சினிமா விமர்சனம் : வாய்மை

சினிமா விமர்சனம் : வாய்மை


கதாநாயகன்-கதாநாயகி: சாந்தனு-பானு
டைரக்‌ஷன்: செந்தில் குமார்
கதையின் கரு: தூக்கு தண்டனையில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற போராடும் இளைஞன்.
கணவரை இழந்த பூர்ணிமா பாக்யராஜ் கூலி வேலைகள் செய்து தனது ஒரே மகன் பிருத்வியை வளர்த்து ஆளாக்குகிறார். பிருத்விக்கு புதிதாக கட்டப்படும் அடுக்கு மாடி குடியிருப்பில் கார்பெண்டர் ஒப்பந்த வேலை கிடைக்கிறது. அந்த கட்டிடத்துக்கு தாயை அழைத்து சென்று காட்டி மகிழ்ச்சியில் இருக்கும்போது அதே கட்டிடத்தில் இருந்து ஒருவன் மக்கள் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருக்கும் முக்கிய புள்ளியை குறிபார்த்து சுட்டுக்கொல்கிறான்.
அந்த கொலைப்பழி பிருத்வி மீது விழுந்து கோர்ட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உயிரை இழக்கிறார். மகனை இழந்த துக்கத்தில் இருக்கும் பூர்ணிமா பாக்யராஜ் கொலைக்கு தானும் உடந்தை என்று சொல்ல-அவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் நிறுத்துகின்றனர். அவருக்கு தூக்கு தண்டனை விதிப்பதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் பொறுப்பை சமூகத்தில் முக்கிய பிரமுகர்களை கொண்ட உயர்மட்ட குழுவிடம் ஒப்படைக்கிறார், நீதிபதி.
அந்த குழுவில் இருக்கும் சாந்தனு தூக்கு தண்டனை கூடாது என்று எதிர்க்கிறார். தியாகராஜன், கவுண்டமணி, ராம்கி, பானு, ஊர்வசி உள்ளிட்ட குழுவில் இருக்கும் மற்றவர்கள் தூக்கில் ஏற்ற வேண்டும் என்கின்றனர். பூர்ணிமா பாக்யராஜ் காப்பாற்றப்பட்டாரா? இல்லையா என்பது கிளைமாக்ஸ்.
தூக்கு தண்டனை அவசியமா? என்ற கேள்வியை மையப்படுத்தி வந்துள்ள படம். பூர்ணிமா பாக்யராஜ் ஏழைத்தாயின் துயரங்களையும், மகனை இழந்த துக்கத்தையும் உணர்வுப்பூர்வமாக பிரதிபலிக்கிறார். சாந்தனு சட்ட நுணுக்கங்களை உடைத்து ஒரு அப்பாவி பெண்ணை காப்பாற்ற போராடும் துடிப்பான இளைஞராக வருகிறார். சக குழுவினருடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக அவர் ஆவேசமாக பரிந்து பேசி கவனம் ஈர்க்கிறார். வில்லனாக கற்பனை செய்யப்படும் காட்சிகளில் அதிரடி.
கவுண்டமணி, ஊர்வசி கூட்டணியின் நகைச்சுவை சிரிக்க வைக்கிறது. தியாகராஜன் தூக்கு தண்டனைக்கு ஆதரவாளராக அழுத்தம். பானு, மனோஜ் கே.பாரதி, பிரசாத், நமோநாராயணன், வெங்கட், ரோஸ், அங்கிதா ஆகியோரும் இருக்கிறார்கள். ஒரு அறைக்குள்ளேயே பெரும்பாலான காட்சிகள் முடிந்து விடுவது அலுப்பு. தூக்கு தண்டனை தேவை இல்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் செந்தில் குமார். அவ்ஹத்தின் பின்னணி இசை ஒன்ற வைக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் வரும் தேசப்பற்று பாடல் மனதில் நிற்கிறது.


Comments