-->

Friday, October 7, 2016

ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் ஜூனியர்

ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் ஜூனியர்
அமெரிக்காவின் எலக்ட்ரிகல் தொழில் முன்னோடியான ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் ஜூனியர் (George Westinghouse Jr) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
நியூயார்க்கின் சென்ட்ரல் பிரிட்ஜ் என்ற இடத்தில் பிறந்தார் (1846). தந்தை இயந்திர சாதனம் விற்பனை யாளர். தனது 15-வது வயதில் அமெரிக்காவில் நியூயார்க் நேஷனல் கார்ட் படையில் சேர்ந்தார். பெற்றோர் வலியுறுத்தியதால் வீடுவந்தார்.
ஆனால், 1863-ல் பெற்றோர் அனுமதி யுடன் மீண்டும் படையில் சேர்ந்தார். அடுத்த ஆண்டே ராணுவத்திலிருந்து விலகி, துணைப் பொறியாளராக கப்பற் படையில் சேர்ந்தார்.
இயந்திரங்கள், மின்சாரம் குறித்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 19-ம் வயதில் ரோட்டரி நீராவி இயந்திரத்தைக் கண்டறிந்து அதற்கான காப்புரிமையும் பெற்றார். 21-வது வயதில் 'கார் ரீப்ளேசர்' என்ற சாதனத்தைக் கண்டறிந்தார். இது தடம் மாறும் ரயில்களை மீண்டும் அவற்றின் பாதையில் செல்ல வழிகாட்டியது.
ஒவ்வொரு ரயில் பெட்டிக்கும் தனித்தனியான பிரேக்குகள் இருந்தன. எனவே ப்ரேக் பிடிப்பதற்காக ஒவ்வொரு பெட்டியாகச் செல்ல வேண்டியிருந்தது. 1869-ல் இதற்கு ஒரு தீர்வு கண்டார். காற்றுத் தடுப்புக் கருவியில் உள்ள ஒற்றை பைப் ரயில் முழுவதும் இணைக்கப்பட்டு அனைத்துப் பெட்டிகளின் பிரேக்குகளையும் கட்டுப்படுத்தியது. இதன்மூலம் ஒரே நேரத்தில் அத்தனை பெட்டிகளுக்கும் சேர்த்து பிரேக் போட முடிந்தது.
ரயில்வே சிக்னல் அமைப்பிலும் பல மேம்பாடுகளைக் கொண்டுவந்தார். தனது 'சிக்னலிங் மற்றும் ஸ்விட்சிங்' கண்டுபிடிப்பு சாதனங்களை உற்பத்தி செய்வதற்காக 1881-ல் 'யூனியன் ஸ்விட்ச் அன்ட் சிக்னல்' நிறுவனத்தைத் தொடங்கினார். மின் ஆற்றல் பகிர்மானம் குறித்து பல மின் பொறியாளர்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அமெரிக்காவின் ஆரம்பகட்ட மின்னமைப்பை வடிவமைப்பதில் தாமஸ் ஆல்வா எடிசனின் போட்டியாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார்.
இவரது மின் விநியோக அமைப்பு மாறுதிசை மின்னோட்ட முறையை அடிப்படையாகக் கொண்டது. இது எடிசனின் நேர்திசை மின்னோட்ட முறைக்கு மாற்றானது. 1886-ல் மின்சார நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். பல்வேறு நகரங்களில் இதன் கிளைகள் பரவின. பிரபல மின்பொறியாளர் நிக்கோலா தெஸ்ஸாவுடன் இணைந்து மாறுதிசை மின்னோட்டம் மின்மாற்றியை உருவாக்கினார்.
இந்நிறுவனம் தொலைதூர மின் பரிமாற்றம் மற்றும் உயர் மின்ன ழுத்த மாறுதிசை மின்னோட்ட அமைப்புக்கான முன்னோடி யாகவும் விளங்கியது. இவை வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கும் மின்கடத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தன. இதனால் இந்நிறு வனம் அமெரிக்கா முழுவதும் மின்சாரத்தைக் கொண்டு சேர்த்தது.
1893-ல் இவரும் நிக்கோலா தெஸ்ஸாவும் இணைந்து உருவாக்கிய, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பான மாறுதிசை மின் னோட்ட மின்மாற்றி, முதன்மையான மின்னோட்ட மின்மாற்றியாக உருவெடுத்தது.
60-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைத் தொடங்கினார். இவர் மட்டுமே 631 காப்புரிமைகளைப் பெற்றார். மாறுதிசை மின்னோட்டத் துறையில் இவரது குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளுக்காக எடிசன் பதக்கமும், பல்வேறு விருதுகளும் கவுரவங்களும் பெற்றார்.
இவரது நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் கிளைபரப்பியுள்ளது. இறுதிவரை தன் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்தவரும், 'அமெரிக்கத் தொழிற்துறையின் கேப்டன்' என்று போற்றப்பட்டவருமான ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் ஜூனியர் 1914-ம் ஆண்டு மறைந்தார்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.