-->

Tuesday, September 27, 2016

கழிவுப் பொருட்களை கணினியாக மாற்றிய சிறுவன்

கழிவுப் பொருட்களை கணினியாக மாற்றிய சிறுவன்
தூக்கி எறிந்த பொருட்களைக் கொண்டு சொந்தமாக கணினி உருவாக்கி அசத்தியிருக்கிறான் மும்பை சிறுவன்.
ஜெயந்த் பரப் அந்த சிறுவனின் பெயர். 16 வயதாகிறது அவனுக்கு. அந்தேரி அருகே உள்ள சாட்கோபாரில் வசிக்கிறான். தனிமை விரும்பியான அவன் வெகு நேரம் வீட்டிற்குள்தான் முடங்கிக் கிடப்பான். ஆனாலும் எதையாவது யோசித்துக் கொண்டும், செய்து கொண்டும் இருப்பது அவனது வாடிக்கை. அதன் பயனாக சொந்தமாக ஒரு கணினியை இந்த வயதிலேயே தயாரித்து அசத்திவிட்டான்.
இன்றைய சிறுவர்கள் ஸ்மார்ட்போன்கள், கணினிகளில் விளையாடுவது, ஒவ்வொன்றையும் நோண்டிப் பார்த்து தெரிந்து கொள்வது என ஆர்வமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களைவிட ஒருபடி முன்னோடியாக சிந்தித்து சொந்தமாக கணினியை உருவாக்கி இருக்கிறான் ஜெயந்த். இத்தனைக்கும் அவன் கல்வியாற்றலில் சிறந்த மாணவர் அல்ல. தோல்வி அடைந்ததால் 9-ம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்திய பின்தங்கிய மாணவர்தான் அவர். இருந்தாலும் உள்ளுணர்வால் உந்தப்பட்டு, உத்வேகத்துடன் செயல்பட்டு கணினியை உருவாக்கிக் காட்டி உள்ளான்.
சிறுவனின் தந்தை ரவீந்திர பரப், காயலாங்கடை நடத்தி வருபவர். அவர்களது கடைக்கு வரும், பல்வேறு செயலிழந்த பொருட்களை சிறு வயதிலிருந்தே பார்த்து வந்த அவனுக்குள், அவற்றுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் வருமாம். சில சமயங்களில் லேசாக பழுதான பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை சீர் செய்து கொடுக்க, தந்தை அதை விற்பனை செய்ததாகவும் கூறுகிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பு, பழுதான லேப்டாப் ஒன்று கடைக்கு வந்தபோது கணினி உருவாக்கும் ஆசை வந்ததாம். அதுமுதல் கிடைத்த கணினி உதிரி பாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் பாகங்களை இணைத்து இந்த கணினியை உருவாக்கி வியக்க வைத்திருக்கிறான் ஜெயந்த்.
'அலுவலகங்களைத் தாண்டி அனைத்து வீடுகளையும் கணினிகள் அலங்கரிக்க வேண்டும். அதிகம் செலவு பிடிக்காத வகையில் கணினிகளை உருவாக்க வேண்டும் என்பதே என் விரும்பம்' என்கிறான் ஜெயந்த். அடுத்த கல்வியாண்டில், தொலைவழிக் கல்வியில் 'சிஸ்டம் சேப்டி' பற்றிய சான்றிதழ் படிப்பை தொடரப்போவதாக கூறி உள்ளான்.
தினமும் 9400 டன் எலக்ட்ரானிக் கழிவுகள் மும்பையில் சேகரமாகிறதாம். இந்தியா முழுவதும் இப்படி குவியல் குவியலாக சேகரமாகும் கழிவுகளில் இருந்து பயன்படத்தக்க கருவிகளை உருவாக்க ஜெயந்த் போல பெரும் பட்டாளமே தேவைப்படுகிறது நம் நாட்டிற்கு..!


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.