-->

Tuesday, September 27, 2016

மாவுச்சத்துடன் தொடர்புடைய புதிய சுவை கண்டுபிடிப்பு

மாவுச்சத்துடன் தொடர்புடைய புதிய சுவை கண்டுபிடிப்பு
'தானத்தில் சிறந்தது ரத்த தானம்' என்பார்கள். ஆனால் தற்போது உலகம் 'உடல் தானம்' அளிக்கும் அளவுக்கு மக்களிடம் ஆர்வம் வந்துவிட்டது. உடல் தானம் செய்யும் மனிதர்களும் பெருகி வருகிறார்கள். ஆனால் நம் பாரம்பரியத்தில் வேரூன்றியிருக்கும் தானம் எதுவென்று கேட்டால் அது 'அன்னதானம்' என்றுதான் கூற வேண்டும்.
அன்னதானம் குறித்து புலவர் சீத்தலைச் சாத்தனார் எழுதிய பாடல் ஒன்று ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் இடம்பெற்றுள்ளது.
'மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,
உயிர்க் கொடை பூண்ட உரவோய்!'
வற்றாமல் உணவை அள்ளித் தருகிற அமுதசுரபி என்கிற பாத்திரத்தை பெற்ற மணிமேகலையிடம் தீவதிலகை என்ற பெண், 'அணுக்களால் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் நீ உணவு கொடுத்தால், அது அவர்களுக்கு உயிரைக் கொடுத்ததற்குச் சமம். ஆகவே, உன்னுடைய அறிவைச் சரியானபடி பயன்படுத்து, எல்லாருக்கும் உயிரைத் தானமாகக் கொடு' என்பதே பாடலின் பொருள்.
உணவு மற்றும் அன்னதானத்தின் இன்றியமையாமையை இந்த சங்க இலக்கியப் பாடல் உணர்த்துவது போல, உணவு குறித்த அறிவியல் ரீதியிலான புரிதல்களை ஏற்படுத்த விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவின் ருசி அல்லது சுவைகள் தொடர்பான ஒரு சமீபத்திய ஆய்வில், மாவுச்சத்துடன் தொடர்புடைய ஆறாவது சுவை ஒன்றை சுவைத்து உணரும் திறன் மனிதர்களுக்கு உண்டு என்பது உலகில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தில் தற்போதுள்ள உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் உமாமி (மாமிச சுவை) ஆகியவை அடங்கிய சுவைகளின் பட்டியலில் அரிசி போன்ற சுவையுடைய அல்லது 'ஸ்டார்ச்சி' (starchy) எனும் ஒரு புதிய சுவையை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், மாவுச் சத்து சார்ந்த உணவுகளை நாம் ஏன் மிகவும் விரும்பி உண்கிறோம் என்பதற்கான காரணத்தையும் இந்த புதிய ஆய்வின் முடிவுகள் விளக்கக் கூடும் என்கிறார் அமெரிக்காவிலுள்ள ஒரிகான் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலைமை ஆய்வாளர் ஜுயூன் லிம்.
பொதுவாக, சர்க்கரை இனிப்பாகத்தான் இருக்கும். ஆனால் நீண்ட நேரம் அதை உண்ண முடியாது. ஏனென்றால் அது விரைவில் திகட்டிவிடும். ஆனால் அரிசி அல்லது ரொட்டி போன்ற மாவுச்சத்து சார்ந்த உணவை அதிக அளவில் நம்மால் உட்கொள்ள முடியும். இதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிய, லிம் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் 22 பேரைத் ஆய்வுக்காக தேர்ந்தேடுத்து மாவுச்சத்தை பல்வேறு அளவுகளில் கொண்ட பல திரவங்களைக் அவர்களிடம் கொடுத்து சுவைக்கச் சொன்னார்கள்.
அதன் பிறகு அதன் சுவை எப்படி இருக்கிறது என்று விளக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அதனடிப்படையிலேயே ஸ்டார்ச்சி அல்லது அரிசி போன்ற சுவை கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த 22 பேருக்கும் நாக்கில் உள்ள இனிப்பு சுவையை உணரும் ரிசெப்டர்களை தற்காலிமாக செயலிழக்கச் செய்யும் ஒரு மருந்தும், மாவுச்சத்தை சிறு கூறுகளாக உடைக்கும் என்சைமின் செயல்பாட்டைத் தடுக்கும் மற்றொரு மருந்தும் கொடுக்கப்பட்டது.
ஆய்வின் இந்த பரிசோதனையானது மிகவும் முக்கியமானது என்கிறார் லிம். ஏனென்றால், சுவை தொடர்பான இதுவரையிலான ஆய்வுகள் 'மனிதர்களால் மாவுச்சத்தின் சுவையை உணர முடியாது. மாறாக மாவுச்சத்து பல கூறுகளாக உடைக்கப்பட்டவுடன் எஞ்சியிருக்கும் சர்க்கரையின் சுவையைத்தான் மனிதர்களால் உணர முடியும்' என்று கூறியுள்ளன.
ஆனால், இனிப்பு சுவையை உணர்வதைத் தடுக்கும் மற்றும் மாவுச்சத்தை உடைக்கும் என்சைமை தடுக்கும் மருந்துகளை உட்கொண்ட பின்னும், ஆய்வில் கலந்து கொண்ட மனிதர்களால் ஸ்டார்ச்சி அல்லது அரிசி போன்ற சுவை ஒன்றை உணர முடிந்தது இந்த ஆய்வில் தெரியவந்தது.
ஆக, இனிப்பு சுவை அல்லாத மாவுச்சத்தின் தனிப்பட்ட ஒரு சுவையை உணரும் திறன் மனிதர்களுக்கு உண்டு என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்படுகிறது என்கிறார் லிம். மனிதர்களுடன் மிக அதிக காலம் தொடர்புடைய மாவுச்சத்து ஏன் நம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கிறது அல்லது அதை ஏன் அதிக அளவில் நாம் உண்கிறோம் என்பதற்கு இந்த ஆறாவது சுவை உணரும் திறன் கூட காரணமாக இருக்கலாம் என்கிறார் லிம்.
அடுத்ததாக, ஸ்டார்ச்சி எனும் ஆறாவது சுவையை உணர உதவும் நாக்கில் உள்ள குறிப்பிட்ட ரிசெப்டர்கள் என்னென்ன என்பதை கண்டறியத் தொடங்கியுள்ளது ஆய்வாளர் லிம்மின் ஆய்வுக்குழு.
தினசரி நாம் அதிக அளவில் உண்ணும் மாவுச்சத்து உணவு களின் சுவையை உணரும் திறன் மனிதர்களுக்கு உண்டு என்பதை உறுதிசெய்துள்ள இந்த ஆய்வு, நம் புலனறிவு மற்றும் நம் உணவு சார்ந்த ஒரு முக்கியமான புரிதலை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.