துருக்கியில் மக்கள் புரட்சி!

துருக்கியில் மக்கள் புரட்சி!
துருக்கியில் நடந்த ராணுவப் புரட்சி முயற்சியானது சில மணி நேரங்களிலேயே முறியடிக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. ராணுவத்தின் ஒரு பகுதியினர் மேற்கொண்ட இந்த முயற்சியை முழுக்க முழுக்க மக்கள் ஆதரவுடன் முறியடித்திருக்கிறார் அதிபர் ரிசப் தாயீப் எர்டோகன்.பொதுவாக ஆளும் அரசுக்கு எதிரான மனோபாவம் உள்ள உலகச் சூழ்நிலையில், ஒரு ராணுவப் புரட்சிக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியுடன் வீதிகளில் திரண்டு போராடியது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. துருக்கி மக்கள் ஒரு புரட்சியே படைத்துள்ளனர்.துருக்கியில் ராணுவப் புரட்சி என்பது புதிதான ஒன்றில்லை. இதற்கு முன்னர் நான்கு முறை ராணுவப் புரட்சி நடந்துள்ளது. 1960-இல் ஏற்பட்ட ராணுவப் புரட்சியில், அப்போதைய அதிபர் செலல் பேயர், பிரதமர் அட்னன் மென்டர்ஸ் ஆகியோரை ராணுவம் கைது செய்தது. புரட்சிக்கு தலைமை வகித்த ராணுவ ஜெனரல் செமல் அதிபராகவும், பிரதமராகவும் பதவி வகித்தார்.1971-இல் ராணுவ ஜெனரல் மெம்துஹ் தலைமையில் நடந்த புரட்சியின்போது, பிரதமர் சுலைமான் டெமிரல் பதவி நீக்கப்பட்டார். ஆனால், ராணுவம் நேரடியாக ஆட்சியை நடத்தாமல், ராணுவத்தின் கண்காணிப்பில் ஆட்சி நடைபெற்றது.1980-இல் அட்மிரல் புலன்ட் உலுசு தலைமையில் ராணுவப் புரட்சி நடந்தது. பிரதமர் டெமிரல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 1997-இல் அதிகாரபூர்வமாக ராணுவப் புரட்சி என்று சொல்ல முடியாத ஒரு புரட்சி நடந்தது.அரசுக்கு ராணுவம் பல பரிந்துரைகளை அளித்தது. அதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில், பிரதமர் எர்பாகன் பதவி விலகினார். ஊடகங்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் ஆதரவுடன் நடந்த அந்தப் புரட்சி ஓர் அமைதிப் புரட்சி என்றும் பெயர் பெற்றது.இதுவரை நடந்த ராணுவப் புரட்சியைப்போல் அல்லாமல் இப்போது துருக்கியில் நடந்த புரட்சி முயற்சி பல்வேறு ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது. ராணுவப் புரட்சி எவ்வாறு, எப்போது, ஏன் ஏற்படும் என்கிற பல ஆண்டு ஆய்வு முடிவுகளுக்கு எதிராக இந்தப் புரட்சி முயற்சி நடந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர்.அரசியல் நிபுணரான உல்ஃடெல்டர் என்பவர், ராணுவப் புரட்சி எந்தச் சூழ்நிலையில் நடைபெறும் என தனது ஆய்வு முடிவின்படி பல தகவல்களைத் தந்துள்ளார். அவருடைய ஆய்வின்படி, நாட்டில் வறுமை, பொருளாதாரச் சீர்குலைவு, குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரிப்பு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், ராணுவ அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆகியோரிடையே அரசின் வளத்தை கைப்பற்றுவதில் எழும் போட்டி, ஆட்சிக்கு எதிரான மனநிலை போன்ற சூழ்நிலைகளின்போதுதான் ராணுவப் புரட்சிக்கான வாய்ப்பு ஏற்படுகிறது.ஆனால், துருக்கியில் தற்போதைய சூழலில் பொருளாதாரம் வளர்ந்தும், குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்தும் வருகிறது. அரசுக்கு எதிரான மனநிலையும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.ஒரு கணிப்பின்படி துருக்கியில் வெறும் 2.5 சதவீதமே ராணுவப் புரட்சி ஏற்படக்கூடிய வாய்ப்பும் இருந்ததாம். இச்சூழ்நிலையில் திடீரென ஏற்பட்ட இந்தப் புரட்சி முயற்சி துருக்கி மக்களுக்கே வியப்பான ஒன்று.இந்தப் புரட்சியை முறியடித்ததில் சமூக ஊடகங்களுக்கும் மிகுந்த பங்கு உள்ளது. புரட்சியாளர்கள் அரசு தொலைக்காட்சி நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைப் போல, இணையத்தைக் கவனிக்கத் தவறிவிட்டனர்.அதனால், தனியார் தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் மூலம் அதிபர் எர்டோகன் நாட்டு மக்களைத் தொடர்புகொண்டு அவர்களை புரட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட அழைப்பு விடுத்தார். அதுதான் புரட்சியைப் புரட்டிப் போட்டுவிட்டது.இந்த ராணுவப் புரட்சியின் பின்னணியில் ஃபெதுல்லா குலன் எனும் மதத் தலைவர் இருப்பதாக துருக்கி அரசு குற்றஞ்சாட்டுகிறது. அதேபோல, ஐ.எஸ். இயக்கத்தின் தூண்டுதலும் இருப்பதை மறுக்க முடியாது.அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையின் கூட்டாளியான துருக்கி, இராக், சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான போரில் முக்கியமான பங்கு வகித்து வருகிறது.ஒருவேளை இந்த ராணுவப் புரட்சி வெற்றி பெற்று, ராணுவத்தின் கைக்கு ஆட்சி சென்று, நாட்டில் ஒரு நிலையற்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்தால், ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான போரில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கும்.ராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டதன் மூலம் அதிபர் எர்டோகனின் செல்வாக்கு பெருகியுள்ளது. புரட்சிக்கு உதவியதாக ராணுவ அதிகாரிகள், வீரர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டதுடன் 3,000-க்கும் மேற்பட்ட நீதிபதிகளும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிபர் கூறியுள்ளார். இந்த நேரத்தில்தான் மற்றோர் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.துருக்கி வீதிகளில் ராணுவ பீரங்கிகள் முன் மக்கள் தைரியமாக, ஆவேசமாகப் போராடியது அதிபர் எர்டோகனுக்கு ஆதரவாக மட்டுமல்ல, ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும்தான்.ஆதலால், மிதமிஞ்சிய பலம் கிடைத்துவிட்டது என்பதால், அதிபரின் எதிர்கால நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்கு எதிராக அமைந்துவிடக் கூடாது.ஏனெனில், ராணுவ சர்வாதிகாரம் எவ்வாறு ஒரு மோசமான ஆட்சி அமைப்போ, அதேபோலத்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரமும்.Comments