-->

Wednesday, September 21, 2016

ஆவிகள் வாழ பிரமாண்ட மாளிகை

ஆவிகள் வாழ பிரமாண்ட மாளிகை


மனிதர்கள் வாழ்வதற்கும், அவர்களின் வாரிசுகள் வாழ்வதற்கும்தான் பொதுவாக வீடுகளைக் கட்டுவார்கள். ஆனால், இங்கு ஒரு பெண் பேய்கள் வசதியாக வாழ்வதற்காக மிகப் பெரிய பிரமாண்டமான மாளிகையையே கட்டியிருக்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் சாரா. கி.பி.1840-ல் அமெரிக்காவில் பிறந்த இவர் 1862 செப்டம்பர் 30-ந் தேதி வில்லியம் விர்ட் வின்செஸ்டர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சாரா பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது கணவரோ ராணுவத்திற்கு போர்க்கருவிகளை தயாரித்துக் கொடுக்கும் வேலை செய்பவர்.இந்த தம்பதிகளுக்கு 1866 ஜூன் 15-ல் அனி பார்டீ என்ற பெண் குழந்தை பிறந்தது. ஒரே மாதத்தில் அந்தக் குழந்தை நோய் வாய்ப்பட்டு இறந்தது. அதன்பின் அவர்களுக்கு குழந்தை உருவாகவே இல்லை. அடுத்தடுத்து வீட்டில் துன்பமே சூழ்ந்திருந்தது. இந்த நிலையில் 1881-ல் அவரது கணவரும் இறந்து போனார். கணவரின் போர்க்கருவிகள் தயாரிக்கும் கம்பெனியின் வருமானமாக ஒரு நாளைக்கு 1,000 அமெரிக்க டாலர்கள் வருமானமாக வந்து கொண்டிருந்தது. இன்றைய கணக்கீட்டின் படி அது 25,000 அமெரிக்க டாலர்களுக்கு சமமானது. என்னதான் பணம் கோடி, கோடியாக கொட்டினாலும் வீட்டில் நிம்மதி என்பது இல்லை. எப்போதும் வீட்டில் சோகமும் துன்பமுமே குடிகொண்டிருந்தது.
இதற்கு என்ன காரணம் என்பதை அறிய ஒரு பாதிரியாரை சந்தித்து நடந்தவைகளை கூறினார் சாரா. அதைக் கேட்ட பாதிரியார், "உனது கணவர் தயாரித்த 'வின்செஸ்டர் துப்பாக்கி' மூலம் இரண்டாம் உலகப் போரில் ஏகப்பட்ட போர் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் ஆவிகள் உன் வீட்டில் இருக்கின்றன. அவைதான் நிம்மதியில்லாமல் செய்கிறது. அவற்றை மகிழ்வித்தால் இந்த துன்பம் உன்னை விட்டு விலகும். அதற்கு நீ தொடர்ந்து வீடு கட்டிக்கொண்டே இருக்க வேண்டும். ஆவிகள் வந்துபோவதற்கு வசதியாக நிறைய கதவுகள், ஜன்னல்கள் வைக்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் வீடு கட்டுவதை நிறுத்தவே கூடாது" என்றார்.
உடனே மேற்கு கலிபோர்னியாவில் இருந்த ஒரு பண்ணை வீட்டை விலைக்கு வாங்கி சாரா கட்டத் தொடங்கினார். அந்தப் பண்ணை 161 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. அதில் 8 அறைகளைக் கொண்ட ஒரு வீடு கட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டை புதுப்பித்து அதனுடன் சேர்ந்து பல அறைகளைக் கட்டத்தொடங்கினார். 24 மணி நேரமும் வேலை நடந்தது. வருடத்தின் 365 நாளும் மாளிகை வளர்ந்தது. 1922-ல் சாரா இறக்கும் வரை இந்த கட்டுமானம் தொடர்ந்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட 38 வருடங்கள் தொடர்ந்து எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் கட்டப்பட்ட மாளிகை இதுவாகத்தான் இருக்கும். 1906-ம் ஆண்டில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது மட்டும் ஒருசில நாட்கள் கட்டுமானம் நின்றது.
இந்த மாளிகையில் 160 அறைகள் இருக்கின்றன. 8 மாடிகள் கொண்ட இந்த மாளிகையில் மூன்று 'லிப்ட்'டுகள் உள்ளன. சில அறைகள் மிகப் பெரியதாகவும், சில அறைகள் மிகச் சிறியதாகவும் இருக்கின்றன. 2 ஆயிரம் கதவுகளும், 10 ஆயிரம் ஜன்னல்களும் ஆவிகள் எளிதாக வந்து போவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. ஆவிகளுக்கு மிகவும் பிடித்த எண்ணாக வெளிநாடுகளில் கருதப்படும் 13 என்ற எண்ணிக்கையில் நிறைய வடிவங்கள் உள்ளன. 13 கழிவறைகள், 13 குளியலறைகள், 13 சாண்ட்லியர் விளக்குகள், ஒவ்வொரு ஜன்னல் கதவிலும் 13 வளைவுகள் கொண்ட டிசைன்கள் என்று எல்லாமே 13 மயம்தான். மாடிப்படிகள் எங்கே போகிறதென்றே தெரியாது. சாளரங்கள் வெற்றுச் சுவரை நோக்கி இருந்தன. பல மைல்கள் நீளத்துக்கு ரகசியப் பாதாளப் பாதைகள், கூடங்கள், எல்லாம் எங்கு செல்கின்றன என்பதே தெரியவில்லை. சாரா கட்டிடக்கலை வல்லுநர் கிடையாது. அவர் மனம் போனபோக்கில் இந்த மாளிகையை தொடர்ந்து கட்டியிருக்கிறார்.
இன்று சாரா வின்செஸ்டர் மாளிகை ஒரு சுற்றுலாத் தலமாக செயல்படுகிறது. இந்த மாளிகையைப் பார்ப்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.