கல்வெட்டில் கணபதி வழிபாட்டுச் சரித்திரம்!

கல்வெட்டில் கணபதி வழிபாட்டுச் சரித்திரம்!
தமிழ்நாட்டிலுள்ள பல கல்வெட்டுகள் 'கணபதி வழிபாடு' தமிழ்நாட்டில் வளர்ந்து வந்துள்ள விதத்தை விவரிக்கின்றன. கி.பி. 5ம் நூற்றாண்டிலேயே கணபதி வழிபாடு தமிழ்நாட்டில் பரவத் தொடங்கி விட்டது. பிள்ளையார்ப்பட்டிப் பிள்ளையாரே தமிழ்நாட்டின் மூத்த பிள்ளையாராக இருத்தல் வேண்டும் என்று வரலாற்று ஆய்வு அறிஞர்கள் கருதுகின்றனர். அங்கு பிராமி எழுத்தில் காணப்படும் கல்வெட்டே அதற்குச் சான்றாக அமைந்துள்ளது. பிள்ளையார் வணக்கம் தமிழ்நாட்டில் தோன்றிய ஆதிநாளிலேயே விநாயகர் உருவம்  அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்ற உண்மையை உணரலாம். அப்பருடைய தேவாரத்தில்தான் கணபதி பற்றிய முதற்குறிப்பு காணப்படுகிறது. மகேந்திரவர்மனின் (கி.பி. 600-630) மகனான நரசிம்மபல்லவனின் வாதாபிப் படையெடுப்பிற்கு முன்னமேயே அப்பர் கணபதியைக் குறித்துள்ளமையை நோக்கக் கணபதி வழிபாடு இங்கு தோன்றியதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. வல்லம் என்னுமிடத்தில் துவார பாலகர், சிவன் ஆகியோர் உருவச்சிலைகளுடன் விநாயகர் உருவமும் காணப்படுகிறது.
அதன் கீழ் உள்ள கல்வெட்டு மகேந்திரவர்மன் காலத்தது என்பதால் நரசிம்மவர்ம பல்லவன் காலத்திற்கு  முன்னமே இங்கு விநாயகர் வழிபாடு இருந்தது என்பதை இதுவும் வலியுறுத்துகிறது. பிள்ளையார்ப்பட்டிக் குடைவரை கோயிலிலுள்ள கணபதி சிற்பம் மற்றும் வேலஞ்சேரி, உத்திரமேரூர் ஆகிய இடங்களிலுள்ள புடைப்புச் சிற்பங்களிலிருந்து கணபதி வழிபாடு கி.பி. 5 அல்லது 6ம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டதை அறியலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரமேசுவர மங்கலம் கைலாசநாதர் கோயிலுக்கு வெளியேயுள்ள கல்லில் தமிழில் காணப்படும் கல்வெட்டு பல்லவ மன்னன் நிருபதுங்க வர்மனின் (கி.பி. 884) காலத்தில் வெட்டப்பட்டது. இதில் தண்டியன் கிழார் பாண்டி கிராம வீட்டார் மனைவி தேவச்சானி எனும் பார்ப்பனி சைலேசுரத்தில் 'கணபதி பட்டாரர்' கோயிலை நிறுவி அக்கோயில் வழிபாட்டிற்கு நெல் நன்கொடை கொடுத்த விவரம்  செதுக்கப்பட்டுள்ளது.
திருக்கோயிலூர் சிவன் கோயில் கல்வெட்டு முதலாம் ராஜராஜன் காலத்தது. (காலம் கி.பி. 991) இக்கல்வெட்டில் 'கணபதி நம்பி ஆரூரன்என்ற பெயர் காணப்படுகிறது. மக்களுக்குக் கணபதியின் பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது என்பதை இதன் மூலம் அறியலாம். தஞ்சைப் பெரிய கோயில் மேலைத் திருச்சுற்றில் முதல் கோட்டத்திலுள்ள தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு ராஜராஜன் கணபதியாருக்கு வாழைப்பழம் அமுது செய்தருளக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. பெரிய கோயில் திருச்சுற்றிலுள்ள பிள்ளையாருக்கு நாள்தோறும் 150  வாழைப்பழங்கள் படைக்க ஏற்பாடு செய்தான் என்ற விவரம் உள்ளது.
* கி.பி. 1009ல் முதலாம் ராஜராஜன் காலத்தில் திருவண்ணாமலை அருகில் உள்ள ஆவூர் திருத்தலத்தில் கணபதிக்கு கோயில் இருந்த விவரத்தை ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
* கி.பி. 1012ல் சிதம்பரம் வட்டத்தில் உள்ள ஆதிவராக நத்தம் என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டில் பிள்ளையாருக்குக் காணிக்கை அளித்த விவரம் உள்ளது. செய்யாற்றில் உள்ள ஒரு கல்வெட்டில் 'பரிவார தேவதை கணபதி' என்ற விபரம் உள்ளது.
