'தூய்மை இந்தியா' தொடர வேண்டும்

'தூய்மை இந்தியா' தொடர வேண்டும்
தமிழ்நாட்டில் சிலர் பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்குவதுபோல் தில்லி மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜரிவால் துடைப்பத்தைக்காட்டி வாக்குகளை வாரி எடுத்து முதல்வராகி வரலாறு படைத்தார். அவர் காட்டிய துடைப்பத்தின் பொருள் ஊழலற்ற அரசு. ஊழலை ஒழிக்கும் சின்னம் துடைப்பம் என்றார் அவர். பார்த்தார் பாரதப் பிரதமர், கேஜரிவால் காட்டிய துடைப்பத்தைப் பெற்றுக் கொண்டு சுற்றுச்சூழல் அடிப்படையில் "ஸ்வச் பாரத்' என்று ஒரு இயக்கத்தைத் தொடங்கினார்.பிரதமர் மோடியின் நோக்கம் தூய்மை இந்தியா. விழா நாட்களில் வீதிகளைப் பெருக்கி சுத்தம் செய்யுமாறு பா.ஜ.க தொண்டர்களைப் பணித்தார். ஸ்வச் பாரத் இயக்கத்திற்கு தடபுடலான விளம்பரங்கள். ஏராளமாக நடிகர், நடிகையர் ஸ்வச் பாரத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஸ்வச் பாரத் இலக்கில் ஒரு முக்கிய அம்சம் வீடுதோறும் கழிப்பறை.எல்லா டி.வி சேனல்களிலும் இது தொடர்பாக வித்யா பாலன் நடித்த விளம்பரப்படம் பெண்களைச் சிந்திக்க வைத்துள்ளது. வடமாநிலங்களில் திருமணமான பெண்கள் குங்கட் (முக்காடு) அணிவது மரபு. கிராமங்களில் பெண்கள் முகம் முழுவதுமே முக்காடு போட்டுக் கொள்வார்கள். ஆண்களுக்கு முகத்தைக் காண்பிக்கக் கூடாது. இப்படித்தான் அந்த விளம்பரப் படத்தில் ஒரு குடும்பத்தில் புது மணப்பெண் முக்காடு அணிந்தபடி புக்ககம் வருவாள். முக்காடு அணிந்த புது மணப்பெண்ணுக்கு கழிப்பறை செல்ல அவசரம். வீட்டிலோ கழிப்பறை இல்லை. கழிப்பறை எங்கே என்று அவள் கேட்கும்போது, மாமியார் திறந்த வெளிக்குச் செல்லுமாறு கூறுவாள்.அப்போது தலையிட்டுப் பேசும் வித்யாபாலன் காண்பிக்க வேண்டிய முகத்தை முக்காடுபோட்டு மறைக்கக் சொல்கிறீர்கள். ஆனால் திறந்த வெளியில் கழிக்கச் சொல்வது சரியா என்று இந்தி மொழியில் வித்யாபாலன் கேட்பார். அடடா இதைப்பற்றி நாங்கள் யோசிக்கவே இல்லையே என்று மாமியார் பதில் கூறுவதுடன் வீட்டில் கழிப்பறை கட்ட சம்மதிப்பாள். இத்துடன் அந்த விளம்பரப்படம் முடியும். வீடு தோறும் கழிப்பறை கட்டப்பட வேண்டும் என்பது நல்ல முயற்சி. அதே சமயம் வீட்டில் உள்ள கழிப்பறைகளில் கழித்த விஷயம் பிறகு என்னவாகிறது எங்கு செல்கிறது இது யாருக்கும் தெரியாது. இதற்கு விடை கண்டால்தான் ஸ்வச் பாரத்தின் சுவாசப்பைகள் சுத்தமாகும். விடை காணாத வரை ஸ்வச் பாரத் இயக்கம் வீண்தான். முதலாவதாக, விதிப்படி கழிப்பறை கட்டப்படுகிறதா? இதிலிருந்து பயணத்தைத் தொடங்கவேண்டும். கழிப்பறையில் பொருத்தப்பட்டுள்ள பீங்கான் கோப்பையிலிருந்து யூவடிவக் குழாய் வழியே பூமிக்குள் கட்டப்பட்டுள்ள செப்டிக்டேங்கில் கழிவுநீர் விழுகிறது.ஆனால் அப்படிக்கட்டப்படும் செப்டிக்டேங்க் இரு அறைகள் கொண்டிருக்க வேண்டும். இரண்டாவது அறையிலிருந்து மேல்மட்டத்தில் ஒரு வெளிக்குழாய் இருக்க வேண்டும். முதல் அறையிலிருந்து மீத்தேன் வெளியேறவும் செங்குத்தாக ஒரு குழாய் பொருத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் அமைக்கப்படும் செப்டிக்டேங் ஒரு அறை கொண்டதாகவே உள்ளது.