ப்ளீஸ், தானாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளாதீர்கள்...

ப்ளீஸ், தானாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளாதீர்கள்...
இங்கிலாந்தில் வசிக்கும் கிரஹாம் ஸ்மித், பொறியாளர். சமீபத்தில் தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு வயிற்றில் ஸ்மித்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை. சமீபத்தில் தையல் போட்ட இடத்தில் ஏதோ புடைத்துக்கொண்டு வெளியே வந்தது. உடனே மருத்துவரைச் சந்தித்தார் ஸ்மித். ஆனால் அறுவை சிகிச்சைக்கு இரண்டு முறை ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. காத்திருப்போர் பட்டியலில் ஸ்மித் பெயரையும் சேர்த்துவிட்டனர். "எனக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஒருவேளை வயிற்றுக்குள் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், நான் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கலாம் என்று நினைத்தேன். இந்தச் சூழலில் என்னால் எப்படி காத்திருக்க முடியும்? பல் மருத்துவரான என் நண்பனிடம் கத்திகளையும் தையல் போடுவதற்கான பொருட்களையும் வாங்கினேன். நானே புடைப்பு இருக்கும் இடத்தில் கத்தியால் கிழித்தேன். 8 மி.மீ. அளவுள்ள நைலான் நூல் உள்ளே இருந்தது. வெட்டி எடுத்தேன். 12 தையல்கள் போட்டேன். கொஞ்சம் ரத்தம் வெளியேறியது. ஆனாலும் நான் சரியாகச் செய்திருக்கிறேன் என்ற நம்பிக்கை இருந்தது. நம்பினால் நம்புங்கள், நான் செய்த அறுவை சிகிச்சை வெற்றி! உண்மையிலேயே 15 ஆண்டுகளுக்குப் பிறகு இபோதுதான் நிம்மதியாக இருக்கிறேன். நான் பொறியியல் நிபுணர். அறுவை சிகிச்சை நிபுணர் அல்ல. நான் இப்படி ஒரு காரியம் செய்திருக்கவே கூடாது. யாரும் இப்படிச் செய்யாதீர்கள்" என்கிறார் ஸ்மித். ராயல் கல்லூரியின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறும்போது, "மருத்துவம் தெரியாத ஒருவர், தானாகவே வீட்டில் அறுவை சிகிச்சை செய்துகொள்வதோ, அடுத்தவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்துவிடுவதோ கண்டனத்துக்கு உரியது. மருத்துவ அறிவு இன்றி, இப்படிச் செய்யும்போது, விபரீத விளைவு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. பிற உறுப்புகள் பாதிக்கப்படலாம் அல்லது நோய்த்தொற்று ஏற்படலாம்" என்றனர். ஸ்மித்துக்கு ஏற்கெனவே அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை, தானாக முன்வந்து அவரைப் பரிசோதனை செய்திருக்கிறது.
ஃபேஷன் என்ற பெயரில் என்னவெல்லாம் செய்வார்களோ!
நியூசிலாந்தில் இறந்துபோன விலங்குகளைப் பாடம் செய்து, கைப்பைகளாக விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். பூனையின் தோல், தலையை வைத்து உருவாக்கப்பட்ட கைப்பையின் ஆரம்ப மதிப்பு 10 ஆயிரம் ரூபாய். ஃபேஷன் உலகில், விலங்குகளை வைத்துப் பாடம் செய்யப்பட்ட பைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்தப் பைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "நாங்கள் விலங்குகளைக் கொன்று, பைகளை உருவாக்குவதில்லை. தாமாக இறந்து போகும் விலங்குகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். எங்களை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்" என்கிறார் பை தயாரிப்பாளர் ஹாப். "விலங்குகளை கைப்பைகளாகப் பயன்படுத்தும்போது அது இயல்பாக இறந்ததா, கொல்லப்பட்டதா என்றெல்லாம் தோன்றாது. நமக்காக விலங்குகளைக் கொல்வது தவறு இல்லை என்ற எண்ணம் வந்துவிடும்" என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.Comments