-->

Thursday, September 15, 2016

சமையல் அறையில் கவனம் செலுத்த வேண்டும்

சமையல் அறையில் கவனம் செலுத்த வேண்டும்
இல்லத்தரசிகள் பெரும்பாலான நேரத்தை செலவிடும் இடமாக சமையலறை இருக்கிறது. அக்னி மூலையில் சமையலறை அமைப்பது மட்டுமல்லாமல் அதை 'மாடுலர் கிச்சன்' ஆகவும் நவீன கட்டமைப்புகளுடன் உருவாக்கிக்கொள்வதையும் அவர்கள் விரும்புகிறார்கள். தினசரி வாழ்க்கையின் அவசர அவசியங்களுக்கு ஈடு செய்வதுபோல விரைவாக சமையல் செய்து முடிக்கும்வகையில் பல்வேறு வசதிகள் கொண்டதாக சமையலறையை இல்லத்தரசிகள் அமைத்துக்கொள்கின்றனர். நீரும், நெருப்பும் மற்ற உணவுப்பொருட்களும் சரளமாக புழங்கும் இடமாக இருப்பதால் சுத்தத்திலும், சுகாதாரத்திலும் கவனம் கொள்வது அவசியம். காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்கள் யாவும் தற்போது ரசாயனங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுவதோடு, சில இடங்களில் செயற்கை முறையில் பதப்படுத்தபட்ட பின்பு விற்பனைக்கு வருவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
சமையலறை சுத்தம்
சமையலறையில் காணப்படும் கிருமிகள் 'இ-கோலை', 'சால்மொனெல்லா', 'காம்பைலோபாக்டர்' போன்று பல விதங்களாக இருக்கின்றன. கிருமிகள் பெரும்பாலும் கைகள், துணிகள், உணவுப்பொருட்கள் ஒன்றோடு ஒன்று புழங்குவதாலும், சமையலறைக்குள் வரும் வளர்ப்பு பிராணிகள் மூலமாகவும் பரவுகின்றன. அதனால் வாரம் ஒருமுறை சமையலறை முழுமையாக சுத்தம் செய்யப்படவேண்டும். குளிர்சாதனப்பெட்டி, பாத்திரம் கழுவும் 'சிங்க்' ஆகியவற்றில் கிருமிகள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. சமையலறையில் இருக்கும் 'டஸ்ட் பின்' வெளிப்புறமாக வைக்கப்படுவது முக்கியம். பாத்திரங்கள் அல்லது உணவுப்பொருட்களில் பூஞ்சை படர்ந்திருந்தால் அவற்றை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சமையல் நேரத்தில்..
சமைக்கும்போது 'ஏப்ரன்' என்ற முன்புறம் அணியக்கூடிய தடுப்பு ஆடையை கட்டிக்கொள்ளலாம். தலைமுடியை 'கவர்' செய்து கட்டிக்கொள்வது சிறந்தது. சமைப்பவர் கை நகங்கள் கச்சிதமாக வெட்டப்பட்டு, சுத்தமாக இருப்பதோடு, அதிகமாக ஆபரணங்கள் இல்லாதிருப்பது நல்லது. கைகளில் வெட்டுக்காயங்கள் இருந்தால், சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதனால் 'பாக்டீரியாக்கள்' உணவில் பரவுவதை தடுக்க முடியும். அவ்வப்போது கைகளை சுத்தம் செய்து கொள்வது அவசியம். 'சோப்பு' அல்லது 'ஹேண்ட்வாஷ்' கொண்டு கையை சுத்தம் செய்வதோடு துணியால் துடைக்கலாம். அடுப்பில் இருக்கும் பாத்திரத்தின் மீது கவனம் இருப்பது முக்கியம். துடைக்கும் துணிகள், 'பிளாஸ்டிக் கவர்' போன்றவற்றை அடுப்புக்கு தொலைவில் வைக்கவும்.
உணவுப்பொருட்கள் சேமிப்பு
'ரெப்ரிஜிரேட்டரில்' அதிகப்படியான காய்கறிகள் மற்றும் இறைச்சி வகைகளை நாட்கணக்கில் சேர்த்துவைப்பது தவறு. காய்கறிகளை சுத்தப்படுத்தும் சமையலறை 'சிங்க்'-ல் இறைச்சியை கழுவாமல் கிச்சனுக்கு வெளியே கழுவ வேண்டும். இறைச்சி மற்றும் காய்கறிகளை நறுக்குவதற்காக தனித்தனியாக கத்திகள் மற்றும் 'கட்டிங் போர்டு' ஆகியவற்றை பயன்படுத்துவது சுகாதாரமாக இருக்கும். வெளியே வாங்கப்படும் பழ வகைகள் அல்லது சில 'ஆர்கானிக்' பொருட்கள் மீது 'புரூட் பிளை' எனப்படும் பழ ஈக்கள் உட்காரும் காரணத்தால் அசுத்தமாக இருக்கலாம். அதனால் பழங்களை நன்றாக கழுவிய பின்பு உண்ணலாம் அல்லது 'பிரிட்ஜில்' வைக்கலாம். சமைக்கப்பட்ட பொருட்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக வெளியில் இருக்க வேண்டாம். அவற்றை 'பிரிட்ஜில்' வைத்து பயன்படுத்தலாம். உண்ணும்போது சரியான வெப்பம் இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும். சமைக்காத உணவையும், சமைத்த உணவையும் ஒன்றாக வைத்திருப்பது தவறான முறையாகும்


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.