சில தோட்ட வீடுகளில் அமைக்கப்படும் செப்டிங்கில் கீழே கான்க்ரீட் போடாமல் ஜல்லி போட்டு மணல் மட்டும் போட்டுச் சுற்றி மரங்களைப் பயிரிட்டிருப்பார்கள். கழிவுநீர் சுயமாகவே சுத்தியாகி மரங்களின் சல்லிவேர் உறிஞ்சி எடுத்து ஆகாயத்தில் பசுமையைப் பரப்பி உயிர்க்காற்று உற்பத்தியாகும். அப்படி அமையாவிட்டால் செப்டிக்டேங்க் நிரம்பி வழியும்போது அதை வெளியேற்ற வேண்டும்.இதற்கென்றே ஒவ்வொரு ஊரிலும் தனியார் நிறுவனங்கள் டேங்கர் டிராக்டர் கொண்டு குழாய் மூலம் உறிஞ்சி எடுத்துச் செல்கிறார்கள். அவ்வாறு எடுத்துச் சென்ற கழிவுநீர் முறையாக சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சென்று மறுசுழற்சி செய்யப்படவேண்டும். பல ஊர்களில் அப்படிப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களே கிடையாது. ஆகவே கழிப்பறைகளிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கழிவுநீர் ஊருக்கு ஒதுக்குப் புறமாயுள்ள வயல் வெளிகள், ஓடைகள், பாழ்பட்ட ஊருணிகள் போன்ற இடங்களில் செப்டிக்டேங் கழிவுநீர் திறந்துவிடப்படுகிறது.கிராமப்புற ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்று சொல்லப்படும் எந்த ஆட்சியும் செப்டிக்டேங் கழிவுநீர் ஊர்திகளைக் கட்டுப்படுத்துவது இல்லை. வீட்டிலுள்ள கழிப்பறைகளிலிருந்து கழிவு நீரை அப்புறப்படுத்த எவ்வளவு கட்டணம் வரூசூலிக்க வேண்டும் என்ற நெறிமுறையும் இல்லை. சொல்லப்போனால் பல பேரூராட்சி நகராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு பற்றிய யோசனையோ திட்டமோகூட இல்லை.பெரிய நகரங்களில் கழிவுநீர்க் குழாய் இணைப்புள்ளதால் கழிப்பறைக் கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படுகிறது. சில நகரங்களில் மழைநீர்க்குழாய்களுடன் சேர்ந்து செல்வதும் உண்டு. அப்படி வெளியேறும் கழிவுநீர் இறுதியில் கடலிலோ நதிகளிலோ சுத்திகரிப்பு செய்யப்படாமலே கலந்து விடுகிறது.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பெருநகரங்களில் உண்டு. பல பேரூராட்சிகளில் இல்லை. கழிவுநீரில் உள்ள அசுத்தத்தை B.O.D. (Biological Oxygen Demand) Gußm C.O.D.(Chemical Oxygen Demand) என்றும் ஆங்கிலத்தில் கூறுவார்கள்.அதாவது கழிப்பறைக் கழிவுநீரில் ஆக்சிஜனின் தேவை 25முதல் 35 சதவீதம் என்பது 5 முதல் 10 சதவீதம் குறைய வேண்டும். கழிப்பறைக் கழிவு நீரை சுத்தி செய்யும் வழிமுறைகள் நிறைய உண்டு.மிக எளியவழி முறையை புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தில் உள்ள அரவிந்தர் கண் மருத்துவ மனையில் கடைப்பிடிக்கிறார்கள். செப்டிக்டேங்கிலிருந்து கழிவு நீர் மூடப்பட்டுள்ள செங்குத்து ரிஆக்டர் தொட்டிகளுக்குள் சென்று பின் மூடப்பட்டுள்ள வடிகட்டித் தொட்டிக்குள் சென்று அக்கழிவு நீர் தீவனப்புல்வெளிக்கு விடப்பட்டு இறுதியில் ஒரு குளம் அமைத்து அங்கு புல்வெளி நீர் வடிகிறது.இந்த வடிநீரில் அல்ட்ரா வைலட் கதிர் செலுத்தப்பட்டுத் தூய்மையாகக்கப்பட்டு அந்த நீர் மறுபயனாகிறது. கழிவு நீர்க்குழாய் இணைப்பு மூலம் நதி அல்லது கடலில் சங்கமிக்கு முன்- திடக்கழிவைப் (வண்டல்) பிரித்து உயிர்ம உரமாக்கலாம். சாம்பலாக்கலாம். மீத்தேன் மின்சாரம் தயாரிக்கலாம். பல மேலை நாடுகளில் இவ்வாறு கழிப்பறைக் கழிவு நீர் தூய்மையாக்கி மறு பயன் நிகழ்கிறது.