இந்திய விண்வெளி தந்தை விக்ரம் சாராபாய்!

இந்திய விண்வெளி தந்தை விக்ரம் சாராபாய்!
விக்ரம் சாராபாய்

உலக விண்வெளி ஆராய்ச்சி யில், இந்தியா தனித்துவம் பெறுகிறது. உலக நாடுகளின் விலை மதிப்பில்லாத செயற்கைக்கோள்களை, இந்திய மண்ணில் தயாரிக்கப்பட்ட விண்கலங்களே சுமந்து செல்கின்றன. இவைமட்டுமின்றி கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளையும் இந்தியா உருவாக்கி உள்ளது. இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்தவர் விண்வெளி விஞ்ஞானியான விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆராய்ச்சி யின் தந்தையாக போற்றப்படும் அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், விண்வெளி ஆராய்ச்சிகளையும் இந்தக் கட்டுரையில் காண்போம்..!
தோற்றம்
விக்ரம் சாராபாய் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 1919-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் "விக்ரம் அம்பாலால் சாராபாய்". பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கியவர், 1939-ம் ஆண்டு இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான் கல்லூரியில் இயற்கை விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்தார். அதற்கு பின் இந்தியாவுக்கு திரும்பிய விக்ரம் சாராபாய், பெங்களூருவில் உள்ள இந்திய விஞ்ஞானக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு பணியாற்றிய விஞ்ஞான மேதை சர்.சி.வி.ராமனின் வழிகாட்டுதலின்படி, அகிலக்கதிர் விளைவுகளின் Cosmic Ray Effects ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதற்காக இவருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
கலைஞானி
விக்ரம் சாராபாய் கலை ஆர்வம் மிக்கவர். கலைமேல் இருந்த மோகத்தால் அவர், கேரள நாட்டிய கலைஞர் மிருணாளினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். மனைவியுடன் சேர்ந்து, "தர்பனா கலைக்கூடத்தை" அமைத்து இந்திய நாட்டின் பூர்வீகக் கலைகளுக்கு புத்துயிர் அளித்தார். இதன்மூலம் அழியும் நிலையில் இருந்த பல கலைகளின் வளர்ச்சிக்கு பங்காற்றினர்.
ஆய்வு
அகமதாபாத்தில் இயற்பியல் ஆய்வுக்கூடத்தை நிறுவி தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். அங்கு இந்திய மேலாண்மை மையம் (Indian Institute of Management) என்ற புகழ்பெற்ற கல்வி மையத்தையும் தொடங்கி நடத்தினார். இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவு மையத்தை அமைத்து, இந்தியாவில் முதன் முதலாக ராக்கெட்டை வடிவமைத்து, அதற்கான சோதனை திட்டங்களை வகுத்தார்.
இதற்கு அடுத்தபடியாக செயற்கைத் துணைக்கோள் [Artificial Satellite] ஏவும் திட்டத்தை வகுத்தார். அப்பணிகளில் அவருடன் உழைத்தவர் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆவார். துணைக் கோள்களின் வழியாகக் கல்வியைத் தொலைக்காட்சி சாதனங்களின் [Satellite Instructional Television Experiment (SITE)] மூலம் ஒளிபரப்பி கிராமங்களில் பாமர மக்களும் பயில வசதி செய்தார்.
தனது ஆராய்ச்சிகளால், இந்திய விண்வெளி யுகத்தின் தந்தை என்று போற்றப்பட்ட, விக்ரம் சாராபாய் 1971-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி 52-வது வயதில் மறைந்தார்.
பாராட்டு
* பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி இந்திய அரசு இவரைப் பெருமைப்படுத்தி உள்ளது.
* நிலவிலுள்ள அமைதிக்கடல் (Sea of Serenity) பகுதியில் உள்ள ஒரு பெருங்குழிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
* திருவனந்தபுரத்திலுள்ள தும்பா ராக்கெட் ஏவுதள மையத்திற்கு, இவரது நினைவைப் போற்றும் வகையில் 'விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.


Comments