அரிசி தரும் அரிதான நன்மைகள்

அரிசி தரும் அரிதான நன்மைகள்
இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாட்டு மக்களுக்கும் ஆதார உணவாக இருப்பது அரிசிதான். அரிசி உடலுக்கு தேவையான மாவு சத்தை அளிப்பதுடன், மற்ற முக்கிய விட்டமின் சத்துக்களாக தயாமின், நியாசின், ஃபோலேட், கோலின் போன்றவைகளை கொண்டுள்ளது. இதைத்தவிர மாங்கனீஸ், செலீனியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜின்க் போன்ற தாதுக்களும் இதில் இருக்கிறது.அரிசியில் கார், வாலான், மணக்கத்தை போன்ற குறுவை வகைகளும், சீரகச்சம்பா, மிளகுச்சம்பா, கோரைச்சம்பா, நெல்லூர் சம்பா பாஸ்மதி போன்ற சம்பா ரகங்களும் இருக்கின்றன. எந்த ரக அரிசியாக இருந்தாலும் அதை சாதமாகவோ, மாராகரே சமைத்து சாப்பிடும்போது பல நன்மைகளை தருகிறது. நீரிழிவு நோயோ, உடல் பருமனோ இருப்பவர்கள் அரிசி சாப்பிடக்கூடாது என்பதும் தேவையில்லாத பயமே. கஞ்சியை வடித்த சாதத்தை அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு நன்மையை மட்டுமே அது அளிக்கும். அரிசியை கஞ்சியாகவோ, மாவாக அரைத்தும், அவலாக இடித்தும், பொரியாக பொரித்தும், பொங்கலாக குழைத்தும் சாப்பிடலாம்.
கஞ்சி வகைகல்: உலையில் சாதம் கொதிக்கும் போது அதிலிருந்து ஒரு கரண்டி எடுத்து அதில் வெண்ணையே, நெய்யோ கலந்து சாப்பிட்டால் குடல் வறட்சி, நீர் சுருக்கு, வயிற்றுக்கடுப்பு போன்றவை சரியாகும். சாதம் வடித்த பின்பு கிடைக்கும் கஞ்சியை உடலிலும், தலைமுடிக்கும் தேய்த்துக் குளித்தால் தோலின் வரட்சி நீங்கும். தலைமுடி அடர்த்தியாகவும், மென்மையாகவும் இருக்கும்.ஜுரம் போன்ற நோய் இருப்பவர்களுக்கு புழுங்கலரிசியை வறுத்தோ, ரவையாக உடைத்தோ கஞ்சி காய்ச்சி அதில் சிறிதளவு பாலும் சேர்த்துக் கொடுத்தால் சுலபமாய் ஷீரணமாவதுடன் நோயை தாங்குவதற்கான பலமும் கிடைக்கும்.புழுங்கலரிசியுடன் சிறிதளவு கோதுமை மற்றும் பச்சை பயிரை சேர்த்து வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் உடலின் வலிமை கூடும்.ஏற்கனவே வடித்த சாதத்தை மீண்டும் வடித்து, அதை நன்கு கடைந்து கொடுத்தால் ஜுரம், பசியின்மை, ஷீரணம், சோர்வு, அம்மை நோய்கள் போன்றவற்றிற்கு நல்லது.
அவல்: அரிசியை நெல்லுடன் ஈரமாக்கி வறுத்து தட்டையாக தட்டி பிறகு நெல் உமியை பிரித்தெடுத்து வருவதுதான் அவல். அவலை பச்சையாகவோ, வேக வைத்தோ சாப்பிடலாம். அவலை பால் மற்றும் வெல்லம் சேர்த்தோ, வெல்லம் மற்றும் நெய்யுடன் சேர்த்தே சாப்பிடுவது குழந்தைகளுக்கு நல்ல சத்துணவாக இருக்கும். அவலை வேக வைத்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணிவதுடன் சீதபேதி போன்ற நோய்களுக்கும் நல்லது.
நெல் பொரி: நெல்லை பொரித்து உமியை நீக்கி விட்டால் அதுதான் நெற்பொரி. நெற்பொரி அதிக சத்து சுலபமாய் ஷீரணமாககூடிய ஒன்றாகும். நெல் பொரியை குழைய வேக வைத்து கஞ்சியாக வயிற்றுப் போக்கு மற்றும் கடுமையான ஜுரம் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். வாந்தி, வயிற்றுப்புண், மயக்கம், சோர்வு, வயிற்று போக்கு, விக்கல் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு தயிர், பழச்சாறு போன்வற்றில் நெல் பொரியை கலந்து கொடுக்கலாம்.
அரிசி மாவு: அரிசியை ஊற வைத்து, காயவைத்து பொடியாக்கி பின்பு அதை நன்கு ஆவியில் வேக வைத்து வெயிலில் காய் வைத்துக் கொண்டால் பல மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இதில் செய்யும் இடியாப்பம் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு சுலபமாய் ஷீரணமாகக்கூடியது. அரிசியை ஊற வைத்து அரைத்த மாவுடன் உளுந்து மாவு கலந்து தயாரிக்கும் இட்லி தோசை போன்றவை நல்ல சத்துள்ள ஆரோக்கியமான சரிவிகித உணவாகும். வாதம், பித்தம், சிலோத்தமம் ஆகிய மூன்று தோஷங்களையும் போக்கக்கூடிய ஆற்றல் ஆவியில் வேக வைக்கும் இட்லிக்கு இருக்கிறது. அரிசி மாவு புட்டு உடலுக்கு வலிமையை தருகிறது.Comments