மனிதனுக்கு இரண்டு சுவாசப்பைகள் உண்டு. அதுபோல் மனித இனம் நோயில்லாமல் வாழ ஸ்வச் பாரத்தின் ஒரு சுவாசப்பை மனிதக்கழிவு நீர் மேலாண்மை என்றால் மற்றொரு சுவாசப்பை நகராட்சி ஊராட்சிக் குப்பைகளின் திடக்கழிவு மேலாண்மை. திடக்கழிவு மேலாண்மையில் மக்காத பொருள்களான பிளாஸ்டிக், தகரம், பீங்கான், கண்ணாடி, வேறுபல உலோகசாமான்கள், எலக்ட்ரானிக் கழிவுகள் ஆகியவற்றைப் பிரித்து மக்கும் குப்பைகளை கம்போஸ்ட் உரமாக மாற்றுதல் அவசியம். மக்காத பொருள்களிலிருந்து எரிமின்சாரமும் மக்கும் பொருளிலிருந்து மீத்தேன் மின்சாரமும் பெறலாம்.பல்வேறு பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் காதித அட்டைகளைக் கொண்டு முறையே புதிய பிளாஸ்டிக் சாமான்களும் அட்டைக்காகிதங்களையும் உற்பத்தி செய்யலாம். இப்படிப்பட்ட முயற்சிகளை சில நகராட்சிகள் செய்து வருகின்றன. ஒட்டுமொத்த இந்தியாவில் 8 நகரங்களில் சுமார் 80 சதவீதம் இந்த விஷயங்களை முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளன. அந்த வெற்றி பிற நகரங்களில் பரவ வேண்டும்.ஆலப்புழையை எடுத்துக் கொண்டால் அங்கு குப்பைமேடுகளே இல்லை. 80 சதவீத வீடுகளில் பயோகேஸ் எந்திரங்களும் பைப் கம்போசிங் சிஸ்டமும் உண்டு. அவரவர் வீடுகளில் குப்பைகள் எரிசக்தியாகவும் உரமாகவும் மாற்றப்படுகின்றன. இரண்டாவதாக கோவாவில் உள்ள பஞ்சி நகரில் குப்பைகளைத் தனித்தனியே பிரித்து மறுசுழற்சி செய்ய மொத்தம் 12 மையங்களை உருவாக்கிச் செயல்படுத்துகின்றனர்.மைசூரு நகரில் 95 சதவீதம் குப்பைகளை வீட்டுக்கு வீடு சென்று சேகரித்து சுமார் 30 சதவீதம் மக்கும் குப்பையை குப்பைபோடும் இடத்திலேயே பிரித்து விடுகின்றனர். மக்கும் குப்பையே கம்போஸ்ட் உரமாகிறது. இவ்வாறே ஆந்திர மாநிலம் பொப்பிலியிலும் நிகழ்கிறது. புணே நகரம் மிகச்சிறப்பான தூய்மை நகரம். அடுத்து மிசோரத்தில் அய்சாவல் நகர், குஜராத்தில் சூரத். தெலுங்கானாவில் சூர்பேட் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.ஸ்வச் பாரத் இயக்கத்தில் வீடுதோறும் கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும் என்பது சரிதான். ஏனெனில், இன்னமும் கிராமங்களில் திறந்த வெளியைதான் கழிப்பறையாகப் பயன்படுத்துகிறார்கள். சில ஊர்களில் நுழைவாயிலில் அரசமரங்கள் உண்டு. புனிதமான அரசமரத்தின் கீழ் மனித அசுத்தம் நிறைய உண்டு. ஒரு நல்ல கற்பனையுடன் ஒரு கிராமத்திற்குள் நுழையும் போது நம்மை வரவேற்பது நாராசமே. இதற்குரிய பரிகாரம் வீடுதோறும் கழிப்பறை என்பதுதான்.அதே சமயம் நாடும் சுத்தமாக வேண்டுமானால் கழிப்பறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தூய்மைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இரண்டாவது, ஊர்தோறும் மலையனக் குவிந்துவரும் நகராட்சிக் குப்பைகள். ஸ்வச் பாரத் இயக்கத்தின் சுவாசப்பைகளான கழிப்பறைக்கழிவு நீரும் நகராட்சிக் குப்பை மலைகளும் தூய்மையாகும் வரை ஸ்வச் பாரத் இயக்கம் ஓய்ந்து விடக்கூடாது. சரியானபடி திட்டமிட்டுச் செயல்பட்டால் ஸ்வச் பாரத் இயக்கத்தில் முழுவெற்றி பெறலாம்.Comments