-->

Wednesday, September 28, 2016

மூடிய புத்தகங்களை வாசிக்கும் கருவி!

மூடிய புத்தகங்களை வாசிக்கும் கருவி!
எதிர்காலம் ரகசியங்கள் நிறைந்தது. அது நமக்காக என்ன வைத்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள யாருக்குத்தான் ஆசை இல்லை? ஆனால் அதைத் துல்லியமாக நமக்கு எடுத்துச் சொல்லத்தான் உலகில் யாருமில்லை. மேலும், அதைக் கண்டறிய இதுவரை எந்த தொழில்நுட்பமோ கருவியோ கூட கண்டறியப்படவில்லை!
ஆனால் மிகவும் சுவாரசியமாக, அமெரிக்காவிலுள்ள மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்.ஐ.டி) மற்றும் ஜியார்ஜியா டெக் ஆகியவற்றின் ஆய்வு மையங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களின் குழு ஒன்று மூடியிருக்கும் புத்தகங்களின் உள்ளே இருக்கும் எழுத்துகளை வாசிக்கும் அசாதாரண திறன்கொண்ட அட்டகாசமான கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
ஒரு தாளின் உள்ளே ஊடுருவிச் சென்று அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளில் உள்ள மையிற்கும், வெற்றுத் தாளுக்கும் உள்ள வித்தியாசத்தின் அடிப்படையில் அந்த தாளில் எழுதப்பட்டிருக்கும் விவரங்களை அடையாளம் கண்டறிந்து வாசிக்க உதவுகிறது இந்தக் கருவி. அதிசயமான இந்த கருவி தொடக்க நிலையில் உள்ளது.
தற்போதைய நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு தாள் கட்டில் இருக்கும் முதல் 9 தாள்களில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பதை துல்லியமாக வாசிக்கிறது என்கிறார், Nature Communications எனும் பிரபல அறிவியல் இதழில் வெளியாகி உள்ள இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர் மற்றும் எம்.ஐ.டி மீடியா லேப்பின் ஆய்வாளர்களில் ஒருவரான பர்மாக் ஹெஷ்மாட்!
இது என்ன விந்தையாக இருக்கிறதே? மூடியிருக்கும் தாள்களில் உள்ள எழுத்துகளை வாசிக்கக் கூடிய கருவியா? இது எப்படி சாத்தியமாகும்? என்பது போன்ற கேள்விகள் எழுகிறதுதானே?
உண்மைதான். மின்காந்த அலைக்கற்றை (electromagnetic spectrum) யில் உள்ள நுண் அலைகள் (microwaves) மற்றும் அகச் சிவப்பு ஒளி (infrared light) ஆகியவற்றிற்கு இடையில் இருக்கக் கூடிய ஒளியின் அலை நீளத்தைக் கொண்ட 'டெராஹெர்ட்ஸ் கதிரியக்கம்' (terahertz radiation) எனப்படும் கதிரியக்கத்தின் அடிப்படையில் இந்த புதிய கருவி இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலைய பாதுகாப்புக் கருவிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இந்த டெராஹெர்ட்ஸ் கதிரியக்கமானது எக்ஸ்ரே போன்ற படம்பிடிக்கும் தொழில்நுட்பங்களை விட அதிக பலன்கள் கொண்டது என்று கூறப்படுகிறது. உதாரணமாக, வெவ்வேறு ரசாயனங்கள் வெவ்வேறு அளவிலான டெராஹெர்ட்ஸ் கதிரியக்கத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை என்பதால் ஒவ்வொரு ரசாயனத்தால் உறிஞ்சப்படும் குறிப்பிட்ட அளவு டெராஹெர்ட்ஸ் கதிரியக்கத்துக்கு ஏற்ப அந்த ரசாயனத்துக்கென ஒரு தனித்துவமான முத்திரையை உருவாக்குகின்றன. அதாவது தாளில் உள்ள மையின் வண்ணத்துக்கு