* கி.பி. 1028ல் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் கல்வெட்டில் 'கணக்கெழுதிய கணபதி சிலை' பற்றிய விவரம் உள்ளது.
* கி.பி. 1051ல் முதலாம் ராஜாதிராஜன் காலத்தில் செய்யாற்றுக்கு அருகில் உள்ள கனாம் பந்தல் சிவன் கோயில் தெற்கு சுவரில் கெளசிகன் என்பவன் கணபதி கல்வெட்டு வெட்டினான் என்று கூறுகிறது.
* கி.பி. 1098ல் முதலாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில், கடலூருக்கு அருகில் உள்ள எய்தமூர் எனும் இடத்தில் உள்ள கணபதி கோயிலுக்கு விளக்கெரிக்க காணிக்கை கொடுத்த விவரம் உள்ளது.
* கி.பி. 1139ல் சடாஸ்ரீ வல்லப பாண்டியன் காலத்தில், திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள சிவபுரி சுயம் பிரகாசேஸ்வரர் ஆலயத்தில், அருவியூர் தேசிராயகப் பிள்ளையாருக்கு நிலம் வாங்கிய விவரம் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.
* கி.பி. 1144ல் குலசேகரசோழன் காலத்தில் திண்டிவனத்துக்கு அருகில் உள்ள மரக்காணம் ஆடவல்லீசுவரர் ஆலயத்தில் உள்ள உதயபிள்ளையாருக்கு நிலக்கொடையளித்த விவரம் கல்வெட்டில் உள்ளது.
* கி.பி. 1151ல் இரண்டாம் ராஜராஜன் காலத்தில், செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள செய்யூர் வன்மீக நாதர் கோயில் மண்டபத்தில் உள்ள, புற்றிடம் கொண்ட மகாதேவர் கோயிலில் உள்ள திருமாளிகைப் பிள்ளையாருக்கு ஆண்டில் குறிப்பிட்ட 32 நாட்களில் பூசை செய்யத் தங்கம் கொடுத்தவன் திறை தேவர்கந்தன் தங்குவான் உத்தம சோழவளவதரையன் என்றும் 32 நாட்களாவன அமாவாசை, பெளர்ணமி, உத்திராயணம், தட்சிணாயினம், கிரகண நாட்கள் மற்றும் கொடையளித்தவரின் தாயார் பிறந்த நாள் - பற்றிய விவரங்கள் கொண்ட கல்வெட்டு உள்ளது.
* கி.பி. 1156ல் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில், பழனிக்கு அருகில் உள்ள கீரனூர் வாகீஸ்வரர் கோயில் கல்வெட்டில் திருமாளிகைப் பிள்ளையாருக்கு நைவேத்தியம் படைக்க திருவெண்காட்டு நங்கை என்ற பெண் நிலக்கொடை கொடுத்த விவரம் பொறிக்கப்பட்டுள்ளது.
* கி.பி. 1156ல் வீரபாண்டியன் தமது 9ம் ஆட்சியாண்டில் பழனிக்கு அருகில் உள்ள பொருளூர் பெருமாள் கோயிலில் கணபதி சிலை பிரதிஷ்டை செய்யவும், தினமும் விளக்கேற்றவும் பணம் தந்தமை குறித்த கல்வெட்டு உள்ளது.
* கி.பி. 1185ல் கொங்கு வீர சோழ தேவர் காலத்தில், தாராபுரத்துக்கு அருகில் உள்ள அலங்கியம் கலியுக கண்ணீசுவரர் கோயிலில் உள்ள வடுகப் பிள்ளையாருக்கு விசு, அயன, சங்கராந்தி நாட்களில் வழிபட நிலக்கொடை அளித்த விவரம் ஒரு கல்வெட்டில் வடிக்கப்பட்டுள்ளது.
* கி.பி. 1190ல் சிவகங்கை மாவட்டம் திருமலை மலைக் கொழுந்தீசர் ஆலயத்தில் உள்ள குலசேகர பாண்டியன் திருமாளிகைப்  பிள்ளையாருக்கு நிலம் நன்கொடை கொடுத்த விவரம் ஒரு கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.
* கி.பி. 12ம் நூற்றாண்டில் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேஸ்வரர் ஆலயத்துக்கு, பூவனூர் சூரியதேவன் என்பவன் விநாயகப் பிள்ளையார் சிலை நிறுவியதும், குன்றேறப் படிகளும் கட்டினான் என்ற விவரம் கல்வெட்டில் உள்ளது.
