-->

Wednesday, September 28, 2016

காவிரி வழக்கில் இன்று விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு கர்நாடகாவின் சீராய்வு மனுவை நிராகரிக்க கோரிக்கை

காவிரி வழக்கில் இன்று விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு கர்நாடகாவின் சீராய்வு மனுவை நிராகரிக்க கோரிக்கை
கர்நாடக அணைகளில் நீர் இருப்பு இல்லாததால் தமிழகத்துக்குத் தற்போது திறந்துவிட வேண்டிய நீரை வரும் டிசம்பரில் திறந்துவிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடகாவின் புதிய சீராய்வு மனுவை நிராகரிக்க வேண்டும் எனத் தமிழக அரசும் அவசரமாகப் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தர விட்டதை நிராகரிக்கும் வகையில், கடந்த 23-ம் தேதி அவசரமாகக் கூடிய கர்நாடகச் சட்டப்பேரவையில் 'காவிரி நீரைக் கர்நாடகாவின் குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தமிழ கத்தின் பாசனத்துக்குத் திறந்துவிட இயலாது' எனச் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குக் கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் கடந்த 24-ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவில், ''தமிழகத்தில் பயிரிடப் பட்டுள்ள சம்பா சாகுபடிக்குத் தற்போது திறக்கப்பட்ட நீர் போதுமானதாக இருக்காது என்பதால், நிலுவையில் உள்ள 50.052 டிஎம்சி நீரைத் திறக்க வேண்டும்'' எனக் கோரப்பட்டது.
இதனிடையே கர்நாடக அரசும் காவிரி மேற்பார்வைக் குழுவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், ''கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லாததால் தமிழகத் துக்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட முடியாது. எனவே காவிரி மேற்பார்வை குழுவின் முடிவை நிராகரிக்க வேண்டும்'' என கோரி இருந்தது.
கர்நாடகா புதிய மனு
இந்நிலையில் கர்நாடக அரசு மீண்டும் நேற்று புதிய சீராய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ''கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் மிகக் குறைவாக உள்ளது. தற்போது உள்ள நீரைக் கொண்டே வரும் ஜனவரி 31-ம் தேதி வரையிலான பெங்களூரு, காவிரி நீர்ப்பாசனப் பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட்டால் கோடிக் கணக்கான மக்களின் குடிநீர்த் தேவை கேள்விக்குறியாகிவிடும். எனவே தமிழகத்துக்குத் தற்போது திறந்து விடப்பட வேண்டிய நீரை வரும் டிசம்பர் மாதத்தில் சேர்த்துத் திறந்துவிட அனுமதிக்க வேண்டும். கடந்த 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் மேலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்'' என கோரியுள்ளது.
தமிழக அரசு புதிய மனு
இதையடுத்துத் தமிழக அரசு தரப்பில் அவசரமாகப் புதிய மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிடவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள கர்நாட காவின் புதிய மனுவை நிராகரிக்க வேண்டும். ஏற்கெனவே காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் நிறைய மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில் கர்நாடக அரசின் புதிய மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத நிலையில் கர்நாடக அரசின் புதிய மனுவை விசாரிப்பது தேவையற்றது'' எனத் தெரி வித்துள்ளது.
இந்நிலையில் காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான தமிழகம் மற்றும் கர்நாடக அரசின் மனுக்கள் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது காவிரி மேற்பார்வை குழுவுக்கு எதிரான இரு மாநில அரசுகளின் மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த இரு மாநிலங்களின் மனுக் களும் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே விசாரணையின் போது தமிழக அரசின் வழக்கறிஞர் சேகர் நாப்டே, கர்நாடக அரசின்மீது நீதிமன்ற அவமதிப்பு புகாரை நீதிபதி களிடம் தெரிவிப்பார். அப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடக்குமாறு கர்நாடக அரசுக்குத் தமிழக அரசின் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் எழுதிய கடிதத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார் எனவும் கூறப்படுகிறது.
சித்தராமையா ஆலோசனை
கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயக் கூடும் என்பதால், கர்நாடக முதல்வர் சித்தராமையா நீதிமன்ற நடவடிக் கையில் இருந்து தப்பிப்பது தொடர் பாகக் கர்நாடக அரசின் சட்ட ஆலோச கரும், மூத்த வழக்கறிஞருமான ஃபாலி எஸ்.நாரிமனிடம் நேற்று தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். கர்நாடகச் சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் நேற்று ஃபாலி எஸ்.நாரிமனை டெல்லியில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதே போலக் கர்நாடக அரசின் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மோகன் கடார்கி, மூத்த வழக்கறிஞர் பிரிஜேஷ் கல்லப்பாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.