால் மழைச்சாரல் வரக்கூடிய இடங்களில் இவ்வகை ஜன்னல்களை அமைக்கலாம்.
'பைபர் கிளாஸ்' ஜன்னல்கள்
மேற்கண்ட ஜன்னல் அமைப்புகளோடு ஒப்பிடும்போது உறுதியாகவும், எடை குறைவாகவும், அழகிய தோற்றதுடனும் இருப்பவை 'பைபர் கிளாஸ்' ஜன்னல்கள். விலை சற்று அதிகமாக இருந்தாலும் வீட்டின் அழகை அதிகரித்து காட்டுவதாக அமையும். அனைத்து தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்றதாக இவை இருக்கின்றன.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.