* கி.பி. 12ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த சோழ மன்னன் இரண்டாம் ராஜாதிராஜன். திருக்கோவிலூர் அருகில் உள்ள கீழூர் வீரட்டானேஸ்வரர் ஆலயத்திற்கு பெரியானைப் பிள்ளையார் மற்றும் அழகிய பிள்ளையாருக்கு நன்கொடையளித்த விவரம் ஒரு கல்வெட்டில் உள்ளது.
* கி.பி. 1200ல் மூன்றாம் குலோத்துங்க சோழர் தேவர் காலத்தில் குளத்தூருக்கு அருகில் உள்ள நீர்ப்பழனி வளர்மதீஸ்வரர் கோயிலுள்ள க்ஷேத்திரப் பிள்ளையாருக்கு குடமுழுக்கு செய்த விவரம் ஒரு கல்வெட்டில் உள்ளது.
* கி.பி. 1216ல் திண்டிவனத்துக்கு அருகில் உள்ள மரக்காணம் ஆடவல்லீஸ்வரர் கோயிலில் பெரிய விநாயகப் பிள்ளையாரை நிறுவி நிலக்கொடையளித்து விளக்கெரிப்பதற்கும் பெரியராச்சியார் என்ற பெண்மணி தானம் அளித்த விவரம் ஒரு கல்வெட்டில் உள்ளது.
* கி.பி. 1220ல் வீர ராஜேந்திர தேவன் காலத்தில் திருவலஞ்சுழி க்ஷேத்திரப் பிள்ளையாருக்கு வாணிகன் ஒருவன் அச்சுப் பொன் அளித்த கல்வெட்டு காணப்படுகிறது.
* கி.பி. 1250ல் இரண்டாம் சுந்தரபாண்டியன் காலத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதில் முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள திருமாலுகந்தான் கோட்டை கருணா கடாட்சி அம்மன் கோயிலில் உள்ள இருகை மதவாரணப் பிள்ளையாருக்கு தானமாக அளிக்கப்பட்ட ஊருக்கு மன்னன்  வரியை நீக்கினான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* கி.பி. 1261ல் முதலாம் சடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் புதுக்கோட்டை கீரமங்கலம் பிரதட்சேகரர் கோயிலில் உள்ள 'பிழை பொறுத்த பிள்ளையாரின்' மகிமையைப் பொதுமக்கள் தீர்மானித்த விவரம் ஒரு கல்வெட்டில் உள்ளது.
* கி.பி. 1281ல் கொங்கு வீர பாண்டிய தேவர் ஆட்சிக் காலத்தில் கோயில் பாளையத்தில் உள்ள காலகாலீஸ்வரர் கோயிலில் தரவல்ல பிள்ளையாருக்கு அந்தி விளக்கேற்ற இரு சிவபிராமணர்கள் ஒப்புக் கொண்ட விபரம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
* கி.பி. 13ம் நூற்றாண்டில், குலோத்துங்கசோழ தேவர் ஆட்சிக்காலத்தில் திருமயம் காரையூர் திருமஞ்சனேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கயிலை செல்லப் பிள்ளையாருக்கு நைவேத்தியமாக திருப்பண்ணியாரம் செய்ய கேரளன் மங்களாதேவன் கொடை கொடுத்த விபரம் ஒரு கல்வெட்டில் உள்ளது. இப்படியாக கி.பி. 5ம் நூற்றாண்டு முதற்கொண்டு பிள்ளையார் வழிபாடு பற்றிய விவரங்கள் கல்வெட்டு களில் காணப்படுகின்றன. மேலும் விநாயகப் பெருமானுக்கு காணிக்கை, சிலை பிரதிஷ்டை, நிலக்கொடை, வரி நீக்கம், மண்டபம் அமைத்தல், விழா கொண்டாட, விளக்கெரிக்க, சோறு சமைக்க என்று பலவிதமான கொடைகள் 13ம் நூற்றாண்டுவரை பொது மக்களும், மன்னர்களும்  வழங்கிய செய்திகள் எண்ணற்ற கல்வெட்டுகளில் காணக் கிடக்கின்றன. முழு முதற் கடவுளை அவரே ஏராளமான கல்வெட்டுகளில் 'நாயகனாகச்' சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறார்.
* கி.பி. 18ம் நூற்றாண்டிற்குப் பின் மராட்டியர் வருகையால் சதுர்த்தி விரதம் சிறப்பிடம் பெற்றது.


Comments