-->

Wednesday, September 28, 2016

வானிலையை துல்லியமாக கண்டறியும் செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

வானிலையை துல்லியமாக கண்டறியும் செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
இந்திய விஞ்ஞானிகளின் வரலாற்று சாதனை
வானிலையை துல்லியமாக கண்டறியும் செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது இந்திய விஞ்ஞானிகளின் வரலாற்று சாதனையாகும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.தொடர்ந்து தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாட்டுக்காக பல்வேறு செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.
வானிலை செயற்கைகோள்
அந்தவகையில் கடல் கண்காணிப்பு மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறிவதற்கும், முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வுகள், புயலை முன்கூட்டி அறிந்து கொள்வதற்கும் மற்றும் கண்காணிப்பு சேவைகள், சுற்றுச்சூழலை அறிவது, காற்றின் திசையை அறிந்து கொள்வது உள்ளிட்ட பணிகளுக்காக 371 கிலோ எடைகொண்ட 'ஸ்கேட்சாட்-1' என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து இருந்தது. இந்த செயற்கைகோள் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் மூலம் நேற்று காலை 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது 37-வது ராக்கெட் ஆகும்.5 ஆண்டுகள் ஆயுள்காலத்தை கொண்ட, ஸ்கேட்சாட்-1 செயற்கைகோள் பூமியில் இருந்து ஏவப்பட்டு 17-வது நிமிடத்தில் 724 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
சுற்றுவட்டப்பாதை
'ஸ்கேட்சாட்-1' செயற்கைகோளுடன் இந்திய பல்கலைக்கழகம் மற்றும் அகாடமிக் நிறுவனங்களைச் சேர்ந்த பி1-சாட், பிரதாம், அமெரிக்காவைச் சேர்ந்த பாத்பைண்டர்-1, அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த அல்சாட்-1பி, அல்சாட்-2பி, அல்சாட்-1என், கனடா நாட்டைச் சேர்ந்த என்.எல்.எஸ்-19 ஆகிய மேலும் 7 செயற்கைகோள்களும் இந்த ராக்கெட்டில் வைத்து வணிக ரீதியாக விண்ணில் ஏவப்பட்டன. இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்ட இரண்டு செயற்கைகோள்கள் வெவ்வேறு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
ராக்கெட் பிரதான செயற்கைகோளை (ஸ்கேட்சாட்-1) திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்திய உடன், ராக்கெட்டின் என்ஜின் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. மீண்டும் ராக்கெட் என்ஜினை இயக்கி மற்றொரு சுற்றுப்பாதையில் செயற்கைகோளை நிலை நிறுத்தும் தொழில்நுட்பத்தில் இந்திய விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்து உள்ளனர்.3 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட்டின் எடை 320 டன் ஆகும். 8 செயற்கைகோள்கள் 675 கிலோ எடை கொண்டது.
செயற்கைகோள் பிரிந்தது
ராக்கெட் புறப்பட்டு 2 மணி 15 நிமிடத்தில் ராக்கெட் பூமியில் இருந்து 660 கிலோ மீட்டர் உயரத்தில், அனைத்து செயற்கைகோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் திட்டமிட்டபடி அந்தந்த இலக்கில் கொண்டு சேர்த்தது.இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.
விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடி இருந்தனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
புயல் எச்சரிக்கை
முதன்மை செயற்கைகோளான 'ஸ்கேட்சாட்-1' பூமியை படம் எடுத்து அனுப்புதல், வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் புயல் எச்சரிக்கை, கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இந்த செயற்கைகோளில் 750 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.'ஸ்கேட்சாட்-1' செயற்கைகோள் வானிலை ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கும் இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 1,500 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கலாம்.மேலும் இந்த செயற்கைகோளின் மூலம் பேரிடர் மேலாண்மை, செல்போன் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு, புவியியல் வரைபடங்களை கண்காணித்தல், புயல் எச்சரிக்கை ஆகிய பணிகளை மேற்கொள்ள முடியும்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.