பதிலடி அவசியம்

பதிலடி அவசியம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தின் உரி நகரில் உள்ள இந்திய ராணுவத்தின் டோக்ரா படைப்பிரிவு தலைமையகத்தில் இருக்கும் முகாம் மீது பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதல், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசும், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அள்ளிவீசிக் கொண்டிருக்கின்றன.பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மீது கடந்த ஜனவரி மாதம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்தும், இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றன. அப்போதும் பாகிஸ்தான் மீது இதே குற்றச்சாட்டைத்தான் மத்திய அரசு முன்வைத்தது. பாகிஸ்தானும் ஒப்புக்கு பதில் அறிக்கை வெளியிட்டது.ஆனால், பதான்கோட் தாக்குதல் நடந்து ஏழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், உரியில் மீண்டும் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல்களில் 120-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில் பொதுமக்களும் அடங்குவர்.இவற்றில், கலூசக் பகுதியில் ராணுவம் மீது கடந்த 2002-ஆம் ஆண்டு மே மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் அதிகபட்சமாக 36 பேர் பலியாகினர்; 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.உரி பகுதியில் உள்ள மொக்ராவில் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், பாதுகாப்புப் படையினர் 12 பேர் இறந்தனர். ஜம்மு-காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.இதனுடன், மும்பை, தில்லி, பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் பிற நகரங்களில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரத் தாக்குதல்களிலும், குண்டுவெடிப்புகளிலும் பலியானோர் எண்ணிக்கையும் சேர்த்தால், பல நூறைத் தாண்டும்.முந்தையத் தாக்குதல்களின்போது, அப்போது மத்தியில் இருந்த அரசை குற்றம்சாட்டிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்கள்தான் தற்போது ஆட்சியில் உள்ளனர். அவர்கள் முந்தைய அரசு செய்த தவறை செய்யாமல், பாகிஸ்தானுக்கு பதிலடி அளிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பது அவசியமாகும்.உரி தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்பட்டு உள்ளது. அந்நாட்டின் நட்பு நாடான சீனா கூட, உரி தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.இதை இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டும்.இந்தக் கருத்தை, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்ற அர்த்தத்திலோ, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் அதிரடித் தாக்குதல் போன்ற தாக்குதலை இந்தியா நடத்த வேண்டும் என்ற அர்த்தத்திலோ பார்க்கக் கூடாது.போரைக் காட்டிலும், பாகிஸ்தானுக்கு அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய பல நடவடிக்கைகள் உள்ளன.உரியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானுக்கு முக்கியப் பங்கிருப்பதை சர்வதேச அளவில், ஆதாரத்துடன் இந்தியா வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக பொருளாதார தடை போன்ற தடைகளை விதிக்க வேண்டும். இந்தியாவைப் போன்று பாகிஸ்தானை பரம எதிரியாக கருதும் மற்றோர் நாடான ஆப்கானிஸ்தான் மூலம், அந்நாட்டின் வழியாக மத்திய ஆசிய நாடுகளுக்கு பாகிஸ்தான் மேற்கொள்ளும் வர்த்தகத்துக்கு முட்டுக்கட்டை போடலாம். ஈரான் மூலமும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு தடை போடலாம்.பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவே பொருளாதார தடை போன்ற தடைகளை விதிப்பதோடு, தனது நட்பு நாடுகளையும் அதை பின்பற்றச் செய்ய வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்து நிதியுதவி, ஆயுத உதவி கிடைக்கிறது என்பதைக் கண்டறிந்து, அப்படி உதவி செய்பவர்கள் மீது இந்தியா தாமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் தேனும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அந்த நடவடிக்கையால், இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்கும்பட்சத்தில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் நேரிடும். பொருட்சேதமும் அதிகம் ஏற்படும்.ஆனால், மேற்கண்ட நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் சமயத்தில், அதனால் இந்தியாவுக்கு நிச்சயம் அதிக பாதிப்புகள் இருக்காது. பாகிஸ்தானுக்கே அதிக பாதிப்புகள் இருக்கும்.எனவே, இந்தியா இனியும் பொறுமை காக்காமல், உரி தாக்குதல் சம்பவத்துக்குக் காரணமான பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி தர வேண்டும்.


Comments