-->

Wednesday, September 28, 2016

மருத்துவத்துக்கு உதவும் ரோபாட் நானோ மீன்கள்!

மருத்துவத்துக்கு உதவும் ரோபாட் நானோ மீன்கள்!
'நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்' என்று ஒரு பழமொழி உண்டு. நீரில்லாமல் போனால் மீன்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பதுதான் பழமொழி முன்வைக்கும் கருத்து. ஆனால் வெள்ளி, தங்கம் மற்றும் நிக்கல் ஆகிய மூன்று உலோகங்களால் ஆன, நீர் இல்லாமலும் வாழக்கூடிய அட்டகாசமான நானோ மீன்களை உருவாக்கி அசத்தியிருக்கிறது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜின்சிங் லீ தலைமையிலான ஆய்வுக்குழு.
மிகவும் சுவாரசியமாக, மணலில் உள்ள ஒரு துகளை விட சுமார் 100 மடங்கு சிறிய உடல் கொண்ட நானோ மீன்கள் மனித உடலில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளுக்கு மருந்துகளைக் கொண்டு செல்ல உதவக்கூடியது என்று கூறப்படுகிறது. தங்கம் மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்களால் ஆன பாகங்களை வெள்ளி கொக்கிகள் மூலம் இணைக்கும் உள் கட்டமைப்பு கொண்ட இந்த நானோ மீன்களில் உள்ள வெளிப்புற தங்க பாகங்களில் ஒன்று நானோ மீன்களின் தலை பகுதியாகவும் மற்றொன்று வால் பகுதியாகவும் செயல்படும். மீதமுள்ள இரண்டு நிக்கல் பாகங்கள் நானோ மீன்களின் உடல்போல செயல்படும் என்கிறார் ஆய்வாளர் ஜின்சிங் லீ!
800 நானோ மீட்டர்கள் (அதாவது ஒரு மீட்டரில் 100 கோடியில் ஒரு பங்கு அளவு கொண்ட) தங்கம் மற்றும் நிக்கல் பாகங்களைக் கொண்ட இந்த நானோ மீன்கள் இயற்கையான மீன்கள் நீந்தும் விதத்தின் அடிப்படையில் நீந்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, அலையும் தன்மைகொண்ட காந்த மண்டலத்தின் தொடர்பு ஏற்பட்டவுடன் நானோ மீன்களில் உள்ள நிக்கல் பாகங்கள் வலது மற்றும் இடது புறமாக நகர்ந்து நெளிந்து முன்னே செல்லும் என்று கூறப்படுகிறது. நானோ மீன்களின் வேகம் மற்றும் பயணிக்கும் திசை ஆகியவற்றை காந்த மண்டலத்தின் உறுதி மற்றும் சார்பு நிலை ஆகிய இரண்டையும் மாற்றுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதெல்லாம் சரி, இந்த நானோ மீன்களால் மனிதர்களுக்கு என்ன பயன்? என்றுதானே கேட்கிறீர்கள்?
தற்போதைய நிலவரப்படி, உடலுக்குள் மருந்துகளை குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் கொண்டு செல்வது, காயங்கள் ஏற்படுத்தாத அறுவை சிகிச்சை மற்றும் தனிப்பட்ட உயிரணுக்களை கட்டுப்படுத்துவது ஆகிய பல்வேறு மருத்துவ செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய திறன்கொண்டவை இந்த நானோ மீன்கள் என்கிறார் ஆய்வாளர் லீ.
மருந்துகளை உடலிலுள்ள குறிப்பிட்ட இடங்களுக்கு கொண்டுசெல்லும் தற்போதைய மருத்துவக் கருவிகள் உடலின் போக்குவத்து மையங்களைச் சார்ந்து இயங்குகின்றன. ஆனால் தற்போதைய ஆய்வுகள், தன்னிச்சையாக செயல்பட்டு மருந்துகளை கடத்திச் செல்லும் (active transport) நிலை குறித்த மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. உலகிலுள்ள பிற ஆய்வுக் குழுக்களும் மனித உடலுக்குள் மருந்துகளை கடத்திச் செல்லும் நானோ நீச்சல் கருவிகளை உருவாக்கி வந்தாலும், நானோ மீன்களின் நீச்சல் முறையே மிகவும் சக்தி வாய்ந்தது என்று ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நானோ மீன்கள் மருத்துவத்தில் பல வகையில் பயன்படக் கூடியவை என்றாலும் அவற்றில் சரி செய்ய வேண்டிய சில நடைமுறைச் சிக்கல்களும் இருக்கின்றன.
உதாரணமாக, உடலின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மருந்துகளை கொண்டு சென்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய நானோ மீன்கள் மருந்துகளை செலுத்திய பிறகு உலோகத்தால் ஆன அவற்றை உடலில் இருந்து எப்படி நீக்குவது என்பது குறித்த ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு வருகிறது ஆய்வாளர் லீயின் ஆய்வுக்குழு. அதற்கான ஒரு வழியாக, இயற்கையாக மக்கும் தன்மைகொண்ட (Biodegradable) பொருட்களைக் கொண்டு நானோ மீன்களை உருவாக்குவதன் மூலம், மருந்துகளை கொண்டு செல்லுதல் அல்லது அறுவை சிகிச்சை செய்தல் போன்ற மருத்துவச் செயல்பாடுகளை மேற்கொண்டு முடித்த பின் நானோ மீன்கள் தானாகவே மக்கி அழிந்துபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.