விண்வெளியில் டி.என்.ஏ. ஆய்வு செய்யும் கருவி!

விண்வெளியில் டி.என்.ஏ. ஆய்வு செய்யும் கருவி!


விண்வெளியில் உள்ள நாசா ஆய்வுக்கூடத்தில் இருக்கும் டி.என்.ஏ. சீக்குவென்சிங் பரிசோதனை கருவியுடன் விண்வெளி வீராங்கனை கேதே ரூபின்ஸ்.
'சித்திரமும் கைப்பழக்கம்' என்று கூறுவார்கள். அதாவது, எந்தவொரு விஷயத்தையும் தொடங்குவதற்கு முன்பு அது குறித்து பல குழப்பங்கள், கேள்விகள், ஐயங்கள் என பல சிரமங்கள் ஏற்படும்.
ஆனால் அவை அனைத்தையும் தாண்டி ஒரு முறைக்கு பல முறைக்கு குறிப்பிட்ட அந்த விஷயத்தை செய்து பார்த்துவிட்டால் 'அட, இவ்வளவுதானா? இதற்காகவா இவ்வளவு பயந்தோம்' என்று தோன்றும்.
அதுபோல, சமீபத்தில் உலக வரலாற்றில் முதல் முறையாக, உயிரினங்களின் டி.என்.ஏ.வில் உள்ள மரபியல் தகவல்களை கண்டறிய உதவும் டி.என்.ஏ. சீக்குவென்சிங் (DNA squen-cing) ஆய்வு விண்வெளியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆக்ஸ்போர்டு நானோபோர் டெக்னாலஜிஸ் (Oxford Nanopore Technologies) எனும் நிறுவனத்தின் தயாரிப்பான மின்அயான் (MinION) என்று அழைக்கப்படும் கைக்கு அடக்கமான ஒரு கருவி மூலம் விண்வெளியில் சாத்தியப்பட்டிருக்கும் முழுமையான டி.என்.ஏ சீக்குவென்சிங் ஆய்வை நாசாவின் விண்வெளி விஞ்ஞானி கேட் ரூபின்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி சுற்றுப்பாதையை சுற்றிவரும் ஒரு விண்கலத்தில் டி.என்.ஏ. சீக்குவென்சிங் பரிசோதனையானது சாத்தியமா இல்லையா என்பதைக் கண்டறியும் நோக்கத்திலான திட்டத்தின் (Biomolecule Sequencer experiment) ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வில், பூமியில் தயாரிக்கப்பட்ட பாக்டீரியா, பாக்டீரியோ பேஜ் (ஒரு வகை வைரஸ்) மற்றும் சில எலிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் விண்வெளியில் உள்ள (MinION) கருவியில் செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த டி.என்.ஏ. மாதிரிகள் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள, நானோ (ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு) அளவிலான துளைகள் கொண்ட 'நானோபோர்' சவ்வு வழியாக உள்சென்று அதன் மூலமாக டி.என்.ஏ சீக்குவென்சிங் பரிசோதனை நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, ஒரு விண்கலத்தை விண்ணில் ஏவும்போது உண்டாகும் மிகவும் சக்திவாய்ந்த அதிர்வுகள் மற்றும் விண்வெளியில் உள்ள விண்கல சுற்றுப்பாதையில் இருக்கக்கூடிய மோசமான சுற்றுச்சூழல், வித்தியாசமான ஈரப்பதம், வெப்பம் மற்றும் அழுத்தம் ஆகிய பல்வேறு வகையான தடைகளைத் தாண்டி அல்லது தாங்கி, பூமியில் மேற்கொள்ளப்படும் டி.என்.ஏ. சீக்குவென்சிங் பரிசோதனை முடிவுகளுக்கு நிகரான முடிவுகளை MinION கருவியானது விண்வெளியில் வெளியிட்டது என்பது தற்போதைய ஒரு பெரிய விண்வெளி ஆய்வு சாதனையாக கருதப்படுகிறது.
ஏனென்றால், விண்வெளியில் உள்ள மைக்ரோ கிராவிட்டி (micro gravity) என்று அழைக்கப்படும் மிக மிகக் குறைவான ஈர்ப்பு விசையில் டி.என்.ஏ. சீக்குவென்சிங் தொழில்நுட்பமானது எப்படி செயல்படும் என்பதைக் கண்டறிவது இதற்கு முன்னர் மிகவும் கடினமாக இருந்தது என்கிறார் ஆய்வாளர் ரூபின்ஸ்!
