-->

Tuesday, September 27, 2016

முதல் படை வீடு திருப்பரங்குன்றம்

முதல் படை வீடு திருப்பரங்குன்றம்
மதுரை நகரிலிருந்து தென்மேற்கே 7 கி.மீ தொலைவில் உள்ளது முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம்.  சங்க இலக்கியமான அகநானூறில் "தனி மழை பொழியும் தன் பரங்குன்றம்'' என்று திருப்பரங்குன்றம் பாடப்பட்டுள்ளது. அடிப்படையில் இது சிவத்தலம். ஆனால் அருணகிரிநாதர், திருமுருகாற்றுப்படையில் முருகனின் முதல் படை வீடாக போற்றி பாடியதால், திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் தலமாகவே அறியப்படுகிறது.
வாயு தேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களுக்குள் 'யார் பலசாலி' என்று போட்டி ஏற்பட்டது. அப்போது மேரு மலையை வாயு தேவன், கையிலெடுத்து எறியப் பார்த்தார். ஆதிசேஷன், மலையை நகர விடாமல் தடுத்து பிடித்துக் கொண்டார். இந்த இழுபறியில் மேருவின் சில சிகரங்கள் உடைந்து நெடுந்தூரம் சென்று விழுந்ததாகவும், அந்த சிகரங்களில் ஒன்றுதான் 'பரங்குன்றம்' என்றும் கூறப்படுகிறது.
கைலாயத்தில் சிவபெருமான் பிரணவ மந்திரத்தை பார்வதிக்கு உபதேசித்த போது, அன்னையின் மடியில் அமர்ந்திருந்த முருகப்பெருமான், ஆழ்ந்து கவனித்து கற்றுக் கொண்டாராம். முறையாக குருவிடம் இருந்து கற்க வேண்டிய மந்திரத்தை, நேரடியாக கேட்டது பாவம் என்பதால், பரிகாரம் தேடினார் முருகன். இதற்காக பூலோகத்தில் தவம் செய்ய பரங்குன்றத்தில் அமர்ந்தார். அப்போது தைப்பூச திருநாளில் அம்மையும், அப்பனும் (ஸ்ரீஆவுடைநாயகி-ஸ்ரீபரங்கிரிநாதர்) அவருக்கு காட்சி தந்தனர் என்றும் கூறப்படுகிறது.
அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றத்தில் மட்டுமே முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இத்திருத்தலம் குடவறை கோயில். இங்கு முருகனின் வேலுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது தனிச்சிறப்பு. முருகனை மணமுடிக்க வேண்டி தெய்வானை இங்கு தவமிருந்துள்ளார். திருப்பரங்குன்றம் கோயிலில் மயில் மண்டபம், பதினாறு கால் மண்டபம், அடுத்து 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கோயிலின் வாயிலில் விநாயகர் மற்றும் துர்க்கை. கருப்பண்ணசுவாமி, ஆடல் வல்லானான ஸ்ரீநடராஜர், அருகே தாளம் கொட்டும் சிவகாமி, பதஞ்சலி- வியாக்ரபாதர், உக்ரதாண்டவர், கஜ சம்ஹாரமூர்த்தி, சுப்பிரமணியர், பார்வதி- பரமசிவன், மகாலட்சுமி- மகாவிஷ்ணு ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
சுனைகள், கிணறுகள், குளங்கள் என கோயிலில் தற்போது 13 தீர்த்தங்கள் மட்டுமே இருக்கின்றன, இங்குள்ள சரவண பொய்கையில் இருந்து, கோயில் யானையை வைத்து தீர்த்தம் எடுத்து, கொடி மரத்தில் அபிஷேகம் செய்த பிறகு, கோயில் திறப்பது வழக்கம்.
மலை உச்சியில் காசி தீர்த்தம் 
திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி வெள்ளிக்கிழமை வேலுக்கு சிறப்பு அபிஷேகம், கார்த்திகையில் மகா தீபத் திருவிழா, பங்குனியில் திருவிழா மற்றும் தேரோட்டம், தை மாத பூசம் மற்றும் வைகாசியில் விசாகத் திருவிழா போன்றவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில், மத ஒற்றுமைக்கான அடையாளமாக சிக்கந்தர் அவுலியா தர்காவும் உள்ளது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.