-->

Tuesday, September 27, 2016

அதிவேகமாக எட்டிய இந்தியர்: 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை

அதிவேகமாக எட்டிய இந்தியர்: 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் நேற்று புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
கான்பூரில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், நேற்று 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து டெஸ்டில் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது. தனது 37-வது டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இதன் மூலம் 200 விக்கெட்டுகளை அதிவேகமாக அள்ளிய முதல் இந்தியர், ஒட்டுமொத்த அளவில் 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிளாரி கிரிமெட் தனது 36-வது டெஸ்டில் இந்த இலக்கை எட்டியதே இந்த வகையில் உலக சாதனையாக நீடிக்கிறது. அண்மையில் இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது. இல்லாவிட்டால் கிரிமெட்டின் சாதனையை அஸ்வின் முறியடித்திருக்கலாம்.
*இந்திய அளவில் அஸ்வின் 37-வது டெஸ்டிலேயே இந்த சாதனையை படைத்திருக்கும் நிலையில், அவருக்கு அடுத்த இந்திய வீரர்கள் என்று பார்த்தால் ஹர்பஜன்சிங் (46 டெஸ்ட்), தற்போதைய பயிற்சியாளர் அனில் கும்பிளே (47 டெஸ்ட்), சந்திரசேகர் (48), கபில்தேவ் (50) ஆகியோர் வருகிறார்கள்.
*200 விக்கெட் இலக்கை தொட்ட 9-வது இந்தியர் அஸ்வின் ஆவார். இந்திய அளவில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் கும்பிளே (619 விக்கெட்) முதலிடம் வகிக்கிறார்.
*சராசரியாக 25.12 ரன்னுக்கு ஒரு விக்கெட் எடுக்கும் அஸ்வின் இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை 18 முறை அறுவடை செய்திருக்கிறார். டெஸ்டில் 4 முறை 10 விக்கெட்டுகளும் வீழ்த்திய சிறப்பு அவருக்கு உண்டு. மேலும் அதிக முறை தொடர்நாயகன் (6) விருதை பெற்ற இந்தியர் என்ற மகத்தான சாதனையும் அவரது வசமே உள்ளது.
*50, 100, 150 ஆகிய விக்கெட்டுகளை துரிதமாக அடைந்த இந்தியரும் அஸ்வின் தான்.
*சாதனை மேல் சாதனை படைத்து வரும் அஸ்வின் டெஸ்டில் ஒவ்வொரு அணிக்கு எதிராக எடுத்த விக்கெட்டுகள் வருமாறு:- ஆஸ்திரேலியா-50 விக்கெட் (10 டெஸ்ட்), வங்காள தேசம்-5 விக்கெட் (1), இங்கிலாந்து-17 விக்கெட் (6), நியூசிலாந்து- 25 விக்கெட் (3), தென்ஆப்பிரிக்கா-31 விக்கெட் (5), இலங்கை-21 விக்கெட் (3), வெஸ்ட் இண்டீஸ்-51 விக்கெட் (9).
சாதனைக்கு பிறகு 30 வயதான அஸ்வின் கூறுகையில், 'எனக்கு கிடைத்ததில், கடந்த 80-100 விக்கெட்டுகளை மிகவும் சிறப்பானது என்று சொல்வேன். அதாவது கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய (2014-15) பயணத்தை முடித்து திரும்பியதில் இருந்து எனது பந்து வீச்சில் மிகவும் உற்சாகமாக செயல்பட தொடங்கி விட்டதாக நினைக்கிறேன். எப்படி விக்கெட் வீழ்த்துவது, பேட்ஸ்மேன்களுக்கு வியூகம் அமைப்பது எப்படி என்பது எனக்கு தெளிவாக தெரியும். கடந்த ஓரிரு ஆண்டுகள் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அற்புதமான பயணமாகும். அதை தொடருவேன் என்று நம்புகிறேன. நிச்சயம் 200-வது விக்கெட் (வில்லியம்சன்) சிறப்புக்குரிய விஷயமே. கனே வில்லியம்சன் ஒன்றும் மோசமான வீரர் அல்ல. இலங்கை மண்ணில் சங்கக்கராவின் விக்கெட்டை கைப்பற்றியது மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும்.
எனக்கு, நானே தான் போட்டி. இதைத் தான் எப்போதும் சொல்லி வருகிறேன். அது தான் எனக்கு மகிழ்ச்சியும் கூட.' என்றார்.


No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.