-->

Friday, October 7, 2016

தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு தி.மு.க. சார்பில் ‘கேவியட்’ மனு தாக்கல்

தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு தி.மு.க. சார்பில் 'கேவியட்' மனு தாக்கல்
தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது. இது தொடர்பாக, தி.மு.க. சார்பில் 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.
உள்ளாட்சி தேர்தல்
இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த அறிவிப்பை தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தன. அதன்படி, தமிழகம் முழுவதும் மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 840 பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஐகோர்ட்டில் வழக்கு
இதற்கிடையே இந்த தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீட்டை வழங்கவில்லை என்றும், இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்' என்றும் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவசர கதியில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதாக மனுதாரர் வக்கீல் குற்றம் சுமத்தி வாதிட்டார். இதையடுத்து, அவசர கதியில் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டன.
ரத்து
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் நேற்று முன்தினம் இடைக்கால தீர்ப்பை வழங்கினார். அதில், இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கை ஏற்க முடியாது என்றும், அந்த கோரிக்கையை நிராகரிப்பதாகவும் உத்தரவிட்டார்.பின்னர், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட விதம் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்துக்கு எதிராக உள்ளது. சட்டவிதிகளை அப்பட்டமாக மீறி தேர்தல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்கிறேன். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், பஞ்சாயத்து சட்டவிதிகளை பின்பற்றி தேர்தல் அறிவிப்பாணையை புதிதாக வெளியிடவேண்டும். இந்த உள்ளாட்சி தேர்தலை வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் கூறி இருந்தார்.
தி.மு.க. 'கேவியட்' மனு
மேலும், தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருப்பவர்களின் பதவி காலம் இம்மாதத்துடன் முடிவடைவதால், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்யலாம் என்று கருதி, தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் நேற்று காலையில் அவசர அவசரமாக 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டது.அதாவது, 'தனி நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தால், தங்கள் (தி.மு.க.) தரப்பின் கருத்துக்களை கேட்காமல், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்கக் கூடாது' என்று அந்த 'கேவியட்' மனுவில் கூறப்பட்ட இருந்தது.
மேல்முறையீடு
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் நேற்று ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். நேற்று பிற்பகலில் அவர் தாக்கல் செய்த அந்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது:உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு வழங்கி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கடந்த செப்டம்பர் 16-ந் தேதி பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்துத்தான் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி என்.கிருபாகரன், 4-ந் தேதி இடைக்கால தீர்ப்பை பிறப்பித்துள்ளார். அதில், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தும், புதிதாக தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
வேட்புமனு பரிசீலனை
மேலும் அந்த உத்தரவில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது ஏதாவது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா? என்பதை வேட்புமனுவுடன் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதை தாக்கல் செய்யவில்லை என்றால் வேட்பாளர்களின் வேட்புமனுவை நிராகரிக்கவேண்டும் என்றும் கூறி உள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறேன்.தமிழக உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை தொடங்கிவிட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டனர். அந்த வேட்புமனுக்களை எல்லாம் பரிசீலனை செய்யும் நடவடிக்கை வரை வந்துவிட்டது. இந்த நிலையில், தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
உத்தரவிட முடியாது
தேர்தல் நடவடிக்கை தொடங்கிவிட்டால், அந்த தேர்தல் தொடர்பாக நீதித்துறை உத்தரவுகளை பிறப்பிக்கமுடியாது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை தொடங்கிய பின்னர், அந்த தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார்.இந்த உத்தரவினால், தேர்தல் நடவடிக்கைகள் அனைத்துமே நின்று விட்டன. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 243 (கே)-வின் படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும். இதன்படி, தற்போது அக்டோபர் 24-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும்.எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இந்த ஐகோர்ட்டு தடை விதிக்கவில்லை என்றால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இன்று விசாரணை?
இந்த மேல்முறையீட்டு வழக்கை வியாழக்கிழமை (இன்று) அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் முறையிடப்போவதாக மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார். அதனால், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.