குழந்தைகளின் கிரக தோஷம் போக்கும் நாமபுரீஸ்வரர்

குழந்தைகளின் கிரக தோஷம் போக்கும் நாமபுரீஸ்வரர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ளது தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவில். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், புகழ்பெற்றதுமான இந்த ஆலயம் 1305-ம் ஆண்டு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த சிவாலயத்தில் 35 கல்வெட்டுகள் உள்ளன. சோழ மன்னராலும், பாண்டிய மன்னராலும் சமரசம் செய்து கொண்டு கட்டப்பட்டு இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆலயத்தின் தலவிருட்சமாக காசி வில்வம் விளங்குகிறது. இங்கு குரு தட்சிணாமூர்த்தி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் ரிஷபத்தோடும், 4 ரிஷிகளுக்கு பதிலாக 2 ரிஷிகள் மற்றும் முயலகனோடு வீற்றிருப்பது வித்தியாசமான தோற்றமாக உள்ளது.
சைவமும், வைணவமும்
சிவாலயமான இங்கு மகாவிஷ்ணுவுக்கும், ஆஞ்சநேயருக்கும், இவர்களுக்கு எதிர்புறம் மகாலட்சுமிக்கும் தனிச் சன்னிதிகள் இருப்பது சிறப்புக்குரியதாகும். சைவமும், வைணவமும் இணைந்த இந்த ஆலயத்திற்கு வந்து சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். வழக்கமாக சனிக்கிழமை வரும் பிரதோஷமே, மகா பிரதோஷம் என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆலயத்தில் புதன்கிழமையில் வரும் பிரதோஷம்தான் சிறப்புக் குரியதாக உள்ளது. புதனுக்கும், சனீஸ்வரனுக்கும் அதிதேவதையாக மகாவிஷ்ணு இருப்பதால், இத்தல சிவனையும், விஷ்ணுவையும் வணங்கினால் சனி, புதன் கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு, நெற்றியில் திருநாமம் உள்ளது. இதனால் இத்தல சிவபெருமானுக்கு நாம புரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இங்கு காசி பைரவர், காலபைரவர், சூரியன், குழந்தை வடிவாக பால சனீஸ்வரர் ஆகியோர் தனிச் சன்னிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி தினத்தன்று காலபைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகிய மூவரையும் வழிபட்டால் அனைத்து விதமான பலன் களையும் பெறலாம்.
தத்து கொடுக்கப்படும் குழந்தைகள்
ஜாதகரீதியான கிரக தோஷங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் உபாதைகள் அகல்வதற்கு, இந்த ஆலயத்தில் குழந்தைகளை தத்து கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு சில விதிமுறைகளும், வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அவற்றைப் பார்க்கலாம்.
ஜாதக ரீதியாக கிரகதோஷம் உள்ள குழந்தைகளை இந்த ஆலயத்தில் தத்துக் கொடுக்கும்போது, குழந்தைகளின் தாய்-தந்தை அவசியம் வர வேண்டும். குழந்தையின் தாய்மாமா அல்லது குழந்தையின் தாய் வழி உறவினர் யாராவது, பெற்றோரிடம் இருந்து கோவில் சார்பாக குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு ஏற்கனவே உள்ள பெயரை மாற்றாமல், புதியதாக ஆலயத்தில் வைக்கின்ற பெயரை வைத்து கூப்பிட வேண்டும். உதாரணத்திற்கு ஏற்கனவே கார்த்திகேயன் என்று பெயர் வைத்திருக்கலாம். தத்துக் கொடுத்தப் பின் கோவிலில் ஈஸ்வரன் என்று பெயர் வைக்கிறார்கள் என்றால், ஈஸ்வரன் (எ) கார்த்திகேயன் என்று பெயர் வைத்துக் கொண்டு, வாயால் கூப்பிடும்போது ஈஸ்வரன் என்றே அழைக்க வேண்டும். ஏதாவது கோவில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்தால் கூட ஈஸ்வரன் (எ) கார்த்திகேயன் என்று முழு பெயரைச் சொல்லியே அர்ச்சனை செய்ய வேண்டியது கட்டாயம்.
பிற தெய்வங்களுக்கோ, குலதெய்வத்திற்கோ குழந்தைகளின் பெயரில் வேண்டுதல் இருந்தால் தத்துக் கொடுப்பதற்கு முன்பாகவே அதைச் செய்வது நல்லது. ஏனெனில் தத்துக் கொடுத்தபின்னர் ஒரு மாதத்திற்குள் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கே முடி காணிக்கை போன்ற நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும். அதன்பிறகே பிற தெய்வங்கள், குலதெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்த முடியும்.
திருமண பந்தம்
பிள்ளை வளர்ந்து திருமணம் ஆகும் சமயத்தில், முன்னதாகவே ஆலயத்திற்கு தகவல் தெரிவித்து குழந்தையை முறையாக பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது குழந்தையின் நினைவாக ஆலயத்திற்கு அவர்கள் பெயரில் ஏதாவது பொருளை உபயமாக வழங்குவது நன்மை தரும். திருமணத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காகவோ, காரண காரியங்கள் இல்லாமலோ குழந்தையைப் பெற்றுச் செல்லக் கூடாது. தத்துக் கொடுத்தவர் களின் திருமண காலங்களில், சுவாமிக்கு பட்டு வஸ்திரம், மாலை சாத்தி திருமண தம்பதிகள் வழிபடுவதால் அவர்களுக்குள் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை. இதை மெய்பிக்கும் வகையில் இன்றும் முகூர்த்த நாட்களில் 15 முதல் 20 திருமணங்கள், திருமண நிச்சயதார்த்தங்கள் இந்த ஆலயத்தில் நடைபெறுவதைக் காணலாம்.
இந்த தத்துக் கொடுக்கும் பிரார்த்தனையால், ஜாதகத்தில் தோஷம் உள்ள குழந்தைகள் பலன் பெறுவதோடு, அவர்களை கோவில் சார்பில் தத்து பெறும் உறவினர்களும் பலன் பெறுவார்கள்.
சூரியனின் வழிபாடு
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 25-ந் தேதி முதல் தை மாதம் 10-ந் தேதி வரை அதிகாலை 6.30 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் சூரியபகவான் தன்னுடைய ஒளிக்கதிர்களால் சிவபெருமானை சிவபூஜை செய்யும் அற்புதக் காட்சியை நேரில் தரிசிக்கலாம். இந்த அற்புத நிகழ்வை மூன்று நிமிடம் மட்டுமே காண முடியும்.
சிறப்பு மிகுந்த இந்த ஆலயத்தில் ராஜகோபுரம் மற்றும் திருக்கோவில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று கடந்த 28-1-2007 அன்று வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தது.


Comments