சினிமா விமர்சனம் கபாலி

சினிமா விமர்சனம் கபாலி
கதாநாயகன்-கதாநாயகி: ரஜினிகாந்த்-ராதிகா ஆப்தே
டைரக்‌ஷன்: பா.ரஞ்சித்
கதையின் கரு: மலேசிய தமிழர்களுக்காக போராடும் தாதா.
மலேசியாவுக்கு பிழைப்பு தேடி சென்று தோட்டங்களில் கூலிகளாக வேலை பார்க்கும் தமிழர்களுக்கு ரஜினிகாந்த் உதவியாக இருக்கிறார். நிர்வாகத்தினருடன் மோதி சம்பள உயர்வு பெற்று தருகிறார். மலேசிய தமிழர்கள் தலைவரான நாசருக்கு ரஜினிகாந்தின் போர்க்குணம் பிடித்துப்போக தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார்.அங்குள்ள சீனர்களுடன் தமிழர்கள் சிலர் கூட்டு வைத்து போதை மருந்து கடத்துதல் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற சமூக விரோத காரியங்களில் ஈடுபடுகின்றனர். அதை எதிர்க்கும் நாசரை கொலை செய்கின்றனர். இதனால் ரஜினிகாந்த் தமிழர்கள் தலைவராகிறார். நாசர் பொறுப்புக்கு ரஜினிகாந்த் வந்ததை பொறுக்காத கடத்தல் கும்பல் அவரையும் தீர்த்துக்கட்ட வருகிறது. இந்த மோதலில் ரவுடி கூட்டத்தை ரஜினிகாந்த் கொன்று அழிக்கிறார்.அப்போது கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவியை ரவுடிகள் சுடுகின்றனர். இதில் அவர் இறந்து போனதாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகிறார். ரஜினிகாந்தை ஜெயிலில் அடைக்கின்றனர். 25 வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு விடுதலையாகி வெளியே வரும் ரஜினி போதை கடத்தல் கும்பல் சமூகத்தில் ஊடுருவி இளைஞர்கள், மாணவர்கள் வாழ்க்கையை சீரழித்துக்கொண்டு இருப்பதை கண்டு சீறுகிறார். அவரது மனைவியும் குழந்தையும் உயிருடன் இருக்கும் தகவலும் அவருக்கு தெரிகிறது. போதை கும்பலை ஒழிப்பதும் குடும்பத்தினருடன் அவர் சேர்வதும் மீதி கதை.ரஜினிகாந்த் தொழிலாளர்கள் தலைவனாக, மக்களுக்கு நல்லது செய்யும் தாதாவாக படம் முழுக்க வருகிறார். 25 வருடங்கள் அவர் சிறையில் இருந்து விட்டு வெளியே வருவது போன்று படம் தொடங்குகிறது. கைதி சீருடையை கழற்றி வீசி நரைத்த தாடியுடன் கண்ணாடி கோட் அணிந்து தனக்கு அறிவுரை சொல்லும் போலீஸ் அதிகாரியிடம் மகிழ்ச்சி என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி விட்டு ஸ்டைலாக நடந்து வரும் அறிமுக காட்சி அமர்க்களம்.கடத்தல் கும்பல் தலைவன் அடியாளை ஒரே அடியில் வீழ்த்தி நான் வந்துட்டேன்னு சொல்லு என்று கர்ஜிப்பதில் கெத்து. சென்னையில் மனைவியை தேடி வந்த இடத்தில் கொலைவெறியுடன் பாயும் ரவுடிகளுடன் மோதுவதில் ஆக்ரோஷம். மனைவி உயிருடன் இருக்கும் தகவல் தெரிந்ததும் மகிழ்ச்சியில் பரபரப்பது, அவரை நேரில் பார்த்து உருகுவது முத்திரை. பிளாஸ்பேக்கில் இளம் ரஜினியாக துறுதுறுவென வருகிறார்.ரஜினிகாந்தை போராட்டவாதியாக உயர்த்தும் மனைவியாக ராதிகா ஆப்தே. கணவரை நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்து கண்ணீர் விடும் இடத்தில் உருக வைக்கிறார். ரஜினிகாந்த் மகளாக வரும் தன்ஷிகா அதிரடியில் கலக்குகிறார். ரஜினிகாந்தின் முரட்டுத்தனமான பாதுகாவலராக வருகிறார் தினேஷ். அவரது முடிவு பரிதாபம். போதை கடத்தல் கும்பல் தலைவனாக வரும் வின்ஸ்டன் சா, தாதாவாக வரும் கிஷோர் வில்லத்தனங்கள் மிரட்டல்.நாசர், ஜான் விஜய், கலையரசன், ரித்விகா, மைம்கோபி கதாபாத்திரங்களும் நிறைவு. ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. மனைவியை தேடி அலையும் காட்சிகளின் நீளத்தையும் குறைத்து இருக்கலாம். ரஜினிகாந்தை குடும்பத்தோடு கொல்ல அடியாட்களை இறக்கிய பிறகு காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ரஞ்சித். வயதான ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன. நெருப்புடா பாடலில் அனல். முரளியின் கேமரா, மலேசிய அழகை அள்ளி வந்திருக்கிறதுComments