அதாவது, முதலாவதாக, புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் டி.என்.ஏ. சீக்குவென்சிங் ரசாயன நிகழ்வின் போது குமிழிகள் உண்டாகி MinION கருவியில் உள்ள நானோபோர்களை அது அடைத்துவிடுவதன் காரணமாக சீக்குவென்சிங் பரிசோதனை பாதிக்கப்படுமா? இரண்டாவதாக, விண்வெளியில் டி.என்.ஏ. மூலக்கூறுக்கு என்ன ஆகும்? ஆகிய இரண்டு முக்கியமான கேள்விகள் இந்த ஆய்வுக்கு முன்னர் விஞ்ஞானிகளுக்கு இருந்தது. ஆனால் இந்த ஆய்வின் வெற்றிக்கு பின்னர் விண்வெளியில் நிகழ்நேரத்தில் டி.என்.ஏ. போன்ற மரபுப்பொருளுக்கு எந்த வகையான மாறுதல்கள் ஏற்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விண்வெளியில் உள்ள கதிர்வீச்சு மற்றும் விண்வெளி ஆய்வாளர்களின் தூக்கத்தில் ஏற்படும் மாறுதல்கள் காரணமாக அவர்களின் உயிரணுக்களில் உள்ள மரபுக்கோப்பில் எந்த வகையான மரபியல் மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் இனி சுலபமாக கண்டறியக் கூடிய புதிய வாய்ப்பு இந்த ஆய்வு மூலம் ஏற்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
புரட்சிகரமான இந்த விண்வெளி டி.என்.ஏ. சீக்குவென்சிங் ஆய்வின் வெற்றியின் மூலம் விண்வெளி ஆய்வாளர்களின் நல்வாழ்வு பராமரிப்பு பல மடங்கு மேம்படும் என்பது மகிழ்ச்சியான செய்தி என்கிறார்கள் விஞ்ஞானிகள். உதாரணமாக, இதற்கு முன்னர் ஒரு விண்வெளி ஆய்வாளருக்கு நோய்கள் அல்லது ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டால் அவர்களின் உடல் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் மாதிரிகளான சிறுநீர், ரத்தம் மற்றும் திசு போன்றவற்றை பூமியில் உள்ள பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி அதன் முடிவுகள் வரும்வரை தங்களுக்கு என்ன குறைபாடு என்பதே தெரியாமல் காத்திருப்பார்கள்.
ஆனால் இனி அந்த நிலை மாறிவிடும். அதுமட்டுமல்லாமல், பூமி தவிர்த்த (விண்வெளி உள்ளிட்ட) இடங்களில் உள்ள டி.என்.ஏ. மூலக்கூறை அடிப்படையாகக் கொண்ட பிற உயிர் வகைகள் (ஏலியன் போன்றவை) இருந்தால் அவற்றை விண்வெளி டி.என்.ஏ. சீக்குவென்சிங் மூலம் அடையாளம் காணலாம் என்கிறார் இந்த ஆய்வுத் திட்டத்தின் மேலாளர் மற்றும் நாசாவின் நுண்ணுயிரியல் விஞ்ஞானியான சாரா காஸ்ட்ரோ வாலஸ்.
முக்கியமாக, விண்வெளி ஆய்வின்போது தங்களைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலில் எந்த வகையான நுண்ணுயிர்கள் இருக்கிறது என்பதை டி.என்.ஏ. சீக்குவென்சிங் மூலம் கண்டறிந்து பின்னர் அதற்கு தேவையான ஆண்டிபயாடிக் மருந்து பயன்பாடு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்கிறார் வாலஸ்!
ஆக மொத்தத்தில், விண்வெளி உயிரியல் துறையின் பிறப்பை முதல் முறையாக உறுதி செய்துள்ள Min ION கருவியானது மேலதிக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதால் விண்வெளி உயிரியல் தொடர்பான பல ரகசியங்களை நாம் விரைவில் தெரிந்துகொள்ளலாம் என்கிறார் உலக விண்வெளி ஆய்வாளர்கள்.


Comments