ஏற்றவாறு ஒரு தனித்துவமான முத்திரை எந்திரத்தால் உருவாக்கப்படும். பின்னர் அந்த முத்திரையின் அடிப்படையில் அது வெற்றுத் தாளா அல்லது அது தொடர்பான எழுத்து எதுவென்று கண்டறியப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் சுவாரசியமாக, ஒரு புத்தகத்தின் பக்கங்களுக்கு இடையில் 20 மைக்ரோமீட்டர் அளவு கொண்ட காற்றுப் பைகள் இருக்கின்றன. அத்தகைய காற்றுப் பைகளுக்கும் தாளுக்கும் இடையில் உள்ள ஒளியை வளைக்கும் தன்மை அல்லது refractive index ல் உள்ள வித்தியாசத்தை சிறு அளவுகளிலான டெராஹெர்ட்ஸ் கதிரியக்கத்தைக் கொண்டு கணக்கிடுவதன் மூலம் இந்த கருவியானது புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு பக்கத்தையும் அடையாளம் காண்கிறது.
அதன் பிறகு, புத்தகத்தின் தாள்களில் உள்ள மை மற்றும் வெற்றுத் தாள் ஆகியவை உறிஞ்சும் ஒளியின் அளவில் உள்ள வித்தியாசத்தின் அடிப்படையில் புத்தகத்தின் தாள்களில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளை உருவத்தை உருவாக்குகிறது இந்த கருவி என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்தக் கருவியில் உள்ள பல்வேறு அல்காரிதங்கள் ஒன்றாக செயல்படுவதன் மூலம் தாள்களில் உள்ள எழுத்துகளுடைய துல்லியமான உருவம் உருவாக்கப்படுகிறது.
மூடிய புத்தகங்களின் பக்கங்களில் உள்ள எழுத்துக்களை இனம் கண்டறிய முயலும்போது இந்தக் கருவி எதிர்கொள்ளும் சவால்களில் முக்கியமானது எதுவென்றால், புத்தகத்தில் உள்ள தாள்கள் அல்லது எழுத்துகளில் உள்ள மைகள் ஆகியவற்றால் பெரும்பான்மையான டெராஹெர்ட்ஸ் கதிரியக்க ஒளியானது உறிஞ்சப்பட்டாலும், இவை இரண்டிலும் படாமல் கருவியின் உணர்கருவி அல்லது டிடெக்டரைச் சென்றடையும் இறைச்சல் (noise) எனப்படும் கதிரியக்கம்தான்.
இந்த தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்த புதிய கருவியால் தற்போது 20 பக்கங்களுக்கு மேல் படிக்க முடிவதில்லை. அதனால் தற்போது இந்தக் கருவியால் 9 பக்கங்கள் வரைதான் வாசிக்க முடியும் என்று விளக்குகிறார் ஆய்வாளர் ஹெஷ்மாட். ஆனால் 'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி' என்பதற்கிணங்க, டெராஹெர்ட்ஸ் கதிரியக்க தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் காரணமாக, இந்த கருவியைப் போன்ற எதிர்கால கருவிகள் தாள் கட்டுகள் அல்லது புத்தகங்களில் உள்ள ஆழமான பக்கங்களையும் வாசிக்கும் அதீத திறன் கொண்டவையாய் இருக்கும் என்கிறார்கள் ஹெஷ்மாட் உள்ளிட்ட டெராஹெர்ட்ஸ் கதிரியக்க தொழில்நுட்ப விஞ்ஞானிகள்.
அதெல்லாம் சரி, புத்தகங்களை திறந்து வாசித்துவிட்டு போகலாமே? திறக்காமல் வாசிக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழலாம். நியூயார்க்கிலுள்ள மெட்ரோபாலிட்டன் நூலகம் போன்ற நூலகங்களில் உள்ள ant-i-que bo-oks எனப்படும் மிகவும் அரிதான மற்றும் தொடக்கூட முடியாத தொன்மையான நூல்களையும், கோப்புகளையும் வாசிக்க இத்தகைய கருவிகள் பயன்படும் என்கிறார் ஆய்வாளர் ஹெஷ்மாட்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.